மகேஷ் சரண்யா மற்றும் பலர் - ‌‌விம‌ர்சன‌ம்

குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதையை கூற முயன்றிருக்கிறார், இயக்குனர் பி.வி. ரவி. கிளைமாக்ஸை நோக்கி பாய்ந்து செல்லும் திரைக்கதை என்பதால் மற்ற காட்சிகளில் அழுத்தம் மிஸ்ஸிங்.

கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார பயல் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தியை, தங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா என்பதை அறிய ஊருக்கு அழைக்கிறார்கள். மகன் திருமணத்துடன் மகளின் திருமணத்தையும் நடத்த சம்பந்தி வீட்டினர் முடிவு செய்கின்றனர். கல்யாண நாள் அன்று சம்பந்தி வீட்டினர் பார்த்திருந்த மாப்பிள்ளை ஓடி விடுகிறான். திருமணம் நின்று விடாமல் இருக்க ஷக்தியை திடீர் மாப்பிள்ளையாக்க முயற்சிக்கின்றனர்.
webdunia photoWD

பட்டணத்தில் சந்தியாவுடன் காதலில் இருக்கும் ஷக்தி அதற்கு மறுத்து விடுகிறார். இதனால் அவரது தங்கையின் திருமணமும் நின்று விடுகிறது. தங்கைக்காக காதலை தியாகம் பண்ண மறுக்கும் ஷக்தியை அனைவரும் வெறுக்கிறார்கள். கிளைமாக்ஸில் அதற்கான காரணத்தை ஷக்தி கூறுகிறார். பழைய பாசத்துடன் குடும்பம் நெருங்கி வரும்போது ஷக்தி விலகி போகிறார். ஏன் என்பது படத்தில் இயக்குனர் வைத்திருக்கும் எதிர்பாராத திருப்பம்.

ி‌ரித்த முகமாக வளைய வருவதுதான் ஷக்தியின் பிரதான வேலை. குடும்பத்தினர் வெறுக்கும்போது நடிக்க முயற்சிக்கிறார். காதலன், பாசக்கார அண்ணன் என சினிமாவின் மோல்ட் செய்யப்பட்ட கதாபாத்திரத்தில் ஒரு எல்லைக்குமேல் ஷக்தியால் ஈர்க்க முடியவில்லை. இதே பிரச்சனைதான் சந்தியாவுக்கும். காதல் காட்சிகளில் நாடகம் பார்ககும் உணர்வு.

தங்கையாக வரும் சரண்யா மோகன் உடனே விழித்துக் கொள்வது நல்லது. வெட்கம் கலந்த துடுக்குத்தனமான நடிப்பை ‌ரிப்பீட் செய்வது, நன்றாக இருந்தாலும் ஏற்கனவே பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. ஷக்தி தனது காதலை வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லும் விதத்தில் மனதில் நிற்கிறார் இயக்குனர். ஏதிர்பார்ப்பை எகிற வைத்து இறுதியில் ரத்தம், கொலை என திசைமாறுவது ஏமாற்றம்.

வித்யாசாக‌ரின் இசை திரையரங்கைவிட்டு வெளியேறியதும் ஆவியாகி விடுகிறது. ஒளிப்பதிவு... சராச‌ரிக்கும் கீழ். அண்ணனின் காதலுக்காக திருமணத்தை தூக்கியெறிந்திருக்க வேண்டாமா சரண்யா மோகன்? திரைக்கதை சறுக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

ஏற்கனவே பலர் ஓட்டிய சென்டிமெண்ட் பாதையில் காருக்கு பதில் ஏரோட்டியிருக்கிறார் இயக்குனர். போராகி திரும்புகிறார்கள் ரசிகர்கள்.