நேபாளி - விமர்சனம்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (15:47 IST)
webdunia photoWD
மீரா ஜாஸ்மினை காதலித்து திருமணம் செய்கிறார் பரத். காமுகன் ஒருவனால் மீரா ஜாஸ்மின் இறக்க நேரிடுகிறது. காமுகனை பழிவாங்கும் பரத் ஜெயிலுக்குப் போகிறார். திரும்பி வருகிறவர் நேபாளியாக மாறுவேடம் போட்டு சிட்டியில் உள்ள காமுகர்களை சிரிஞ்ச் வைத்தே கொல்கிறார்.

தமிழ் சினிமாவின் அஜெண்டாவுக்குள் அடங்கிப் போகும் இந்த நேர்கோட்டுக் கதையை மூன்றாக கூறுபோட்டிருக்கிறார் இயக்குனர் வி.இஸட். துரை. அதனால், ஏன் எதற்கு யார் எப்படி என நிறைய கேள்விகள். காரை ஓட்டிக் கொண்டே பரத் காரணத்தைச் சொல்லும்போது திரி பிடுங்கப்பட்ட தீபமாகிறது படம்.

பரத்துக்கு மூன்று கெட்டப்புகள். உள்ளேன் ஐயா நடிகர்களுக்கு மத்தியில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். அந்த நேபாளி இழுத்து இழுத்துப் பேசும்போது நமக்கு சுவாசம் சிக்கிக்கொள்கிறது.

webdunia photoWD
மீரா ஜாஸ்மின் காதலிக்கிறார், கல்யாணம் செய்கிறார், காமுகனால் கற்பு பறிக்கப்படும் முன் தன்னைத்தானே சாகடித்துக் கொள்கிறார். (கதாநாயகி என்றால் உயிரைப் பறித்தாவது அவர்கள் கற்பை இயக்குனர்கள் காப்பாற்றும் மர்மம் தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று).

சாதாரணமாக நடந்து செல்கிற நான்கு நொடி காட்சியில் ராம்பிங் ஷாட், ஸ்லோமோஷன், ஃபோட்டோ ஷாட் என இருக்கிற எல்லாவற்றையும் திணிக்கிறார்கள். போதாதற்கு, ஹாலிவுட் ஆக்சன் படங்களில் ஒரு காட்சி முடிந்ததும் திரை வெண்மையாகி அடுத்தக் காட்சி தொடங்கும் யுக்தியை படம் நெடுக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் ஐந்து விநாடிக்கு ஒரு முறை. கண்கள் கதறுகின்றன.

ஐட்டியுடன் வரும் போலீஸ் கண்றாவி என்றால் புலன் விசாரணை செய்யும் போலீஸ் காமெடி. அதிலும் அந்த இளம் போலீஸ் அதிகாரி. எப்போதும் தம் கட்டிய தோற்றம். ஒவ்வொரு முறை கொலைகாரனை தவறவிடும் போதும் கையை விரித்து ஷிட் என்கிறார். எத்தனை முறை அந்த வார்த்தையை பிரயோகிக்கிறார் என்று போட்டி வைக்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவா அனைத்துவகை இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறார். அனேகமாக எல்லா காட்சியிலும்.

பரத்தின் நோக்கம் தப்பு செய்யும் அனைவரையும் தேடித் தேடி கொல்வது. த்ரில்லுக்காக இந்த கொலைகளை அவர் செய்யவில்லை. பிறகு ஏன் போலீசுக்கு ஒவ்வொரு முறையும் ஃபோட்டோவும், க்ளூவும் அனுப்ப வேண்டும்?

பறவைகளை படம் பிடிக்க வைக்கும் கேமராவில் கொலை செய்யும் பரத் பதிவாகும் காட்சி, டோனிஸ்காட் இயக்கத்தில் வில் ஸ்மித் நடித்த 'எனிமி ·ப் தி ஸ்டேட்' படத்தில் ஏற்கனவே இடம் பெற்றது.

படத்தின் மூன்று பகுதிகளில் ஜெயில் காட்சிகள் மட்டுமே ஆறுதல். பரத்தின் நடிப்பையும், கதையை மூன்றாக பிரித்த யுக்தியையும் நீக்கிவிட்டால், நேபாளி நிராயுதபாணி!