அனைத்து திறமைகள் இருந்தும், வெற்றி எனும் ஸ்பாட்டில் லேண்ட் ஆகாமல் இன்னும் அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது அருண் விஜய்யின் சினிமா கேரியர். அருண் குமார் என்ற பெயரை அருண் விஜய் என்று மாற்றியதோடு, அமெரிக்காவில் திரைப்பட முயற்சி முடித்தவருக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறது வாய்ப்பு.
"அமெரிக்காவில் என்னுடன் படித்த ஆஸ்திரேலிய மாணவர்கள் என்னடைய திறமையைப் பார்த்து, அவர்களே ஒரு படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார்கள். அவர்களின் சேனல் 9 நிறுவனமும் என்னுடைய மாமா என்.எஸ். மோகனின் ஃபெதர் டச் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது".
இநத்ப் படத்திற்கும் வழக்கமான அருண் விஜய் படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். இந்த வித்தியாசங்கள் அவர் முகத்தில் பெரிய பிரகாசத்தை வரவழைத்துள்ளது.
"வழக்கமா நான் நடிக்கிற படங்களை ஒரு பட்ஜெட்டுக்குள்தான் எடுப்பாங்க. காரணம், பிசினஸ். ஆனால் இநத்ப் படத்தில் அந்த மதிரி எந்த எல்லையும் இல்லை. பெரிய டெக்னிஷியன், முன்னணி ஹீரோயின்னு கோடிகளை இறைக்கப் போறோம்".
அருண் விஜய் இதில் கால்டாக்சி டிரைவராக நடிக்கிறார். திரைக்கதை எழுதப்போவது பட்டுக்கோட்டை பிரபாகர். இந்தப் படத்திற்காக கட்டிடித்துக்கு கட்டிடம் தாவிக்கொண்டிருக்கிறார் இவர்.
"இந்தப் படத்திற்காக உடல்வாகை மாற்ற கடுமையான பயிற்சி எடுத்து வருகிறேன். ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவும் காட்சியொன்று இந்தப் படத்தில் வருகிறது. அதுக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் அலெக்ஸிடம் பயிற்சி எடுத்து வருகிறேன்".
கோலிவுட்டின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய அருண் விஜய், தனது அடுத்தடுத்த திட்டங்களை விவரித்தார்.
"என்னுடைய அடுத்தடுத்த முயற்சிகள் கண்டிப்பாக வெற்றிபெரும். அதுக்காக கடுமையாக உழைக்கிறேன். என்னுடைய அப்பா ஏற்கனே அறிவித்தபடி இரண்டு சொந்தப் படங்களில் நடிக்கயிருக்கிறேன். ஒருபடம் ஜனவரி 14ஆம் தேதி தொடங்க உள்ளது. அடுத்தப்படம் ஜூன் மாதம். இதில் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு படத்தை சேரன் டைரக்ட் பண்றார். இந்த இரண்டு படங்களுக்கும் முன்னால் நான் டாக்சி டிரைவராக நடிக்கும் சேனல்9-ன் படம் வெளிவரும்".
இந்த முறை தனக்கு கண்ணாமூச்சி காட்டி வரும் வெற்றியை கையோடு பெயர்தெடுப்பார் அருண் விஜய். உழைப்புக்கு ஒருநாள் ஊதியம் கிடைக்கத்தானே செய்யும்!