நம்பவே முடியவில்லை : ப்ரியாமணி!
புதன், 11 ஜூன் 2008 (17:19 IST)
உலகத்து இன்பமெல்லாம் ப்ரியாமணியின் நெஞ்சத்தில். பூச் செண்டுகள், போன் அழைப்புகள் என பரபரப்பாக இருந்தவர், தொலைபேசியிலேயே பேட்டியும் அளிக்கிறார். காரணம் ப்ரியாமணி இருப்பது ஹைதராபாத்தில். கேள்விக்கு இடமில்லாமல் அவர் அளித்த சந்தோஷ பேட்டியிலிருந்து...
தேசிய விருது என்பது நடிகையாக என்னுடைய நெடுநாளைய கனவு. அந்தக் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது.
விருது கிடைத்ததை அப்பாதான் முதலில் என்னிடம் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. விருது எனக்குதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின் தாங்க முடியாத சந்தோஷம். வானத்தில் பறப்பதுபோல் இருந்தது.
இந்த விருதுக்கு அமீர் தான் காரணம். பருத்திவீரனில் அவர் சொன்னதை செய்தேன். அதேபோல் என்னை அறிமுகப்படுத்தயி பாரதிராஜா, பாலுமகேந்திராவும் எனக்கு இந்த பெருமை கிடைக்க காரணமானவர்கள்.
பருத்திவீரன் வெளிவந்த போதே விருது கிடைக்கும் என்றார்கள். அதுவே சந்தோஷமாக இருந்தது. நிஜமாகவே விருது கிடைத்த பிறகு சந்தோஷத்தில் திளைக்கிறேன்.
விருது கிடைத்திருப்பது என்னுடைய பொறுப்பை அதிகரித்திருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் எச்சரிக்கையாக படங்களை தேர்வு செய்வேன். ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் கடுமையாக உழைப்பேன்.
இந்த விருது விடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும், முக்கியமாக பருத்திவீரனில் என்னுடன் நடித்தவர்களுக்கும், டெக்னிஷியன்களுக்கும் என்னுடைய நன்றி!