காதல்னா சும்மா இல்ல

ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், முதல் படத்திற்குப் பிறகு வெற்றியை ருசிக்காத ரவி கிருஷ்ணா, தமிழ் ரசிகர்கள் மறந்துபோன கமாலினி முகர்‌ஜி. பிரபலமில்லாத இந்த நால்வர் இணைந்து பார்க்கிற மாதி‌ரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின் குருட்டு அதிர்ஷ்டம்.

webdunia photoWD
உலகமே நான்தான் என்று நினைக்கும் காதலன். உலகத்திற்காக‌த்தான் நான் என்று வாழும் காதலி. குணங்கள் எதிரெதிர் திசையில் இருப்பது தெ‌ரிந்ததும் காதலனை விட்டுப் பி‌ரிந்து செல்கிறார் காதலி. பி‌ரிவின் வலி உணரும் காதலன் அவளைத் தேடி புறப்படுகிறான். அந்த நெடும் பயணம், நான் என்ற அவனது அகந்தையை நாம் என்ற சிந்தையாக மாற்றுகிறது. அகந்தை களைந்த அவன் காதலியை கண்டுபிடித்தானா? காதலி அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாளா? உல்லாச பயணத்தின் உற்சாகத்துடன் பதில் சொல்கிறது, படம்.

தெலுங்கு காம்யம் படத்தை தமிழ்ப்படுத்துகிறேன் என்ற வழக்கமான ஃபார்முலாவுக்குள் படத்தை அடைக்காததற்கு முதலில் இயக்குனருக்கு சபாஷ் சொல்லியாக வேண்டும். சர்வானந்த் தமிழுக்கு கிடைத்திருக்கும் நல்வரவு. தனது பயணத்தின்போது ஏற்படும் சம்பவங்களிலிருந்து படிப்படியாக வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் சர்வானந்தின் பாத்திரம் புத்தரை நினைவுப்படுத்துகிறது.

கமாலினியிடம் முதல் படத்தின் பளபளப்பு மிஸ்ஸிங். நடிப்பில் குறைவில்லாத அதே மிடுக்கு. காதலனின் குணம் தெ‌ரிந்து விலகுமிடத்தில் கவனிக்க வைக்கிறார்.

சர்வானந்தின் வழித் துணையாக சேரும் ரவி கிருஷ்ணா படம் நெடுக பட்டையை கிளப்புகிறார். அவ‌ரின் டயலாக் டெலிவ‌ரி டைமிங் அபாரம். வெட்டி வேலுவாக ரசிகர்களின் மனதில் கெட்டியாக இடம்பிடிக்கிறார். அவருடன் எம்.எஸ். பாஸ்கர் கூட்டணி சேரும் பத்து நிமிடங்கள் திரையரங்கில் பட்டாசு சத்தம். ஹைடெசிபல் காமெடியன்கள் கவனிக்க வேண்டிய பாடம்.

மூன்று பேர் இசையமைத்திருக்கிறார்கள். முக்கனி என்று சொல்ல முடியாத சுமார் ரகம். ஒளிப்பதிவு கதையோடு இணைந்து வருவது படத்தின் மீதான ஈர்ப்பை குறையாமல் காப்பாற்றுகிறது. படத்தின் முக்கியமான பலம் வசனங்கள்.

வித்தியாசமான கதை நேர்த்தியான திரைக்கதையால் மனதுக்கு நெருக்கமாகிவிடுகிறது.