அழகிய தமிழ்மகன் - விமர்சனம்

திங்கள், 26 நவம்பர் 2007 (14:59 IST)
விஜய், ஸ்ரேயா, நமீதா, ஆசிஷ் வித்யார்த்தி, கஞ்சா கருப்பு, ஸ்ரீமன், எம்.எஸ். பாஸ்கர், கீதா நடிப்பில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பரதன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு அப்பச்சன்.

webdunia photoWD
பின்னால் நடக்கப் போகிறவற்றை தன் மன சக்தியால் முன்கூட்டியே அறியும் திறமை கொண்டவர் விஜய். எதிர்காலத்தில் நடப்பதை அறியும் திறமையால் தன் காதலியை தானே கத்தியால் குத்துகிற மாதிரி ஒருநாள் தெரிகிறது. தன்னால் ஆபத்து நேர்வதை உணர்ந்த விஜய் காதலி ஸ்ரேயாவை விட்டு விலகுகிறார். அவர் இடத்தில் இன்னொரு விஜய் நுழைகிறார். யார் ஒரிஜினல் என்று கண்ணாமூச்சி காட்டும் சுவாரஸ்யங்களும் - திசை திருப்பங்களுக்கு முடிவு கட்டுகிறது க்ளைமாக்ஸ்.

விஜய்க்கு இருவேடங்கள். ஒருவர் கல்லூரி மாணவர். பெயர் குரு. மும்பை வில்லனாக இன்னொருவர் பெயர் பிரகாஷ்.

குறுக்கு வழிப் பிரியரான பிரகாஷ், குருவாக உருமாற நினைத்து அமர்க்களம் செய்கிறார். இரட்டை வேடம் என்றதும் மாமூலான இவர்கள் இருவரும் ஒட்டிப் பிறந்தவர்கள், சிறுவயதில் பிரிந்தவர்கள், ஒரு தாய் மக்கள் என்று கூறாமல் புது உத்தி காட்டி புத்திசாலித்தனத்தைக் காட்டியுள்ளார் இயக்குனர்.

முதலில் ரசிகர்களுக்கான படமாகவே ஆரம்பிக்கிறது. விஜய்-ஸ்ரேயா காதல் வரும் இடங்கள்... நல்ல இச்சிங்... ஸாரி டச்சிங். விஜய் நண்பர் கூட்டணி என்று ஜாலி லூட்டிகள் என்று நகர... சரேலென நடக்க இருப்பதை முன்பே அறியும் சக்தி, என்ற பொறி தட்டிவிட... கதை வேகமெடுக்கிறது.

'குரு' விஜய் காதல் காட்சிகளில் கலக்குகிறார். அதுமட்டுமல்ல ஓட்டப் பந்தயத்தில் ஸ்ரீமனுக்கு விட்டுத் தரும்போது கவர்கிறார். ஓட்டலில் ஸ்ரேயாவிடம் அவரது அப்பாவையே மன்னிப்பு கேட்க வைக்கும்போது நிறைகிறார் நெஞ்சில். சிறுமியிடம் 'நாடு' பற்றி பொறுப்பான கவிதை சொல்லி மதிக்க வைக்கிறார்.

இவருக்கு நேரெதிர் 'பிரகாஷ்' விஜய். எதையுமே சுலபமா எடுத்துக் கொள்ளும் ரகம் இவர். குருவாக நடிக்க முயன்று சிக்கித் தவிப்பதும் 'எவ்வளவோ பண்றோம்' என்று காலர் தூக்கிவிட்டுக் கொள்வதும் ரசிக்கலாம்.

ஒரு நம்ப முடியாத கதையை எடுத்துக்கொண்டு விஜயை மையமாக்கி ஈஸ்ட்மென் கலர் தோரணம் கட்டியிருக்கிறார்கள்.

படத்துக்கு பலமும் பலவீனமும் வில்லன் விஜய்தான் என்கிறமாதிரி காட்சிகள் - புது ஸ்டைல் காட்டி விஜய் பிரகாசிக்கிறார்.

மற்றவர்கள்...? ஸ்ரேயா கவர்ச்சி மட்டுமே நடிப்பு என்றிருக்கிறார் போலும். நம்ப முடியாத அப்பா ஆசிஷ் வித்யார்த்தி. ஒட்டாத சாயாஜி ஷிண்டே. சந்தானம், சத்யன், எம்.எஸ்.பாஸ்கர் மூவரும் மலிவான சிரிப்புத் தோற்றம் கட்டியிருக்கிறார்கள். ஆறுதல் அம்மாவாக கீதாவின் நடிப்பு. நமீதா எதற்காக இந்தப் படத்தில்.

பாலசுப்ரமணியமின் கேமராவும் ரகுமானின் இசையும் பெயர் சொல்ல வைப்பவை.

இதே ஈஎஸ்பி சமாச்சாரத்தை வைத்து என்னென்னவோ செய்திருக்கலாம். தவறிவிட்டார்கள். விஜய்யிடம் வெளுத்து வேலை வாங்கி பரதன் பாராட்டு பெற்றுவிட்டார்.