முழுக்க முழுக்க எதார்த்தமான படம் - இயக்குனர் மஜீத்!
செவ்வாய், 13 மே 2008 (17:22 IST)
webdunia photo
WD
இளைய தளபதி விஜய் நடித்த 'தமிழன்' மற்றும் அருண் விஜய் நடித்த 'துணிச்சல்'. தற்போது 'கி.மு.' என்ற படத்தை இயக்கி முடித்து இம்மாதம் வெளிவர இருக்கிறது. இப்படங்களின் இயக்குனர் ஏ. மஜீத் அவர்களை தமிழ்.வெப்துனியாவிற்காக சந்தித்தோம்.
உங்களுக்கு சினிமா மீது எப்போது, எப்படி ஆர்வம் வந்தது?
தமிழனா பொறந்த ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு கால கட்டத்துல அவங்களுக்கு ஒரு பிடித்தமான சினிமா ஹீரோ இருப்பாங்க. அப்படி நான் மிகவும் ரசக்கும் ஹீரோ புரட்சித் தலைவர். அவரோட படம் ரிலீஸ் ஆகற அன்னைக்கு திருவிழாதான். ·ப்ரெண்ட்ஸ்ங்களோட தியேட்டருக்குப் படையெடுப்போம். அப்படி அவரோட ரசிகனாகவும், பள்ளிக்கூட பருவத்துலேயே சினிமா மேல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுப் போச்சி. அந்த ஆர்வமும், சினிமா பற்றியான விவாதங்களும்தான் எனக்குள்ள ஒரு கலைஞனை உருவாக்கினதுன்னு சொல்லலாம்.
'தமிழன்' படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னால்தான் இரண்டாவது, மூன்றாவது படமான துணிச்சலையும், கி.மு.வையும் இயக்கினீர்கள். ஏன் இந்த இடைவெளி?
சினிமாங்கறது ஒரு கமர்ஷியல் மீடியா. ஒரு கலைஞனோட வெற்றிதான் அவனோட வாழ்க்கையைத் தீர்மானிக்குது. ஒரு சேட்டு நகைக் கடை வெச்சி தோத்துட்டார்னா. அடுத்து ஒரு பேன்ஸி ஸ்டோரோ, வட்டிக் கடையோ வெச்சுப் பிழைச்சுக்கலாம். ஆனால், சினிமாவுல ஒரு படம் சரியாப் போகலைன்னா உடனே அந்த இயக்குனரோ நடிகரோ ஐயாயிரம் சம்பளத்துல ஆஃபீஸ் வேலையோ, செக்யூரிட்டி வேலையோ பார்க்கப் போக முடியாது. போராடனும். எந்த சினிமாவுல ஜெயிக்கனும்னு வந்தமோ அந்த வெற்றி கிட்டும் வரை இடைவிடாத முயற்சி இருந்துகிட்டே இருக்கனும். அதுவும் இந்த சினிமாங்கிறது கமர்ஷியல் மீடியா மட்டும் இல்லாம, அதிகமான பணப்புழக்கம் உள்ள மீடியா. நிறைய தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிக்கத்தான் வருவாங்க. அதுதான் யதார்த்தமும் கூட. ஒரு இயக்குனரோட படம் சரியாப் போகலைனா பொண்டாட்டியா இருந்தாலும் அவங்களோட பார்வை கொஞ்சம் நாளைக்கு வேற மாதிரிதான் இருக்கும்.
இருட்டுல நிக்கிற மாதிரி மத்தவங்க கண்ணுக்குத் தெரியமாட்டோம். அதனாலத்ன் எப்பவும் அவங்கமேல ஒரு வெளிச்சம். அதாவது வெற்றி பட்டுக்கிட்டே இருக்கணும். அதனால இந்த இடைவெளி என்னை, என் கதைகளை மெருகேத்திக்கிறதுக்கான நாட்களாகத்தான் எடுத்துக்கிட்டேன்.
'கி.மு.'வுக்கு முன்னால் துணிச்சலா, துணிச்சலுக்கு முன் கி.மு.வா?
இரண்டு படங்களும் தயார் நிலையில்தான் இருக்கு. ஆனாலும் கி.மு.தான் இந்த மாதம் ரிலீஸ் ஆகப்போகுது. அதுக்கு அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் துணிச்சல் வெளியாகும். அடுத்தடுத்த மாதங்கள் ஒரு இயக்குனரோட படங்கள் வெளியாகுதுன்னா அதுவும் சந்தோஷமான விஷயம்தான்.
'கி.மு.' படம் மிகவும் எதார்த்தமான படம் என்று சொல்கிறீர்கள். எந்த அளவுக்கு எதார்த்தம் இந்தக் கதையில் இருக்கிறது?
அடுத்து ஒரு படம் பண்ணனுமேன்னு உட்கார்ந்து யோசிச்ச கதையில்ல இந்த கி.மு. என்னோட நண்பனின் வாழ்க்கையில நடந்த, அந்த சம்பவங்களில் பங்கெடுத்துக் கொண்ட என்னோட அனுபவம். இப்படி எல்லாமே சில வருஷங்களுக்கு முன்னாடி நடந்த உண்மை சம்பவம்தான் இந்தக் கதை. காதலிச்ச அந்தக் காதல் ஜோடியோட வேதனை, பட்ட சிரமங்கள் எல்லாம் அச்சு அசலா இதுல காட்டியிருக்கேன்.
அந்தக் காதலுக்கு வந்த எதிர்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழகத்து தென் மாவட்டத்துல இருக்கிற ஒவ்வொரு மாவட்டங்களுக்கா ஓடிப்போயி தஞ்சம் அடைஞ்சாங்க. அப்படி எந்த இடங்களுக்கு போனாங்களோ அந்த இடங்கள் எனக்கும் தெரியுங்கிறதால அந்தந்த மாவட்ட இடங்களுக்கே யூனிட்டோட போய படம் புடிச்சிட்டு வந்திருக்கோம். நடந்த சம்பவங்கள், நடந்த இடங்கள், நடந்த கதையை அப்படியே படம் எடுத்ததால இது முழு யதார்த்தமான கதைதான்.
புதிதாக நடிகர் அவதாரமும் எடுத்திருக்கிறீர்களாமே உண்மையா?
உண்மைதான். இது என்னோட குருநாதர் எஸ்.ஏ. சந்திரசேகர் சாரோட பாணி. அவர் இயக்கும் படங்களில் ஆங்காங்கே எங்காவது ஒரு சீனில் நடிப்பார். அது மாதிரி நானும் நடிப்பேன். இந்த 'கி.மு.'வில் ஒரு சின்ன கேரக்டர் பண்ணியிருக்கேன். அதையும் பார்த்துட்டுச் சொல்லுங்க.
ஹீரோ - ஹீரோயின் இருவரையும் புதிதாக அறிமுகம் செய்திருக்கிறீர்களே?
இந்தக் கதையைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். கதைதான் ஹீரோ. அதுவுமில்லாம எனக்கு எந்த ஒரு சாயலும், எதிர்பார்ப்பும் இல்லாத பையனா இருக்கணும். சில படங்கள் பண்ணின ஹீரோ, ஹீரோயினை போட்டிருந்தாலும் கூட இந்த அளவுக்கு படம் எதார்த்தமாக வந்திருக்குமான்னு சொல்ல முடியாது. அதனாலதான் புதுமுகங்களை அறிமுகம் செஞ்சேன். என்னுடைய கற்பனையில் எப்படிப்பட்ட பையன் - பொண்ணு இருக்கணும்னு நெனச்சனோ அதே மாதிரிதான் இந்த ஹசன் - சாரிகா இருந்தாங்க. அதே மாதிரி எதார்த்தமாக நடிச்சாங்க.
கதையோட ஒவ்வொரு சீனையும் அவங்ககிட்ட சொல்லிட்டு வந்துடுவேன். நடிக்காம இந்த சீன்ல நீங்க எப்படி பேசுவீங்க, சிரிப்பீங்க, நடப்பீங்களோ அப்படி இயல்பா இருக்கணும்னு மட்டும் அடிக்கடி சொல்வேன். அதனாலதான் திரும்பத் திரும்ப இது எதார்த்தமான படம்னு சொல்றேன்.
வடிவேலு இந்தப் படத்திற்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்?
படத்தோட மற்றொரு பலம்னா அது வடிவேல்தான். சாதாரணமாவே வடிவேலுவோட காமெடி மக்கள் மத்தியில் மறக்க முடியாத விஷயமாவும், அடிக்க டி.வி. மீடியாவுல வர்ற காட்சிகளாவும் இருக்கும். மளிகைக் கடை ஓனரா வர்றார். வேற கடைகள்ல போயி நூறு கிலோ ஒவ்வொரு அயிட்டத்துலயும் வாங்கப் போறேன். அது நல்லதா கெட்டதான்னு டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும். கொஞ்சம் 'சேம்பல்' கொடுன்னு கேட்டு வாங்கிட்டு வந்து அப்படி சேர்த்ததை எல்லாம் வச்சுதான் அவரோட கடைய ஆரம்பிச்சிருப்பார். இப்படி படம் முழுக்க அவரோட காமெடி வயிறைப் பதம் பார்த்துடும்.
இளமையான காதல் படம் என்றால் ஆங்காங்கே சின்னச்சின்ன சில்மிஷமான காட்சிகள் உண்டா?
ரொம்ப ஓவரா இல்லாம கதைக்கு என்ன தேவையோ அதுமட்டும் வெச்சிருக்கேன். இளவயசு முதல் பெரியவங்க வரைக்கும் ரசிக்கும்படியா இருக்கும். காதலிக்கிறவங்க, காதலிக்காதவங் எல்லாருக்கும் இந்தப் படம் புடிக்கும். இந்த அளவுக்கு நான் ஒரு எதார்த்தமான படம் எடுக்க கரணம் 'யாக்கோ ·பிலிம்ஸ்' தயாரிப்பாளர் யாகூப்தீன் தான். அப்புறம் ஒளிப்பதிவாளர் கதாக. இளவரசன், இசை இளங்கோ. கலைவாணன், பின்னணி இசை சபேஷ்-முரளி, மத்த டெக்னீஷியன் அனைவரோட முழு ஒத்துழைப்பும் இந்தப் படத்துக்கு கெடைச்சது.
சரி, உங்களோட அடுத்த படம்?
ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் 'கி.மு.' ஆடியோ ரிலீஸ் பண்ணினோம். இந்த மாத மத்தியில் படம் ரிலீஸ் ஆகப் போகுது. இதையடுத்து ஒரு கம்பெனி கூட பேசிட்டு இருக்கேன். பெரிய பட்ஜெட்ல ஆக்சன் படம். ஒரு பெரிய ஹீரோகிட்ட பேசிட்டு இருக்கேன். 'கி.மு.' வெளிவந்த இரண்டாவது வாரத்துல பூஜை போட்டு உடனே ஆரம்பிக்கிறேன்.