தெக்கத்திப் பொண்ணு மூன்று குடும்பங்களின் கதை - பாரதிராஜா!

புதன், 9 ஏப்ரல் 2008 (18:56 IST)
webdunia photoFILE
கட்டுப்படுத்தாத உணர்ச்சியும், மட்டுப்படுத்தாத நெகிழ்ச்சியுமாக வெளிப்படும் பாரதிராஜாவின் பேச்சைக் கேட்பதே ஒரு சுகானுபவம். தனது புதிய தொலைக்காட்சித் தொடர் கு‌றித்தும், திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதம் குறித்தும் அவர் அளித்த பேட்டியிலிருந்து...

நீங்களும் தொலைக்காட்சிக்கு வந்துவிட்டீர்களே?

சினிமாவில் சொல்லப்படுகிற முக்கியமான உணர்வுகளை தொலைக்காட்சி சீரியல்கள் தொலைத்து விடுகின்றன என்று விமர்சித்தவன் நான். சினிமாவில் இரண்டேகால் மணி நேரத்தில் சொல்ல முடியாததை சீரியலில் விசாலமாக கூறலாம். சீரியல்களால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் இப்போது புரிந்துகொண்டேன்.

உங்கள் தெக்கத்திப் பொண்ணு தொடர் பற்றி சொல்லுங்கள்...

இது மூன்று கிராமங்களில் உள்ள மூன்று குடும்பங்களில் நடக்கிற கதை. தலைமுறை தலைமுறையாக அந்த குடும்பத்திற்குள் இருந்துவரும் பாசப் பிணைப்புகள், பங்காளி உறவு, காதல் போராட்டங்கள் என பகையும், நேசமும் கலந்த கதை. என்னுடைய 16 வயதினிலே, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா படங்களைப் போன்ற கிராமத்து வாழ்க்கையை இதில் பார்க்கலாம். தேனி வட்டார வழக்கில் இதை எழுத்திருக்கிறேன். கிராமத்துக் கலாச்சாரத்தை முழுமையாகச் சொல்லப்போகும் இத்தொடர், சினிமா பார்ப்பது போலவே இருக்கும்.

எத்தனை எபிசோடுகள் எடுப்பதாக திட்டம்?

ஒரு குடும்பத்து கதைக்கு நூறு எபிசோடுகள் என்றாலும் மூன்று குடும்பத்திற்கும் சேர்த்து முன்னூறு எபிசோடுகள். தேவை மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து மூவாயிரம் எபிசோடுகள் வரை எடுக்கலாம்.

தமிழ்த் திரையுலகமே திரண்டு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளாதது ஏன்?

காவிரி பிரச்சனையில் நடிகர் நடிகைகளை திரட்டி நெய்வேலியில் நான் ஒரு போராட்டத்தை நடத்தினேன். அதற்கு ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால், இந்தப் போராட்டத்திற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. நெய்வேலியில் ஒன்றரை லட்சம் பேரை திரட்டி நடத்திய போராட்டத்திற்கு மறுநாள் ஒரு நடிகர் தனியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவர் எதற்காக அப்படி தனியாக நடத்தினார் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.

ஒகேனக்கல் பிரச்சனையில் உங்கள் கருத்து என்ன?

மற்றவர்களிடம் உள்ள ஒற்றுமை, மொழி உணர்வு நம்மிடம் இல்லை. வந்தாரை வாழவைக்கும் நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்த மண்ணின் மைந்தர்கள்தான் நாடாள வேண்டும். மண், மொழி, இனம் சம்பந்தப்பட்ட விஷயம் இது.

சத்யராஜின் உண்ணாவிரதப் போராட்ட பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் தான் உணர்வுப்பூர்வமாக பேசினார். அந்த தமிழுணர்வை நான் வரவேற்கிறேன். அதேநேரம் சக நடிகர் பற்றி அவர் பேசியதை மேடை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கலாம். அவர் பேசியதில் மூன்றில் ஒரு பங்குதான் எனக்கு உடன்பாடு.

வெப்துனியாவைப் படிக்கவும்