குரூப் கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் சார்பில் எஸ். கதிரேசன் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் பொல்லாதவன். தனுஷ் கதாநாயகனாக நடிக்க, குத்து படத்தில் அறிமுகமான ரம்யா, திவ்யா என்ற பெயரில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் வெற்றிமாறன். இவர் பாலுமகேந்திராவிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றி, திரைப்பட நுணுக்கத்தை கற்றவர்.
`பொல்லாதவன்' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷ் நடித்து அணமையில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் ரஜினி நடித்த 'மிஸ்டர் பாரத்' படத்தின் 'என்னம்மா கண்ணு செளக்கியமா' என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு, அப்பாடல் சூப்பர் ஹிட்டானது.
அதே போன்று பொல்லாதவன் படத்திலும் ரீமிக்ஸ் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன் வெளியான 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் சூப்பர் ஹிட் பாடலான, 'எங்கேயும்... எப்போதும்...' என்ற பாடலை மிக வித்தியாசமான வாத்தியங்களை பயன்படுத்தி ரீமிக்ஸ் செய்திருக்கிறார் 'இளைய இசைப்புயல்' ஜீ.வி. பிரகாஷ்குமார். இதில் சுவாரஸ்யமான விஷயம்... 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் 'எங்கேயும்... எப்போதும்...' பாடலை பாடிய எஸ்.பி.பி.யே பொல்லாதவன் படத்தின் ரீமிக்ஸ் பாடலையும் பாடியிருக்கிறார் என்பதுதான்.
அதுமட்டுமல்ல... 'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் 'எங்கேயும்... எப்போதும்...' பாடல் படமாக்கப்பட்ட ஏவிஎம் ஸ்டூடியோவிலேயே இப்பாடல் காட்சியும் படமாக்கப்படுகிறது. இதற்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் வித்தியாசமான ஏழு செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
பொல்லாதவன் படத்தில் மற்றுமொரு ஆச்சரியமான விஷயமும் நடந்தேறியிருக்கிறது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் பொல்லாதவன் படத்தில் ரஜினி பயன்படுத்திய காரை, இப்படத்தில் `எங்கேயும்... எப்போதும்...' பாடல் காட்சியில் பயன்படுத்துகிறார் தனுஷ்.
நட்சத்திரங்கள்:
தனுஷ், திவ்யா, கருணாஸ், சந்தானம், மலையாள முரளி, பானுப்ரியா, மனோபாலா, டேனியல் பாலாஜி, கிஷோர், பவன், ராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
ஒளிப்பதிவு - ஆர். வேல்ராஜ் இசை - ஜீ.வி. பிரகாஷ்குமார் பாடல்கள் - வைரமுத்து, நா.முத்துகுமார், கபிலன், யுகபாரதி சண்டைப்பயிற்சி - ராம்போ ராஜ்குமார் நடனம் - பிருந்தா, கல்யாண் கலை - சாய்குமார் படத்தொகுப்பு - வி.டி.விஜயன் மக்கள்தொடர்பு - மெளனம் ரவி தயாரிப்பு நிர்வாகம் - ஸ்ரீதர் தயாரிப்பு மேற்பார்வை - சதீஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வெற்றிமாறன் தயாரிப்பு - எஸ். கதிரேசன்