இன்று மனிதன் எவ்வளவோ முன்னேறிவிட்டான். நாகரிகத்தில் மேம்பட்டுவிட்டான். ஆனால் இதே மனிதன் ஒரு காலத்தில் மிருகங்களைப் போல வாழந்தவன் தான். நாகரிகமற்று திரிந்தவன் தான். அப்படி நாகரிக வெளிச்சம் படாத ஒரு காட்டுவாசி சமுதாயத்தில் நடந்த வாழவை பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் மெல் கிப்சன்.
பார்க்கும் போது இன்றைய மனித நாகரிகம் பல கொடுமைகளையும் கொடூரங்களையும் சந்தித்த பின் தான் முன்னேறியிருக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியும்.
கதையின் தளம் அமெரிக்கப் பழங்குடி காட்டு வாழ் மக்களின் வாழ்க்கை. சூரிய வெளிச்சமும் நாகரிகக் காற்றும் நுழைய முடியாத அடர்ந்த காடு. அதில் வசிக்கும் ஒரு கூட்டம். குடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் இந்தக் கூட்டத்தை ஆயுதம் தாங்கிய இன்னோரு கூட்டம் சிறைபிடித்துச் செல்கிறது. ஆடு, மாடுகளைப் பிணைப்பது போல் காடு, மேடு, மலை, ஆறு எல்லாவற்றையும் கடந்து அடித்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள்.
நீண்ட தூரம் கடுமையான கொடுமையான பயணத்துக்குப் பிறகு ஒரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அது மாயன் சிட்டி என்கிற இடம். அவ்வூரில் ஒரு கோயில் இருக்கிறது. மனிதர்களை அடிமையாக வாங்கும் பெரிய சந்தையும் இருக்கிறது. கொண்டு செல்லப்பட்டவர்கள் வாங்கப்படுகிறார்கள். அவர்களை அங்கே உள்ள ஒரு தெய்வத்துக்கு பலி கொடுக்க இழுத்துச் செல்கிறார்கள். தாங்கள் தங்கள் ஊர் சுபிட்சமாக வாழ நரபலி கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த முரட்டு பக்திக்கும் மூட நம்பிக்கைக்கும் கொண்டு சென்ற ஆண்களை பலி கொடுக்கத் தீர்மானிக்கிறார்கள். இந்த நரபலியால் தெய்வத்தின் மனம் குளிர்ந்து நன்மை விளையும் என்று நம்புகிறார்கள்.
விலைக்கு வாங்கப்பட்டவர்கள் வரிசையாக இதயம் பிடுங்கப்பட்டு கழுத்தை வெட்டி பலி கொடுக்கப்படுகின்றனர். அவர்களில் அகப்பட்ட நாயகன் ரூடி எப்படி தப்பிக்கிறார். காட்டில் தன் கர்ப்பிணி மனைவி மற்றும் மகனை ஒரு பெரிய பள்ளத்தில் மறைத்து வைத்திருந்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் "அபோகலிப்டோ" படக்கதை.
ஆங்கிலப் படம் என்றாலும் படம் முழுக்க பழங்குடியினர் மொழி பேசப்படுகிறது. அது புரியாது என்பதால் சப் டைட்டில் போடுகிறார்கள்.
ஏற்கனவே "பிரேவ் ஹார்ட்", "தி பேஷன் ஆப் தி கிறிஸ்ட்" படங்கள் இயக்கிய மெல் கிப்சன் விழிகளை விரிய வைக்கும் படியும் இதயங்களை உறைய வைக்கும்படியும் காட்சிகள் அமைப்பதில் வல்லவர். இந்தப் படத்திலும் அதைச் செய்திருக்கிறார்.
காடும், காடு சார்ந்த இடங்களையும் படமாக்கியிருக்கும் விதம் மிரட்டல். அடிமைகளாக இழுத்துச் செல்லப்படும் காட்சியில் ஆயுதம் தாங்கியோர் செய்யும் கொடூரம், வன்முறை நமக்குள் ஆத்திரமூட்டும் காட்சி. அவர்கள் கடந்து செல்லும் பாதையை படமாக்கியிருக்கும் விதம் நம்மை அவர்களுடனேயே எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறது. மனித வியாபாரம் நடைபெறும் சந்தை காட்சியில் பிரம்மாண்டம் விழிகளை பிதுங்க வைக்கும். உயரமான நரபலி பீடம், கீழே லட்சக்கணக்கான மக்கள் ஆரவாரம் இதைப் பார்த்து கணகள் மிரளும்; இதயம் விரியும்; அப்பப்பா... எப்படி இதைக் காட்சியாக்கி இருப்பார்கள். கேமரா எங்கே நின்று சுழன்றியிருக்கும் என்று யூகிக்க முடியாதபடி கடுமையான உழைப்பு.
கொடியவர்களிடம் சிக்கிக் கொண்ட நாயகன் தப்பித்து ஓடுவது நீண்ட நெடிய போராட்டம். இக்காட்சி சற்று நீளமானது தான் என்றாலும் ரசிக்க முடிகிறது. கர்ப்பிணி மனைவி ஆழமான பள்ளத்தில் சிக்கிக் கொள்வது மழை பெய்வது பள்ளம் நிரம்புவது நீரிலேயே பிரசவம் ஆவது என்று நம்மூர் சென்டிமெண்ட் காட்சியும் உண்டு.
சற்றே நீளமான படம் என்றாலும் ஆரம்பத்தில் தொடங்கிய விறுவிறுப்பு கடைசி வரை தொடர்வது இயக்குனரின் வெற்றி!