காமெடிப் படங்களில் நடிப்பதில் கவலையில்லை!
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (15:03 IST)
காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படமா? கூப்பிடு ஜோதிர்மயியை என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து நகைச்சுவை படங்களின் நாயகியாக உலா வருகிறார் ஜோதிர்மயி. அவரளித்த பேட்டியில் இருந்து...
இப்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
பசுபதியுடன் இயக்குநர் மூர்த்தியின் வெடிகுண்டு முருகேசன் படத்தில் நடிக்கிறேன். அறை எண் 305-ல் கடவுள் 18ஆம் தேதி வெளியாகிறது.
தொடர்ந்து காமெடிப் படங்களில் நடிப்பது ஏன்?
இந்த மாதிரிப் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. காமெடிப் படங்கள்தான் என்றாலும் வெரைட்டியான படங்களில்தான் நடிக்கிறேன். காமெடிப் படங்களில் நடிப்பதால் என்கு எந்தக் கவலையும் இல்லை.
சினிமாவில் உங்கள் ரோல் மாடல் யார்?
நடனத்தில் ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் மாதிரியும், நடிப்பில் ஸ்மிதா பட்டீல் போலவும் வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை.
பெரியார் படத்தில் நடித்தது?
என்னுடைய கேரியரில் மறக்க முடியாத அனுபவம் அது. அந்த மாதிரிப் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.
ஒரே நேரத்தில் பலமொழிப் படங்களில் நடிக்கிறீர்களே?
எனக்கு மலையாளம் தவிர, தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளும் தெரியும். பல மொழிகள் தெரிந்ததால் பல மொழிப் படங்களில் நடிக்கிறேன்.
இன்றைய நடிகைகள் கவர்ச்சியாக மாடர்ன் உடையில் நடிப்பதாகக் குற்றச்சாற்று உள்ளதே?
கவர்ச்சி பார்ப்பவர்களின் கண்களில்தான் உள்ளது. சேலை கட்டியும் கவர்ச்சி காட்டலாம். அதேநேரத்தில் சின்ன ஆடை அணிந்தும் கவர்ச்சி இல்லாமல் நடிக்கலாம்.
கடுமையான போட்டி நிறைந்த உலகில் உங்களுடைய இடம் எது என்று நினைக்கிறீர்கள்?
திரையுலகில் நடிகைகளுக்கு இடையே போட்டி இருப்பது உண்மைதான். ஆனால் நெ.1, நெ.2 என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை. அதுபற்றிக் கவலையும் இல்லை.
நீங்கள் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞர் இல்லையா?
சின்ன வயதில் இருந்தே எனக்கு நடனம் பிடிக்கும். முறைப்படி நடனம் கற்றுக்கொண்டேன். சினிமா மூலம் இப்போது நடனத்தை வளர்த்து வருகிறேன்.