வாலி படத்தில் தமிழ் ரசிகர்களிடையே நம்பிக்கைகளை விதைத்தவர் எஸ்.ஜே. சூர்யா. குஷி அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியது. நியூ புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவுக்கு தருவார் என்று உறுதியாக எண்ண வைத்தது. ஆனால்...? ப்ளேபாய் இமேஜுடன் அவர் நடிப்பில் காட்டிய தீவிரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். அந்த ஏமாற்றம் மீண்டும் நம்பிக்கையாக மாறும், அதற்கு தொடக்கப் புள்ளி நியூட்டனின் 3ம் விதி என்கிறார் சூர்யா. அவரது நம்பிக்கைத்தரும் பேட்டியிலிருந்து...
இனி படம் இயக்குவதில்லை என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறீர்களே?
ஒரு திருத்தம். நான் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்குவேன். வேறு நடிகர்களை வைத்து நான் இயக்கும் கடைசிப் படமாக தெலுங்கு புலி இருக்கும்.
ஏனிந்த திடீர் முடிவு?
நான் சினிமாவுக்கு வந்தது நடிகனாவதற்குதான். இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. எல்லோரும் விரும்பும் ஹீரோவாக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். இனி என்னுடைய பயணம் அதை நோக்கியதாக இருக்கும். அதனால் எந்த ஹீரோவையும் வைத்து படம் இயக்க மாட்டேன். என்னை நானே இயக்குவேன் அல்லது வேறு இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பேன்.
புலி எப்போது வெளியாகிறது?
ஏப்ரல் மாதம் திரைக்கு வரும். தெலுங்கில் வெளிவரும் படத்தை அதே பெயரில் தமிழில் இயக்கி நடிக்கிறேன்.
புலி போலீஸ் கதை, அதில் நடிக்க எனக்கு பக்குவம் போதாது என்று சொல்லியிருந்தீர்கள்...?
அது இரண்டு வருடங்கள் முன்பு. இப்போது பக்குவம் வந்திருக்கிறது, நடிக்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் கடமையை சரியாச் செய்தால் உலகில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பது புலி படத்தின் ஒன்லைன்.
நியூட்டனின் 3ம் விதி பற்றி கூறுங்கள்...
வித்தியாசமான திரைக்கதையில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. விறுவிறுப்பான படம். என்னைப் பற்றிய எல்லா விமர்சனங்களையும் துடைத்தெறியும் படமாக இது இருக்கும். ஷாயாலி என்னுடைய ஜோடியாக நடித்திருக்கிறார். படம் நிச்சயம் வெற்றி பெறும்.
உங்களுடைய கனவுப் படம் இசை என்னவாயிற்று?
இசை கண்டிப்பாக வெளிவரும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகயிருக்கும் பெரிய படம் இசை. படத்தை இயக்கி நானே நடிக்கிறேன். புலிக்குப் பிறகு நான் நடிக்கும் படம் இசையாகவும் இருக்கலாம்.