நான் கடவுள் பாலாவின் நான்காவது படம். யாரும் தொட்டிராத களம், கற்பனை செய்யாத கதாபாத்திரங்கள் பாலாவின் அடையாளம். இரண்டும் இதிலும் உண்டு.
நித்தம் வந்து குவியும் பிணங்கள், சிதை நெருப்பில் தவம் இருக்கும் அஹோரி சாதுக்கள், பொங்கி பிரவாகித்துவரும் கங்கை என பலரும் கண்டிராத வடபுலத்து காசி மாநகரம். ஊனமுற்றவர்கள், ஊனமாக்கப்பட்டவர்கள், மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், சிறுவர்கள், அனாதையாக்கப்பட்ட பெரியவர்கள் என பிச்சையெடுத்துப் பிழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தென்புலத்து விளிம்புநிலை மனிதர்கள். இந்த இரு உலகங்களை இணைக்கும் ருத்ரனின் நூலிழை கதை.
webdunia photo
WD
ஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என ஜோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். பதினான்கு வருட நீண்ட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள் கடலில் எரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனை கண்டுபிடிக்கிறார். ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அஹோரி சாது. ஊருக்கு வர மறுப்பவனை, அஹோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர் என உபதேசம் சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குரு.
காசியிலிருந்து கதை தென்தமிழ் நாட்டுக்கு வருகிறது. உடல் ஊனமுற்றவர்களையும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், அனாதைகளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெரியாத ஹம்சவல்லி.
குரூபியான ஒருவனுக்கு அவளை விற்க தாண்டவன் முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளை காப்பாற்றுகிறார்கள். அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில. அதன் பிறகு நடப்பது அதர்மத்தின் மீது அஹோரி ஆடும் ருத்ர தாண்டவம்.
கங்கைக்கு இணையாக பொங்கி வருகிறது இளையராஜாவின் ஓம் சிவயோகம். சில இடங்களில் ஓடையின் சலசலப்பு, சில இடங்களில் அருவியின் பேரோலம், பல இடங்களில் ஆழ் நதியின் அமைதி. சப்த ஸ்வரங்களில் சதிராடியிருக்கிறார் இசைஞானி. ருத்ரனின் உக்கிரத்தில் பாதி இசையின் கொடை.
ருத்ரனாக ஆர்யா. தலைகீழாக நின்று தவம் செய்யும் முதல் காட்சியிலேயே மனதில் சம்மணம் போட்டு உட்கார்கிறது தோற்றம். பேச்சு குறைவு, உக்கிரம் அதிகம். பத்து மாதம் சுமந்து பெற்ற உரிமையில் தாய் மகனை மலைக்கோயில் விட்டு வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள். ஐயிரண்டு மாதம் எனத் தொடங்கி நறுக்கென்று நாலேவரி பாடல். தாய்ப் பாசத்துக்கெல்லாம் கரைக்க முடியாத உருக்கு தனது மகன் என்பதை உணர்கிறாள். கெட்டவர்களை பார்த்ததும் ருத்ரன் கொள்ளும் உக்கிரம் சிவதாண்டவம்.
இதுவரை தமிழ் சினிமா கண்டிராத பிச்சைக்காரர்களின் உலகம் ஜெயமோகனின் ஏழாவது உலகம் நாவலிலிருந்து எடுத்தது. அங்ககீனர்களும், மூளை வளர்ச்சி குறைந்தவர்களும் நிறைந்த அந்த உலகம் சமூகத்தின் குப்பைத் தொட்டி. இதுதாண்டா சமூகத்தின் நிஜமுகம் என காட்டியிருக்கிறார் பாலா. ஆகையால், கலைக்கு பதில் கோபம் தூக்கல். இவர்களின் நடிப்பில் செயற்கையின் சிறு துணுக்கைக்கூட காண முடியாதது பாலாவின் மூன்று வருட உழைப்பின் விளைவு.
போதையானதும் புத்தி தெளிந்து குற்றவுணர்வில் குமையும் தாண்டவனின் கையாள் முருகன் (கிருஷ்ணமூர்த்தி), அவரது எடுபிடியாக வரும் திருநங்கை, அனாதை பெரியவர் (கவிஞர் விக்ரமாதித்யன்), கொடூரத்தின் முழு உருவமாக வரும் தாண்டவன் (ராஜேந்திரன்) அனைவரும் உயிரோட்டமான கதாபாத்திரங்கள்.
webdunia photo
WD
ஹம்சவல்லியாக கண் தெரியாத வேடத்தில் பூஜா. முற்றிலும் புதிய வேடம். உடல்மொழியில் அவ்வப்போது தென்படும் செயற்கையின் நிழலை தவிர்த்தால், அற்புதமான நடிப்பு. படத்தின் இறுதியில் கோரமான முகத்துடன் அவரை பேசவிட்டிருப்பது இம்சை, அவருக்கும் நமக்கும். முடிவு சர்ச்சைக்குரிய கருணை கொலை.
காசியை தனது கேமராவுக்குள் சுருட்டியிருக்கிறார், ஆர்தர் வில்சன். இருளை இருளாகவே பார்த்து எத்தனை நாட்களாகிறது. பாதள அறையில் கசிந்துவரும் இருளும் ஒளியுமான வெளிச்சம் எதார்த்தத்தின் சதவீதத்தை கூட்டுகிறது. சண்டைக் காட்சிகளில் கேமராவும், படத் தொகுப்பும் கைகோர்த்திருக்கிறது.
படத்தின் ஒவ்வொரு வசனத்திலும் கந்தக நெடி. சில மத்தாப்பாக சொரிகிறது. சில பட்டாசாக வெடிக்கிறது. இரண்டடி அக்காவும், அந்த சின்னப் பையனும் (இளைஞன்?) உதிர்க்கிற ஒவ்வொரு வார்த்தையிலும் அங்கதத்தின் சுவை. சமூகத்தின் மீதான நையாண்டியும் நகைச்சுவையுடனே வந்து விழுகிறது. எம்.ஜி.ஆர். வேஷத்தில் இருப்பவர் தத்துவப் பாடல் பாடுகிறார். சிவாஜி கெட்டப்பில் இருப்பவர் சொல்கிறார், "பாட்டை கேட்டு ஓட்டை போட்டான். எவனாவது திருந்தினானா?."
நிறையைப் போல நெருடல்களும் உண்டு. காட்டுவதைவிட உணர்த்துவதுதான் ஒரு கலைஞனின் சவால். பிச்சைக்காரர்கள் மீதான வன்முறை ஒரு கட்டத்துக்குமேல் எதையும் உணர்த்தாத வெற்று காட்சிகளாகி விடுகிறது. ஹம்சவல்லி ருத்ரனை சந்தித்த பிறகு வரும் காட்சிகள் நந்தா, பிதாமகன் படங்களின் பழி வாங்கும் காட்சிகளை ஒத்திருக்கிறது. அதேபோல் காவல் நிலைய ஆடலும் பாடலும் பிதாமகனில் வரும் சிம்ரன் பாடலின் நகல்.
ஏழாவது உலகம் நாவலின் சிறப்பு, பிச்சைக்காரர்களின் அவலத்துக்கு இணையாக அவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறவனின் சொந்த வாழ்க்கையும் அலைக்கழிப்பு நிறைந்ததாக இருக்கும். இது திரைப்படத்தில் இல்லை. இங்கு அவன் நாம் எத்தனையோ திரைப்படங்களில் பார்த்து சலித்த ஒரு சினிமா வில்லன், அவ்வளவே.
சொந்தக் குரலில் பேசும் பூஜா, பாடத்தொடங்கியதும் குரல் பின்னணி பாடகியின் பிசிறில்லாத குரலுக்கு மாறிவிடுகிறது. பழைய பாடல்களை பாடும்போது பூஜாவின் சொந்தக் குரலையே பயன்படுத்தியிருக்கலாம்.
கெட்டவர்களை பார்வையாலே தெரிந்து கொள்ளும் ருத்ரன், காவல்துறை அதிகாரியை ஒன்றும் செய்யாதது ஏன்? தாண்டவன் போன்றவர்களுக்கு ஆதரவும், ஆட்களும் சப்ளை செய்யும் அவனுக்கு தண்டனை கிடையாதா? அரசு அதிகாரி என்பதால் அஹோரிக்கே பயமா இல்லை சலுகையா?
சர்ச்சைக்கான முகாந்திரமும் உண்டு. ருத்ரனைப் பார்த்து நீதிபதி, இவங்களை ஒண்ணும் பண்ண முடியாது. சி.எம். தலையை கொண்டு வர்றவங்களுக்கு அன்பளிப்புன்னு அறிவிச்ச சாமியாரை என்ன பண்ண முடிஞ்சது என்று கேட்கிறார். இதை, தவறு என்ற கோணத்திலும் எடுத்துக் கொள்ளலாம். தெனாவட்டு என்ற கோணத்தில் சர்ச்சை வரைக்கும் இழுக்கலாம். மூன்று கொலைகள் செய்யும் ருத்ரன் எந்த தண்டனையும் இல்லாமல் காசிக்கு செல்வதால், தெனாவட்டுக்கே அதிக சாத்தியமுள்ளது.
சாமியார்களை கும்பிடுகிற, பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்கிற பெரும்பான்மையான - அப்பர், மிடில் மற்றும் லோயர் கிளாஸ் - மக்கள் படத்தில் சுத்தமாக இல்லை. ஐரனி என்னவென்றால் இந்தப் படத்தை பார்க்கிற, அதன் வெற்றியை தீர்மானிக்கிற பெரும்பான்மை கூட்டம் அது.
தாங்கள் இல்லாத படத்தைப் பார்த்து பிடிக்கவில்லை என்று அவர்கள் கூறலாம். அல்லது, நமக்கு தெரியாத இப்படியொரு உலகமா என ஆச்சரியமும் படலாம். எதுவாக இருப்பினும் இந்த இரு விமர்சனங்களுக்கும் வெளியே இருக்கிறது, நான் கடவுள்.