ரசிகர்களை கவரும் வேடங்களில் மட்டுமே நடிப்பேன் - திவ்யா ஸ்பந்தனா

செவ்வாய், 20 ஜனவரி 2009 (20:28 IST)
முன்பு குத்து ரம்யா. குத்து அடைமொழி பிடிக்காததால் இப்போது திவ்யா ஸ்பந்தனா. இது ரம்யாவின் ஒ‌ி‌ஜினல் பெயர். பொல்லாதவன், வாரணம் ஆயிரம் என திவ்யாவின் செகண்ட் இன்னிங்ஸ் சினிமா கிராஃப் செம ஷார்ப். இவரைப் பற்றிய சமீபத்திய ஹாட் செய்தி, விஜயுடன் ஆட மறுத்தது. எந்த கேள்விக்கும் தயங்காமல் பதிலளிக்கும் திவ்யாவின் பேட்டியிலிருந்து...
webdunia photoWD

நீங்கள் நடித்ததில் பல தோல்விப் படங்கள். இது எப்படி நேர்ந்தது?

சினிமாவுக்குள் நுழைந்த காலத்தில் நட்புக்காகவும், ம‌ரியாதை நிமித்தமாகவும் நடிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதன் விளைவாக சில மோசமான தோல்விகள் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இந்த கேள்வியை கேட்பவர்கள் 2008ல் வெளிவந்த என்னுடைய வெற்றி பெற்ற படங்கள் பற்றி எதுவும் பேசுவதில்லை.

வாரணம் ஆயிரம் படத்தில் நீங்கள் நடித்த பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா?

வாரணம் ஆயிரத்துக்காக இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்தேன். அதில் பல காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது வருத்தம்தான் என்றாலும் அந்த படத்தில் நடித்ததால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. குடும்பப்பாங்கான வேடத்தில் நன்றாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டினார்கள். இந்த பாராட்டுகள் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்களுடைய தாய்மொழி கன்னடம். அந்த‌ மொழி‌ப் படங்களில் நடிக்கிறீர்களா?

தமிழ், தெலுங்கில் பிஸியாக இருந்ததால் நடிக்காமல் இருந்தேன். இப்போது இரண்டு கன்னட படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன்.

வில்லு படத்தில் விஜயுடன் நீங்கள் நடிக்க மறுத்தது ஏன்?

விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட கேட்டார்கள். ஒரு பாடலுக்கு ஆடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் அந்த வாய்ப்பை மறுத்தேன்.

அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்?

மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் மிலின்த் ராவ் இயக்கும் காதல் டூ கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். ஆர்யாவின் தம்பி ஹீரோ. முதல் முறையாக இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறேன். நான் விரும்பியது போலவே வித்தியாசமான வேடம்.

என்ன வேடம்... ?

கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் பெண்ணின் கதாபாத்திரம்.

நடிகைகள் அதிகம் சம்பளம் கேட்பதாக குற்றச்சாட்டு இருக்கிறதே... ?

சிலர் கோடிகளில் சம்பளம் வாங்குவதால் என்னிடமும் அதுபோல் வாங்குவீர்களா என்று கேட்கிறார்கள். என்னுடைய தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ற சம்பளத்தையே வாங்குகிறேன். எனக்கு அது போதும்.

கிளாமர், பேமிலி கேரக்டர்... எதில் நடிக்க ஆசை?

ரசிகர்களுக்கு எந்த வேடம் பிடிக்குமோ அதில் மட்டுமே நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அப்படிப்பட்ட வேடங்களில் மட்டுமே நடிப்பேன்.