இளையராஜா எனது படத்தில் பாடுவது சந்தோஷம் - ஐம்புலன் இயக்குனர் சந்திராகுரு!
webdunia photo
WD
சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் படை வீடு. பன்னிரெண்டாம் வகுப்பு தேறியதும் நேராக பச்சையப்பா கல்லூரி. அங்கிருந்து பஸ் ஏறி கோடம்பாக்கம்! ஐம்புலன் படத்தின் இயக்குனர் சந்திரா குருவீன் கேரியர் ரூட் இது. கேட்க சுவாரஸ்யமாக இருந்தாலும் சிரமங்கள் நிறைய என்றவரிடம் ஐம்புலன் குறித்தும், அவரது சினிமா பின்புலம் குறித்தும் கேட்டோம்.
உங்களின் முதல் திரை முயற்சி எது?
முதல் முயற்சி ஒரு குறும்படம். பெயர் மனு. இளையராஜா சாரோட குடும்ப டாக்டர் அமுதகுமார்தான் தயாரிப்பு. அப்புறம் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி தயாரித்த ஒரு படத்துக்கு நான்தான் கதை. சினிமாவில் இயக்குனராக முதல் முயற்சின்னா அது ஐம்புலன்தான்.
ஐம்புலன் படத்தோட நாயகன் தமிழ், ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷின் மகன். ஆக, வாரிசுக்காக உருவாக்கப்பட்ட கதையா ஐம்புலன்?
நிச்சயமாக இல்லை. தமிழை முதன் முதலா பார்த்தபோது குண்டா இருந்தான். என்னோட கதைக்கு ஸ்கூல் பையன் ரேஞ்சுக்குதான் வேணும். அதனால தமிழை திருப்பி அனுப்பிட்டேன். இது நடந்து இருபது நாள் இருக்கும். ஆளே மாறிப்போய் ஒல்லியா வந்து நின்னான். இருபது நாளும் எக்சர்சைஸ் செய்து உடம்பை குறைச்சிருக்கான். அந்த டெடிகேஷனுக்காக அவனை ஹீரோ வாக்கினேன்.
ஹீரோயின் யாரு?
பெயர் தர்ஷா. குருவியில விஜயோட தங்கையா நடிச்சிருக்காங்க.
இது எந்த மாதிரியான கதை?
ஆக்சனோடு காதலும் கலந்த எல்லோரும் விரும்புகிற ஒரு கதை.
பவதாரணி அதிகமாக படங்களுக்கு இசையமைப்பதில்லையே?
webdunia photo
WD
நானும் அந்த சந்தேகத்தோடுதான் அவங்ககிட்ட கதை சொன்னேன். கதையை கேட்டதும் சரின்னு ஒத்துக்கிட்டார். ஒரு பாடலை இளையராஜா சார் பாடுறதாகவும் சொல்லியிருக்கார். ரொம்பவே சந்தோஷமான விஷயம் இது.
இப்போது வர்ற படங்களில் பாடல் காட்சிகள் கதையோடு இயல்பாக பொருந்தாமல் திணிக்கிற மாதிரி இருக்கே?
ஐம்புலனில் அப்படி இருக்காது. பாடல்களை திணிக்காம கதையோடு சேர்ந்து வர்ற மாதிரிதான் எடுத்திருக்கோம். தவிர, இது யதார்த்தமான கதை. சங்ககிரி, சேலம், பவானினு காவிரி கரையோரமாகத்தான் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருக்கோம்.
படை வீட்டிலிருந்து சினிமாவுக்கு வர என்ன காரணம்?
சின்ன வயசுலயிருந்தே சினிமா மோகம்தான் காரணம். அப்புறம் என்னோட அப்பா. அவர் ஒரு கூத்துக் கலைஞர். சினிமாவில் நடிக்கிறதுக்காக அவர் எடுத்த முயற்சி வெற்றியடையலை. அதனால அப்பாவுக்கும் சேர்த்து சினிமாவில் ஜெயிக்கணும் என்ற வெறி. இன்னும் இரண்டு மாசத்தில் ஐம்புலன் ரிலீஸாகிறது. கண்டிப்பாக ஜெயிப்பேன்!