எஸ்.ஆர்.எம். பிலிம் இன்டர்நேஷ்னல் சார்பில் எச்.ஜி. பிரமிளா கணேஷ் தயாரிக்கும் "பிறப்பு" படத்திற்காக பொள்ளாச்சியிலுள்ள சூலக்கல் என்ற கிராமத்தில் ஊர் திருவிழாவில் நடைபெறும் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.
"கடலைன்னா கடலை இது கரிசக்காட்டு கடலை இந்த விடலை எதையும் விடலை என்னை யாரும் இன்னும் தொடல..."
எனத் தொடங்கும் பாடலுக்கு நந்திதா நடனமாட, அவருடன் கதாநாயகன் புதுமுகம் பிரபா, கஞ்சா கருப்பு மற்றும் 50 நடனக் கலைஞர்களும் இணைந்து ஆடினர். இப்பாடல் காட்சியில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற கிராமிய நடனங்களும் இடம் பெற்றது. பொது மக்கள் திளராக வந்து கலந்து கொண்டனர். சிவசங்கர் நடன அமைப்பில் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கினார் ஷங்கி மகேந்திரா. இவர் இயக்குநர் பாலு மகேந்திராவின் மகன்.
பரத்வாஜ் இசை அமைக்கிறார். கதாநாயகியாக "தூத்துக்குடி" பட நாயகி கார்த்திகா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக கேரள வரவு புதுமுகம் மயூகா நடிக்கிறார் மற்றும் பிதாமகன் மகாதேவன், சரண்யா, சுலக்ஷனா, சண்முகராஜ், கஞ்சாகருப்பு, ஜார்ஜ், மீண்டும் மீண்டும் சிரிப்பு புகழ் ஷோபனா ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் எல்.வி. இளங்கோவன், இவர் இயக்குநர் கே. விஜயன், நாசர், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.