வேல் படத்தின் விமர்சனம்

Webdunia

புதன், 14 நவம்பர் 2007 (11:31 IST)
webdunia photoWD
சூர்யா, அசின், வடிவேலு, கலாபவன்மணி, லட்சுமி, நாசர், சரண்யா, ராஜ்கபூர் நடிப்பில் ப்ரியன் ஒளிப்பதிவில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஹரி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீராஜகாளியம்மன் மீடியாஸ்.

சரண்ராஜ்-சரண்யா தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள். ரயிலில் செல்லும்போது ஒரு குழந்தை காணாமல் போய்விடுகிறது. சரண்யாவிடம் வளரும் பிள்ளை வளர்ந்த பின் நகரத்தில் டிடெக்டிவ் நிறுவனத்தில் வேலை பார்க்கிற வாசு. இது ஒரு சூர்யா.

காணாமல் போன பிள்ளையை நாசர் - அம்பிகா தம்பதிகள் எடுத்து வளர்க்கிறார்கள். அது வளர்ந்து கிராமத்து வீர இளைஞனாக கொடிகட்டிப் பறக்கிற வெற்றிவேல். அது இன்னொரு சூர்யா.

தொலைந்து போன பிள்ளையை நினைத்து 27 ஆண்டுகள் ஏங்கிக் கிடக்கிறார் சரண்யா. தனக்கொரு அண்ணன் இருப்பதை அறிந்து கொண்டு விடுகிறார் தம்பி சூர்யா.

ஆயிரம் இருந்தாலும் வளர்ந்த அப்பத்தாவை விட்டு வரமாட்டேன் என்று மறுக்கிறார் மூத்த சூர்யா. இதை உன்னைப் பெற்ற தாயின் முகத்தைப் பார்த்து சொல்லிவிட்டு வா என்று தம்பி அண்ணனிடம் கூற... தாய்க்கு இன்னொரு பிள்ளை உயிருடன் இருப்பது தெரிந்து மகிழ்ந்து, நெகிழ்ந்து, உருகிக் கரைய... பாசப் போராட்டம், பெற்ற பாசமா வளர்த்த பாசமா என தடுமாற்றம். இடையே தம்பிக்கு அசின் மீது காதல். அண்ணனை அழிக்கத் திட்டமிட்டுக் காத்திருக்கும் கலாபவன் மணி. முடிவு என்ன என்பதுதான் வேல் படத்தின் உச்சக்கட்டக் காட்சி.

வேல் படத்தலைப்பு வெகு பொருத்தம். வேல் பற்றி கூறப்படும் தாத்பர்யம் வேலின் நுனி கூர்மையைக் குறிக்கும். நடுப்பகுதி அகலத்தைக் குறிக்கும். அடிக் காம்பு ஆழத்தைக் குறிக்கும். அதே போலவே ஹரியும் தன் வேல் படத்தில் கூர்மையான - அகலமான- ஆழமான காட்சிகளை வைத்துள்ளார்.

ஒரு சமையலின் ருசி தாளிக்கப்படும் சில நொடிகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு படத்தின் வெற்றி பார்முலா கதையில் கலந்துள்ள பல்வேறு அம்சங்களின் கலவையின் விகிதாச்சாரத்தில்தான் முடிவாகிறது. வேலில் ஹரி சரியான விகிதத்தில் கலந்து முறையாகத் தாளித்து கமர்ஷியல் இலக்கணத்துக்குள் கச்சிதமாக விளையாடியிருக்கிறார்.

வீரம், காதல், பாசம், நகைச்சுவை, விறுவிறுப்பு, பரபரப்பு, இனிமை, சோகம்.... எல்லாவற்றையும் சரிவிகிதமாகக் கலந்து பரிமாறியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது.

இரண்டு சூர்யாக்களில் இளையவர் வாசு. அறிவால் வெல்ல முடியும் என்கிற ரகம். மூத்தவர் வேல். அரிவாள் தான் வெல்ல உதவும் என்று நம்பும் ரகம். இப்படி முரண்பட்டு இரு துருவங்களாக வளரும் இவர்கள் பொது எதிரியான கலாபவன்மணியுடன் மோத அறிவுபலத்தையும் அரிவாள் பலத்தையும் சேர்த்து பயன்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்.

படத்தில் இரட்டைவேடம் போட்டு நம்மை அப்படியே அலாக்காக அள்ளிக் கொண்டு போகிறவர் சூர்யாதான். முறுக்கிய மீசையுடன் நெருப்புக் கண்களுடன் சட்டைக்குள் அரிவாள் சுமந்து வேலாகப் பாயும் வெற்றிவேலாக அதிரடி அசத்தல் செய்கிறார் அண்ணன் சூர்யா.

சாந்தமான முகம், சாத்வீகமான பேச்சு, கொஞ்சம் காதல், மனசு என்று அமைதியாக ஆழமான நடிப்பை வழங்கி அழுத்தமாகப் பதிகிறார் தம்பி சூர்யா. பாசத்தை வெளிப்படுத்துவதில் இருவரும் உருகுதே ரகம். இவரா அவர்... அவரா இவர்... என புதிராகும் கட்டங்கள் சுவாரஸ்யமானவை.

பாசத்தைப் பொழியும் பாத்திரங்களில் தரவரிசைப்படி அம்மா சரண்யா, வளர்ப்பு அப்பத்தா லட்சுமி பின்னியெடுத்துள்ளனர். அசின் கொஞ்சம் சீண்டல் சிணுங்கள் என நடித்துள்ளார். வடிவேலுவுக்கு பல்சுவை நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு. பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார் கலாபவன் மணி. சிரித்தே வில்லத்தனம் செய்துள்ளார்.

கிராமத்து அழகையும் குணச்சித்திரங்களையும் நன்றாகவே காட்டியிருக்கிறார் இயக்குநர். ஓடி உதவியிருக்கிறது ப்ரியனின் கேமரா.

யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்ட வயல்பாட்டாக புது ருசி காட்டுகின்றன. அதிலும் ஆயிரம் ஜன்னல் வீடு ருசிக்க வைக்கும் பாட்டு. ரசிக்க வைக்கும் காட்சி.

ஒரு கமர்ஷியல் படத்தை எந்தவித தொய்வுமின்றி விறுவிறுப்பான திரைக்கதை, பளிச் வசனங்கள், சற்றே புத்திசாலித்தனமான காட்சிகள் என்று கொண்டு சென்று நட்சத்திரங்கள், தயாரிப்பாளர், ரசிகர்கள் என்று எல்லாரையுமே காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.

வெப்துனியாவைப் படிக்கவும்