கனவில் வந்த காதலி பயந்து போன ரமேஷ் புலி வருது படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சி
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தன் நண்பன் கருப்புவுடன் ஒரு கிராமத்துக்கு செல்கிறான் ரமேஷ். அங்கே வரும் ஜானகியின் அழகில் சொக்கிப் போன ரமேஷ், ஆச்சர்யம் அடைகிறான். காரணம் அவனது கனவில் அடிக்கடி வந்து செல்கிற கனவு தேவதையே அவள்தான். தன் கனவில் வந்த அழகி நேரில் வந்ததால் அவள் மீது காதல் கொள்கிறான் ரமேஷ்.
ஊருக்குத் திரும்பியதும் தன் பெற்றோரிடம் ஜானகியைப் பற்றி சொல்கிறான். அவன் விருப்பத்தின்படி ரமேஷுக்கு ஜானகியை திருமணம் செய்து வைக்க பேசி முடிக்கிறார்கள். திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்க, திடீரென ரமேஷ், எனக்கு ஜானகியுடன் கல்யாணம் வேண்டாம். உடனே இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்கள் என்று சொல்கிறான்.
ரமேஷ் சொன்னதைக் கேட்டதும் அவனது பெற்றோர் அதிர்ச்சியடைகிறார்கள். ஜானகியை திருமணம் செய்து கொள்ள மறுப்பது ஏன்? என்று காரணத்தைக் கேட்கும் போது, "நான் ஒரு கனவு கண்டேன். அதனால் தான் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறேன்" என்று ரமேஷ் கூறுகிறான்.
அவன் கண்ட கனவு என்ன? என்ற ஆவலைத் தூண்டும் இந்த சுவாரஸ்யமானக் காட்சி ஈ.எல்.கே. புரடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தொழிலதிபரான ஆண்டனி தயாரிக்கும் "புலி வருது" படத்துக்காக படமாக்கப்பட்டது.
ரமேஷ் ஆக ரமேஷும், கருப்புவாக கருணாஸும், ஜானகியாக மல்லிகா கபூரும், ரமேஷின் பெற்றோராக மணிவண்ணன் - சரண்யாவும் நடித்தனர். மற்றும் லிவிங்ஸ்டன், சந்தான பாரதி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - சி. ராஜசேகரன் இசை - ஸ்ரீகாந்த்தேவா பாடல்கள் - நா. முத்துகுமார் படத்தொகுப்பு - ராஜா முகம்மது கலை - உமேஷ், கே. ரூமேஷ் நடனம் - சிவசங்கர், பிருந்தா, ஸ்ரீதர் சண்டைப்பயிற்சி - ஜீவா தயாரிப்பு நிர்வாகம் - மாரியப்பன் தயாரிப்பு மேற்பார்வை - எம்.எஸ்.எஸ். மூர்த்தி இணை இயக்கம் - பாலகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜி.வி.குமார்.