பியூனா விஸ்டா சோஷியல் கிளப் ஆவணப்படத்தை பார்த்தவர்களால் அதனை மறக்க முடியாது. இசையைப் பற்றிய அரிச்சுவடி தெரியாதவர்களையும் இந்த ஆவணப்படம் பரவசப்படுத்தும். இந்த படத்தைக் குறித்து எழுத்தாளர் ஞாநி தனது இணையத்தில் குறிப்பிட்டிருந்தார்.
FILE
இந்த சினிமாவை 1999 கடைசியிலோ 2000 ஆரம்பத்திலோ பார்த்தேன். அதில் இருக்கும் இசை என்னை மிகவும் கவர்ந்தது. அதன்பின் பத்துப் பதினான்கு வருடங்களாக அந்த இசையைத் தேடி கொண்டிருக்கிறேன். எந்த மியூசிக் ஸ்டோருக்குப் போனாலும் அந்தப் படத்தின் டிவிடியோ இசை ஆல்பமோ இருக்கிறதா என்று தேடுவேன். அமெரிக்காவில் ஐரோப்பாவில் கூட தேடினேன். எங்கேயும் எனக்கு அது தட்டுப்படவில்லை.
நேற்று இரவு என் ஐமேக்கில் எனக்குத் தெரியாமல் சில நண்பர்கள் போட்டுவைத்திருக்கும் ஃபைல்களை எல்லாம் குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது நண்பர் கரு.அண்ணாமலை போட்டு வைத்திருந்த சினிமாக்கள் தொகுப்பைப் பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட உலக சினிமா இயக்குநர் வாரியாகப் போட்டிருந்தார். அதில் தற்செயலாக விம் வெண்டர்சின் படங்கள் என்ன என்று பார்த்தால் முதலில் இருந்தது பியூனா விஸ்டா சோஷியல் க்ளப். அப்போது இரவு 11.30 மணி. ஆனால் உடனே அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலில் உட்கார்ந்தேன். ஒண்ணே முக்கால் மணி நேரப் படம். 15 வருடங்கள் முன்னால் பார்த்தபோது கிடைத்த அதே மகிழ்ச்சி இப்போதும் கிடைத்தது.
ஞாநியின் குறிப்பில் தென்படும் பரவசம் இந்த ஆவணப்படத்தைப் பார்த்த அனைவரையும் தொற்றிக் கொள்ளக் கூடியது. பியூனா விஸ்டா சோஷியல் கிளப் என்பது 1940 களில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இயங்கிய ஒரு கிளப். நடனமும், இசையுமே இதன் பிரதானம். இந்த கிளப்பில் உறுப்பினர்களாக இருந்த கலைஞர்கள் அனைவருமே அன்றாடம் காய்ச்சிகள்.
எழுபது வயதுக்குப் பிறகு தனியாக பல இசை ஆல்பங்களை வெளியிட்ட இந்த கிளப்பின் பாடகர் ஃபெர்ரர் நாற்பதுகளில் ஷு பாலிஷ் செய்யும் வேலையை செய்து வந்தார். இவரைப் போலதான் மற்றவர்களும். வறுமையிலும் இவர்களை ஒன்று சேர்த்தது இசை.
FILE
கியூப பியானிஸ்ட் கலைஞரான ரூபென் கொன்சலஸ் நாற்பதுகள் கியூப வாழ்க்கை இசையுடன் கூடியதாக இருந்ததாகவும், குறைவாக சம்பாதிக்க முடிந்தாலும் எல்லோருமே இசையில் ஆர்வம் கொண்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில்தான் ஆப்ரோ - கியூபன் இசை வடிவங்களான rumba, son போன்றவை உச்சங்களை எட்டின. ஜாஸ் இசை மரபான கியூப மாம்போ இசையில் பாதிப்பை செலுத்த ஆரம்பித்ததும் இந்த காலகட்டத்தில்தான் என்று குறிப்பிடுகிறார்கள்.
1959 புரட்சிக்குப் பின் கியூப பிரசிடென்டாக பதவியேற்றவர் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர். இரவு விடுதிகளும், கிளப்களும் அவரது ஆட்சியில் மூடப்பட்டன. கியூப இசை அவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து அகற்றி வைக்கப்பட்டது.
சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு 1996 ல் அமெரிக்க கிடார் கலைஞர் ரை கூடரை பிரிட்டனைச் சேர்ந்த இசை ஆல்ப தயாரிப்பாளர் நிக் கோல்ட் தொடர்பு கொள்கிறார். ஆப்ரிக்க நாடான மாலியைச் சேர்ந்த சில இசைக்கலைஞர்களையும், கியூப இசைக்கலைஞ்களையும் வைத்து ஒரு ஆல்பத்தை தயாரிக்கும் திட்டத்தை கூறுகிறார். இருவரும் கிளம்பி கியூபா வருகிறார்கள்.
விசா பிரச்சனையால் மாலி கலைஞர்களால் வர முடியாமல் போக முழுக்க கியூப கலைஞர்களை வைத்து ஒரு ஆல்பம் தயாhpக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பியூனா விஸ்டா சோஷியல் கிளப் குறித்து அறியும் ரை கூடர் அவர்களைத் தேடி கண்டுபிடித்து தனது ஆல்ப உருவாக்கத்தில் பயன்படுத்திக் கொள்கிறhர்கள். இந்த தேடல் சற்று கடினமாக இருக்கிறது. யாருக்கும் அந்த கிளப்பை குறித்து தொpந்திருக்கவில்லை. காலம் அவர்களை பல இடங்களில் சிதறடித்திருந்தது.
ஆறே தினங்களில் மொத்தம் 14 ட்ராக்குகளை பதிவு செய்கிறார்கள். அதில் ஒன்று இந்த கிளப்பின் பெயரில் தொடங்கும் பாடல். அதையே ஆல்பத்தின் தலைப்பாக்குகிறார்கள். பியூனா விஸ்டா சோஷியல் கிளப்.
1997 செப்டம்பர் 17 ஆல்பம் வெளியாகிறது. ஆல்பம் உடனடி ஹிட். மொத்தம் 5 மில்லியன் இசைத்தகடுகள் விற்பனையாகின்றன. 1940 -களில் இளமையின் வேகத்தில் இருந்த இசைக்கலைஞர்கள் இப்போது கிழவர்கள். ஆனாலும் அவர்களின் துடிப்பான இசையை கியூப வாழ்க்கை சிதைத்திருக்கவில்லை. 1998 ல் இந்த இசைக்கலைஞர்களை அமொpக்காவுக்கு அழைத்து வந்து இசை நிகழ்ச்சி நடித்தினார் ரை கூடர். நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு.
இந்த இசை நிகழ்ச்சியை இயக்குனர் விம் வெண்டர்ஸ் ஆவணப்படமாக்கினார். கியூபாவில் வைத்து சம்பந்தப்பட்ட இசைக்கலைஞர்களின் பேட்டியும் எடுக்கப்பட்டது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த ஆவணப்படம் ஐரோப்பிய ஃபிலிம் அவார்ட்ஸில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை வென்றது.
FILE
இந்தப் படத்தில் நம்மை உடனடியாக கவர்வது இசையும், காட்சிகளை விம் வெண்டர்ஸ் படமாக்கியிருக்கும் விதமும். இசை நிகழ்ச்சி நடக்கையில் இசைக்கலைஞர்கள் பரஸ்பரம் சிரித்துக் கொள்கிறார்கள், நகைச்சுவையான வரிகள் வந்தால் சத்தமாக சிரித்துக் கொள்கிறார்கள். வேடிக்கையாக இசைக்கருவியை முதுகுப்புறம் வைத்து இசைக்கிறார்கள். சிலநேரம் கட்டித்தழுவி அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களின் மன இயல்புக்கேற்ப பார்வையாளர் பகுதியும் ரசனையை வெளிப்படுத்துகிறது.
முழுமையான அமைதியில் கண்களை மூடி தியானிக்கும் ஆன்மீக இசைக்கு முற்றிலும் எதிர்திசையில் இயங்குவது கியூப இசை. கியூப இசை மட்டுமில்லை ஆப்பிhpக்க இசையே அப்படியானதுதான். உலகம் முழுக்க உள்ள உழைக்கும் மக்களின் இசை துள்ளலானது. ஆடத்துண்டுவது. இசைதான் அவர்களின் வாழ்க்கையின் உணர்வுகளின் வெளிப்பாடு. இசையை வாழ்க்கையை மேம்படுத்தும் விஷயமாக, ஆன்மீகமாக, தெய்வீகமாக பார்ப்பதற்கும் இசையையே வாழ்க்கையாகப் பார்ப்பதற்குமான வேறுபாடு இது.
விம் வெண்டர்ஸ் இதனை தனது படத்தின் காட்சிகள் வழியாக வெளிப்படுத்துகிறார். பாடல் பின்னணியில் கியூபாவின் அன்றாட வாழ்க்கை, அதன் ஒலிகள் நமக்கு காட்டப்படுகிறது. பாடல் ஓடிக் கொண்டிருக்கும் போதே தெருநாயின் குரைப்பையும் கேட்கிறோம். இசை இங்கு கருவறையில் இல்லை அது மக்களின் வாழ்க்கையில் அவர்களின் தெருக்களில் இருக்கிறது. இதற்கு அர்த்தம் அவர்களின் இசை ஆன்மீகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது என்பதல்ல. மாம்போ என்ற அவர்களின் பாரம்பரிய இசையின் அர்த்தமே கடவுள்களுடன் உரையாடுதல் என்பதே. இசையே வாழ்க்கையாகும் போது வாழக்கையே கடவுளுடன் உரையாடுவதாக ஆகிறது.
ஆல்பத்தின் வெற்றிக்குப் பிறகு பியூனா விஸ்டா சோஷியல் கிளப்பின் இசைக்கலைஞர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்தது. உள்ளூர் மக்கள் அவர்களை சூப்பர் காட்ஃபாதர்ஸ் என செல்லமாக அழைக்கத் தொடங்கினர். இந்த முயற்சிக்காக இதனை ஒருங்கிணைத்த ரை கூடர் அபராதம் செலுத்த நேர்ந்தது.
FILE
கம்யூனிச புரட்சிக்குப் பிறகு அமெரிக்க அரசு கியூபா மீதான கட்டுப்பாடுகளை கடினப்படுத்தியது. உணவும், மருந்துகளும் மட்டுமே பரிவர்த்தனைக்கு அனுமதிக்கப்பட்டன. விசா கட்டுப்பாடுகள் இறுக்கமடைந்தன. அதனால் ரை கூடர் 1996 ல் இந்த இசை ஆல்பத்துக்காக மெக்சிகோ வந்து அங்கிருந்து கியூபா வந்தார். இது அமெரிக்காவின் ட்ரேடிங் வித் எனிமி ஆக்ட் - க்கு எதிரானது என அவருக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
கம்யூனிஸமும், பொருளாதார தடைகளும் 1999 ல் கியூபாவை தொழில்நுட்பம் தீண்டாத பகுதியாக வைத்திருக்கிறது. நமது ஹவுசிங்போர்ட் வீடுகளை நினைவுப்படுத்தும் பழைய விசாலமான குடியிருப்புகள், காலத்துக்கு முந்தைய வண்டிகள், விளையாட்டுப் பொருள்கள். இந்த பழமைக்கு நடுவில் சுருட்டு புகைத்து ஆனந்தமாக நடைபோடும் கியூப கிழவர்களின் அசட்டையான உடல்மொழி நம்மை கவர்கிறது. வறுமையிலும் கியூபாவை உயிர்த்துடிப்பாக வைத்திருப்பதில் இசைக்கு உள்ள பங்கை இந்த ஆவணப்படத்தில் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் விம் வெண்டர்ஸ்.
ஞாநி கூறியிருப்பது போல் இந்தப் படம் இசையும் கலை ரசனையும் சமூகப் பார்வையும் கொண்டவர்கள் தவறவிடக் கூடாதது. படத்தின் நினைவுகளை அசைபோட வைத்த ஞாநிக்கு நன்றி.