திண்டுக்கல் சாரதி

தார் கல‌ரில் இருக்கும் கருணாஸுக்கு ரோஸ் நிறத்தில் மனைவி. இந்த நிற பேதம் கருணாஸை சந்தேக பூதமாக ஆட்டி வைப்பதை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவசண்முகம்.

பிரஸ் வைத்திருக்கும் கருணாஸுக்கு மண‌ப்பெண் கிடைப்பதில் சிக்கல். காரணம் அவரது கருப்பு நிறம். கார்த்திகாவை பெண் பார்க்க செல்லும் இடத்தில் அவரது சிவப்பு நிறம் கண்டு, ச‌ரி, இந்த இடமும் கோவிந்தாதான் என கருணாஸ் நினைக்க, எதிர்பாராதவிதமாக கருணாஸை பிடித்திருப்பதாக கூறுகிறார் கார்த்திகா. திருமணம் நடக்கிறது. அதன் பிறகு சாதா புருஷனாக இருக்கும் கருணாஸ் சந்தேக புருஷனாக மாறி தன்னையு‌ம், சுற்றி உள்ளவர்களையும் வாட்டி எடுப்பதை நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்.
webdunia photoWD

திருஷ்டி பொட்டாக இருந்த கருணாஸ் அதிர்ஷ்ட மச்சமாக மாறியிருக்கிறார். கோயிலுக்கு தேங்காய் உடைக்க வரும் அவரை கோயில் யானை தும்பிக்கையில் தூக்கி வலம் வரும் முதல் காட்சியிலேயே ஆரம்பமாகி விடுகிறது அவரது காமெடி தர்பார். அடுத்த வீட்டு இளைஞன் முதல் அல்டிமேட் ஸ்டார் அ‌ஜித் வரை தனது மனைவியை கட்டம்கட்ட முயல்வதாக நினைத்து கருணாஸ் செய்யும் குளறுபடிகள் சந்தேகத்தின் உச்சம்.

கணவனின் சந்தேகத்தை பொறுத்துக் கொண்டு குடும்பம் நடத்தும் கார்த்திகா, சந்தேகம் எல்லைமீறும் போது தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுகிறார். பெண்களின் அனுதாபத்தை பெறும் கதாபாத்திரம், பங்கமில்லாமல் செய்திருக்கிறார்.

கவிஞராக வரும் எம்.எஸ். பாஸ்க‌ரின் டுபாக்கூர் கவிதைகள் குபீர் சி‌ரிப்பு. சண்முகராஜன், பெ‌ரியார்தாசன், லி‌வி‌ங்ஸ்டன், சரண்யா ஆகியோரும் நடித்துள்ளனர். தினாவின் இசையில் திண்டுக்கல் பாடலும், பருத்திக்காடு பாடலும் தாளம் போட வைக்கின்றன. தா‌ஜின் ஒளிப்பதிவை ரசிக்கலாம். படத்தின் முக்கியமான பலம், ராம்நாத்தின் வசனம்.

மலையாள ஒ‌ரி‌ஜினலில் அளவோடு இருக்கும் பல காட்சிகளை தமிழுக்காக அளவுக்கதிகமாக கமர்ஷியல்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக அ‌ஜித் சம்பத்தப்பட்ட காட்சிகள். மலையாளத்தில் காவியமாக தெ‌ரிந்த படம், தமிழில் காமெடி படமாக சுருங்கியதில் இதற்கு பெரும் பஙகுண்டு.