திருமகன் - விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மின், விஜயகுமார், ராதாரவி, மணிவண்ணன், ரஞ்சித், இளவரசு, சரண்யா, மாளவிகா, சார்லி, கவிதா, ப்ரீத்திவர்மா, அஞ்சலிதேவி நடிப்பில் வேணுவின் ஒளிப்பதிவில் தேவாவின் இசையில் ஏ.எம்.ரத்னகுமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். தயாரிப்பு வி.கிரியேஷன்ஸ்.

பொறுப்பின்றித் திரிகிறவர் எஸ்.ஜே.சூர்யா, ப்ளஸடூ பரிட்சையை எட்டு முறை எழுதியும் தேறாத அளவுக்கு படிப்பார்வம். சுற்றித் திரிகிறவருக்கு வேலை இல்லை. எனவே ஊரில் பானை வனைந்து விற்கும் மீரா ஜாஸ்மின் நட்பு கிடைக்கிறது. பாறைக்கு மண் மிதித்துத் தருவர் மனசையும் மிதிக்கிறார். பிறகென்ன இருவரும் சேர்ந்து காதல் பானை செய்கிறார்கள். மகனின் இந்தக் காதல் கசமுசா அப்பா விஜயகுமாருக்குத் தெரியாது. விஜயகுமாரின் மருமகன் இளவரசு ராதாரவியின் சின்ன தம்பியை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போய்விடுகிறார். இதனால் இரு குடும்பத்துக்கும் பகை. ராதாரவி நட்பு பாராட்டினாலும் இன்னொரு தம்பி இருக்கிறார். இந்நிலையில் ராதாரவியின் மகள் கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. கார்த்திகாவின் கால் ஊனத்தைக் காரணம் காட்டி அந்தத் திருமணம் நின்று போகிறது. ஒரு கௌரவப் பிரச்சினையாகி விடவே, தன் மகன் அவளுக்கு வாழ்வளிப்பான் என்கிறார் விஜயகுமார். ஆனால் சூர்யாவோ மீராஜாஸ்மினை ஏமாற்ற முடியாது என்று மறுக்கிறார். தனக்குப் பிறந்த பிள்ளையாக இருந்தால் தன் வார்த்தையைக் காப்பாற்றுவான் என்று கூறி உயிர்விடுகிறார் விஜயகுமார். அப்பாவின் வார்த்தை முன் தன் காதல் சிறியது என்று மீராவின் காதலைத் தியாகம் செய்துவிட்டு கார்த்திகாவைக் கைப்பிடிப்பது தான் "திருமகன்" கதை.

ஒரு குடும்பத்தில் தொடங்கும் கதை கலகலப்பாக ஆரம்பிக்கிறது. போகப்போக பிரச்சினைகள் உருவெடுகின்றன. பாத்திர முரண்பாடுகளும் பிடிவாதங்களுமே பிரச்சினைகளுக்குப் பின்னணியாக இருப்பது இயற்கையாக இருக்கிறது.

விஜயகுமார் பொறுப்பான அப்பா, கௌரவமான ஊர்ப் பெரியவர் என்றால் மகன் சூர்யா பொறுப்பற்ற மகன். விஜயகுமாருக்கு வார்த்தை முக்கியம். மனைவி கவிதாவுக்கு குடும்பம் சொந்தம் முக்கியம். பொறுமையும் சகிப்பும் கொண்ட மகள் சரண்யா என்றால் கணவர் இளவரசுவோ மாமனார் வீட்டில் சாப்பிட்டு வாழும் முரட்டுத்தனம் கொண்ட மருமகன். சரண்யா குடும்பப் பாங்குள்ள குணம் கொண்டவர் மகள் ப்ரீத்தி வர்மாவோ எப்போ பெரிய மனுஷியாவேன் என்று எல்லாரிடமும் கேட்கும் வெள்ளந்தி.

விஜயகுமார் மீது மரியாதை வைத்திருக்கிறார். ராதாரவி. ஆனால் ரஞ்சித்தோ இதற்கு நேர் மாறானவர். சூர்யா வெளிப்படையாக பேசுகிறவர். காதலிக்கும் மீரா ஜாஸ்மினோ எதையும் மனசுக்குள் பூட்டி வைத்திருப்பார். இப்படி கதாபாத்திரங்களுக்கிடையே உள்ள குணச்சித்திர முரண்பாடுகளையே பிரச்சினைகளின் வேராக வைத்திருப்பது இயக்குநரின் கைவண்ணம்.

படத்தில் மீரா ஜாஸ்மினின் துறுதுறுப்பு சூர்யாவுடன் செய்யும் விளையாட்டுத் தளத்தில் சில்மிஷமும் உண்டு. கல்மிஷமும் உண்டு. இப்படி மீராவின் நடிப்பில் ஜாஸ்மின் மணம். நடிப்பில் படபடவென உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார் மீரா. முரடனாகத் திரியும் எஸ்.ஜே.சூர்யா ஆரம்ப காட்சிகளில் ஸத்ரிலோலன் போல தெரிகிறார். போகப் போக குடும்பத்து இளைஞனாக ஒப்புக் கொள்ள வைக்கிறார். விஜயகுமார், ராதாரவி இருவருக்குமே எடை மிகுந்த பாத்திரங்கள். சீறாமல், வீர வசனம் பேசாமல் மனதில் பதிந்து விடுகிறார்கள். ரஞ்சித், இளவரசு இருவரும் அதிகம் பேசி கவர்கிறார்கள். சரி இளவரசு செய்யும் கொலையின் பின்னணி அழுத்தமாகச் சொல்லப்படவில்லையே. ஏன்? மாளவிகா மணிவண்ணன் சம்பந்தப்பட்ட பானை சுடும் காமெடி கதைக்கு வெளியே நின்றாலும் சிரிக்கலாம். படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்குமே சரியான பாத்திரப் பங்கீடு செய்து வேணுவின் ஒளிப்பதிவு காட்சிகளை யதார்த்தமாக பதிவாக்க முயன்றிருக்கிறது. தேவாவின் இசை வைரமுத்துவின் வரிகளால் நிற்கிறது.

ஒவ்வொரு காட்சியையும் கலகலப்பாக தனித்தனியே ரசிக்க வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் ஒட்டுமொத்த படத்துக்கான வேகத்துக்கு கட்டுமானம் சரியில்லாத கட்டடம் போல கலகலத்து பலவீனமாகத் தெரிகிறது படம். இந்தக் குறையைச் சரிசெய்திருந்தால் திருமகன் மனதைக் கவர்ந்த ஒருமகன் ஆகியிருப்பான்.

வெப்துனியாவைப் படிக்கவும்