அஞ்சாதே பட விமர்சனம்!
திங்கள், 18 பிப்ரவரி 2008 (17:19 IST)
அஞ்சாதேயின் ஒருவரி கதை, வழக்கமான தாதா கதையோ என நினைக்க வைக்கும். ஆனால், குற்றவாளிகளின் உலகை மிஷ்கின் அணுகியிருக்கும் விதம் தமிழ் சினிமாவுக்கு புதிது.
நரேனும், அஜ்மலும் நண்பர்கள். நரேன் அடிதடி பார்ட்டி. அஜ்மல் எஸ்.ஐ. கனவோடு படிப்பு, உடற்பயிற்சி என இருப்பவர். போலீஸ் தேர்வில் சிபாரிசில் நரேன் ஜெயிக்க, அஜ்மல் தோற்கிறார்.
தோல்வி நண்பன் மீது குரோதமாக மாறுகிறது. குடி, அடிதடி என பாதை மாறுகிறார் அஜ்மல். அவரை எப்படியும் திருத்துவது என தேடித் தேடி போகிறார் நரேன். இந்த நேரத்தில் அஜ்மலை, பெண்களை கடத்தி பணம் பறிக்கும் வேலைக்கு பயன்படுத்திக் கொள்கிறார் பிரசன்னா. அதிலிருந்து நண்பனைக் காப்பாற்ற நரேன் போராட, இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
முதன் முறையாக போலீஸ் வேலைக்குச் செல்லும் இளைஞன் எதிர் கொள்ளும் அவமானங்கள், தடுமாற்றங்கள் அனைத்தையும் நரேன் கதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின்.
குர்தா, நீண்ட தலைமுடி, மணிகட்டை முகத்துக்கு நேராக உயர்த்தி மணி பார்க்கும் மேனரிசம் என தோற்றத்திலும் நடிப்பிலும் அசத்துகிறார் பிரசன்னா.
அஜ்மல் கிளீன் ஷேவிலிருந்து தாடி மீசைக்கு மாறிய பிறகு அவர் நடிப்பிலும் மாற்றம். நண்பனை வெறுப்பதும், பிரசன்னாவின் தவறுகளுக்கு துணை போக முடியாமல் தவிப்பது, என கச்சிதமான நடிப்பு.
அஜ்மலின் தங்கையாக வரும் விஜயலட்சுமி, வில்லனாக வரும் பாண்டியராஜன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கரன், லிவிங்ஸ்டன் என அனைவரும் யதார்த்தம் மீறாமல் நடித்திருக்கிறார்கள்.
குற்றவாளிகளின் குற்றத்தை மட்டும் காட்டாமல், அவர்களின் குற்றப் பின்னணியையும் காட்ட முயன்றிருக்கிறார் மிஷ்கின். பெண்களை கடத்தும் கால் ஊனமான அடியாளுக்கு குழந்தை, குடும்பம் குறித்த கவலை அவனது கண்களில் தொக்கி நிற்கிறது. கால்களை மட்டுமே திரையில் காண்பித்து காட்சியை விளக்குவது, படத்தில் பெரும்பகுதி வரும் மொட்டை அடியாளின் முகத்தை இறுதிவரை பார்வையாளனுக்கு காட்டாமல் இருப்பது என படம் முழுக்க மிஷ்கினின் திறமை பளிச்சிடுகிறது.
என்கவுண்டர் போலீஸாக வரும் பொன்வண்ணன், சாகும்போதும், நான் செத்திடுவேனா என்று அதட்டலாக கேட்கும் கையில்லாத நண்பன் என நினைவில் தங்கும் கேரக்டர்கள் நிறைய.
கற்பழிப்புகளை காண்பிக்காமலே அதன் வலியைச் சொல்ல இயக்குனருக்கு தெரிந்திருக்கிறது.
இறுக்கமான கதைக்கேற்ற மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். கிளைமாக்ஸ் காட்சி கேமரா கவிதை.
சுந்தர் சி.பாபுக்கு எந்த இடத்தை இசையில்லாமல் மெளனமாக விட வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. பாடல்களை விட பின்னணி இசையில் பிரமாதப்படுத்துகிறார்.
அஞ்சாதே மிஷ்கினின் மகுடத்தில் இன்னொரு இறகு!