ஒன்பது ரூபாய் நோட்டு - ‌விம‌ர்சன‌ம்

வெள்ளி, 30 நவம்பர் 2007 (11:31 IST)
ஒரு சிறந்த கதையை சினிமா மொழியில் ஒ‌ன்பது ரூபா‌ய் நோ‌ட்டு பட‌த்‌தி‌ன் மூலமாக சிறப்பாகச் சொல்லியிருக்‌கிறா‌ர் தங்சர்பச்சா‌ன்.

சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணி, சிவசங்கர், சூர்யகாந்த், நிதிஷ்குமார் (அறிமுகம்) இன்பநிலா (அறிமுகம்) `அழகி ' சதிஷ் நடிப்பில் உருவான படம். பரத்வாஜ் இசையில் கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் தங்கர்பச்சான். தயாரிப்பு இந்தியன் சினிமா பேக்டரி (பி) லிட்.

webdunia photoWD
தன் மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிப்பவர் மாதவா படையாட்சி. பூமியையே சாமியாக நினைத்து வாழ்பவர். மண்ணில் விளைவதை முடிந்தவரை பிறர்க்கும் கொடுப்பவர். அவருக்கு பிள்ளைகள் பிறந்து திருமணமாகி ஒரு வருத்தத்தில் அப்படியே போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் மனைவி வேலாயியுடன்.

சுய கெளரவத்தையும் வீம்பையும் மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலும் செய்ய முடியாதே. தன் நண்பன் ஹாஜாபாய் உதவியுடன் கிடை ஆடு போட்டு வளரத்து தனியே வசிக்கிறார்கள் படையாட்சியும் வேலாயியும். அதன்பிறகு அவர்கள் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டமும் பாசப் போராட்டமும் மீதிக்கதை. இந்தக் கதையை உலக சினிமா தரத்தில் தமிழ் மக்களின் மண், மொழி, கலாச்சார யதார்த்தத்தில் அனைத்து நேர்த்திகளுடனும் உருவாக்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.

ஒரு பேருந்துப் பயணத்தில் ஆரம்பிக்கிறது கதை, உடன் வருகிற தன் ஊர்க்கார பெரியவரின் கதையைக் கேட்கிறான் ஓர் இளைஞன். அவன்தான் சதீஷ். கதை சொல்பவர் மாதவா படையாட்சி. அதாவது சத்யராஜ். சென்னையில் சொல்ல ஆரம்பிக்கிற கதை செல்ல வேண்டிய இடமான பத்திரக் கோட்டை சென்று சேர்ந்தவுடன் சொல்ல வேண்டியவை அனைத்தும் சொல்லப்பட்டு பேருந்து பயணமாகிற ஆறு மணி நேரத்தில் முடீந்து க்ளைமாக்ஸ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்ட உத்தி ரசிக்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

கதைக்களமாக முந்திரிக்காடு, பலா மரத் தோப்பு, எள் வயல் என்று அந்தந்த இடங்களுக்கே நம்மை அழைத்து அமர வைத்து கதை சொல்கிற அழகு நயம். வாழ்க்கையை விட விறுவிறுப்பான அம்சம் எதுவுமில்லை. வாழ்க்கையை விட அழகான, ஆபத்தான, மர்மங்கள் நிறைந்தது எதுவுமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கையின் பல பக்கங்களை நமக்கு அதன் அசல் நெடியோடு புரட்டிக் காட்டியிருக்கிறார் தங்கர்.

மாதவா படையாட்சிதான் கதையின் நாயகன் என்றாலும் அவர், அவரது குடும்பம், அவரது மண், மக்கள், மரம், செடி, கொடி புல் பூண்டு எல்லாமும் பதிவாகி நம்மை ஏதேதோ செய்கின்றன. குடும்ப அமைப்பு எந்த கட்டமைப்பில் உருவாக்கப்படுகிறது. அது எதனால் சரிய ஆரம்பிக்கிறது என்பதை அழகாக படமாகச் சொல்லியிருக்கிறார்.

இதில் வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் நாமாக - நம்மில் ஒருவராக இருப்பவர்கள். அவர்கள் இந்த மண்ணோடு மண்ணாக வேரடி மண்ணாக புதைந்து கலந்து கிடப்பவர்கள்.

மாதவா படையாட்சியாக வாழ்ந்திருக்கும் சத்யராஜ் நடிப்பில் பல சிகரங்களைத் தொட்டிருக்கிறார். உழைப்பின் சின்னமாக மட்டும் வாழ்ந்த ஒருவராக மட்டுமல்ல இறந்தபிறகும் பிணமாகவும் சில நிமிடங்கள் நடித்து அசத்தியுள்ளார்.

webdunia photoWD
தேசிய விருது பெற்ற அர்ச்சனா இதில் வேலாயியாக வருகிறார். நடிப்பின் உச்சத்தை தொடும் அதிர்ஷ்டம் அர்ச்சனாவுக்கு நிறையவே கிடைத்து இருக்கிறது. ஒரு தாயின் சுய மரியாதையை மட்டுமல்ல பாசத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஹாஜாபாயாக வரும் நாசர் அந்தப் பாத்திரத்தை நன்கு சீரணித்து இருக்கிறார். மனைவி கமீலாவாக வரும் ரோகிணியும் நினைவில் நிற்கிறார்.

தண்டபாணியாக நடித்திருக்கும் டான்ஸ்மாஸ்டர் சிவங்கர், கோவணம் கட்டிய வில்லன். மனிதர் கலக்கிவிட்டார். பள்ளிக் கூடத்தானாக வரும் சூர்யகாந்த், ராமலிங்கமாக வரும் நிதிஷ்குமார் இருவரும் யதார்த்தம். யாரிந்த இன்பநிலா. புதுமுகமாம் நம்பமுடியவில்லை. இது சினிமா முகமே அல்ல. நிஜ முகம் - கிராமத்து முகம்.

இயல்பான ஒளியில் பொருத்தமான இசையில் நகர்கிறது கதை. கண்கள் விருப்பம் போல பார்ப்பது போல தங்கரின் கேமரா கதை சொல்ல எங்கெங்கோ ஏறி, இறங்கி, புகுந்து, ஓடி, சுழன்று பயணித்திருக்கிறது. சபாஷ்.

இசை பரத்வாஜ், பாடல்களில் ராகம் செய்யாமல் யாகம் செய்திருக்கிறார் வைரமுத்துவுடன் இணைந்து. மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப் போகும்.... பாட்டு மனசுக்குள் பனி மழை தூவும். வேலாயி வேலாயி ஓலத்தின் ஒட்டுமொத்தப் பிழிவு. யார் யாரோ விதைச்ச நெலம் நான் விதைச்சது... தேன். எல்லாப் பாடல்களையும் வைர வரிகளால் வடித்துள்ளார் வைரமுத்து. பாடல்களில் பரவசப்படுத்தியுள்ள பரத்வாஜ், பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியுள்ளார். பொருத்தமான இடங்களில் பின்னணி இசைத்தும் தேவையான இடங்களில் மெளமாக விட்டும் பின்னணியிலும் பின்னியுள்ளார்.

மண்ணின் தன்மையோடு, மக்கள் மொழியோடு கலாச்சாரத்தோடு வாழ்க்கை முறையோடு இணைந்த ஒரு சிறந்த கதையை சினிமா மொழியில் சிறப்பாகச் சொல்லியிருக்கும் தங்சர்பச்சானை முதுகுவலிக்கும் வரை தட்டிக்கொடுத்துப் பாராட்டலாம்.