காத்தவராயன் - விமர்சனம்!

வியாழன், 5 ஜூன் 2008 (20:00 IST)
'சரக்கு' மேட்டரை சமூக அக்கறையுடன் முயன்றிருக்கிறார் சலங்கை துரை. முயற்சி ஊறுகாய் அளவுக்கே பயனளித்திருப்பதுதான் வேதனை.

webdunia photoWD
சாராயம் காய்ச்சுவதை சமூக சேவையாக கருதும் கரண். அவருக்கும் அதே ஊரில் சாராயம் காய்ச்சும் தண்டபாணிக்கும் தொழில் பகை. அவ்வப்போது புகையும் இந்த பகை பிரமாண்டமாகப் போகிறது என்று பார்த்தால், சீனில் சேரன் எக்ஸ்பிரஸாக நுழைகிறார், மாணவியான விதிஷா.

சாராய வியாபாரி கரண் விதிஷாவால் ஜெயிலுக்குப் போகிறார். விதிஷாவை பழிவாங்கும் நோக்கத்தோடு ஜெயிலிலிருந்து வரும் கரண், அதற்கு நேர்மாறாக விதிஷாவை காப்பாற்றும் சூழல் ஏற்படுகிறது. கடைசியில் எல்லோரும் எதிர்பார்த்த வழக்கமான சுபம்.

கள்ளச் சாராயம் காய்ச்சும் கரடு முரடு கேரக்டர் கரணுக்கு, போதைக்கு வக்காலத்து வாங்கி அவ்வப்போது அவர் விடும் அலப்பறை செம ரவுசு. விதிஷாவுக்கு நடிக்க சந்தர்ப்பம் உள்ள கேரக்டர். போதைப் பொருள் ஆசாமி அலெக்ஸை எதிர்க்கப் போய் எதிர்பாராமல் அவரே சிறைக்குப் போவது இரண்டாம் பாதியை இழுக்க உதவுகிறது. கரணுக்கும் இவருக்கும் நடுவில் இருப்பது காதலா இல்லை மோதலா என்ற குழப்பம் தீர்வதற்குள் இரண்டு டூயட் ஓடிப்போகிறது.

பாட்டியின் இன்சூரன்ஸ் மூன்று லட்சத்தை கந்து வட்டிக்கு விட்டு கண்டவர்களிடமெல்லாம் மொத்து வாங்குகிறார் வடிவேலு. பார்த்து பழகிய காமெடி என்றாலும் அவர் காட்டும் சில்மிஷத்துக்கு சிரித்து வைக்க வேண்டியுள்ளது.

சுந்தரா டிராவல்ஸ் ராதா கேரக்டர் சொதப்பல். விலகிய மாராப்பும் விக்கல் எடுக்கும் குரலுமாக அவர் கரணை காணும் போதெல்லாம் காலைக் காட்சி நடிகைபோல் சிணுங்குவது எரிச்சல்.

கரண் போதை ஆசாமிகளை போட்டுத்தள்ளி, விதிஷாவை மீட்கும்போது, தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் கச்சிதமாக பொருந்தி வருகிறது படம்.

படத்தின் எண்ணிக்கையை குறைக்க சொல்ல வைக்கும் இசை (ஸ்ரீகாந்த் தேவா). எண்ணிக்கையை அதிகரிக்கச் சொல்லும் ஒளிப்பதிவு (கார்த்திக் ராஜா).

சலங்கை துரையின் சாராய கதையில் கொஞ்சம் போதை... நிறைய தலைவலி!