"இந்தியில் சூப்பர் ஸ்டார்கள் கிடையாது" - கே.எஸ். அதியமான்!
சனி, 16 பிப்ரவரி 2008 (15:47 IST)
webdunia photo
FILE
மனித உறவுகளின் மெல்லிய உணர்வுகளை கவித்துவத்துடன் வெளிப்படுத்துபவை கே.எஸ். அதியமானின் படங்கள். தூண்டில் படத்தின் இறுதிகட்ட வேலையில் இருந்தவரை வெப்துனியாவுக்காக சந்தித்தோம். கேள்விகளுக்கு தயக்கமின்றி வெளிப்படும் அதியமானின் பதில்கள் சுதந்திரமான கலைஞர்களுக்கு மட்டுமே உரியது.
மெல்லிய உணர்வுகளை முதன்மைப்படுத்தியே படங்களை இயக்கி வர்றீங்க. தூண்டிலும் அந்த வகை படமா?
மெல்லிய உணர்வுகளைத்தான் இதுலயும் கையாண்டிருக்கேன். அதே நேரம் மென்மையான உணர்வுகளில் முரண்பாடு ஏற்படும் போது ஒரு வலி வருமே... அதையும் இதுல பதிவு செய்திருக்கேன்.
தூண்டில் முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டிருக்கு. இது பார்வையாளர்களுக்கு ஒரு வித அந்நியத் தன்மையை கொடுக்காதா?
கதை நடிக்கிற இடம்தான் லண்டனே தவிர, நான் அங்கேயிருக்கிற தமிழர்களை பற்றித்தான் எடுத்திருக்கேன். தமிழ்நாட்ல ராமநாதபுரம், திருநெல்வேலி, பரமகுடி இங்கெல்லாம் பார்க்க முடிகிற அப்பர் மிடில் கிளாஸ் மனிதர்களின் கதைதான் தூண்டில். லண்டன்ங்கிறது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு புது அனுபவமா இருக்குமே தவிர, ஒரு கட்டத்துல பார்வையாளன் ஈஸியா கதைக்குள்ள போயிருவான்.
கதையின் தேவையை முன்னிட்டு லண்டனை தேர்வு செய்தீர்களா அல்லது லண்டனுக்காக எழுதப்பட்ட கதையா?
லண்டன்ல படம் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதே நேரம் நம்மூர்ல எடுக்க முடியாதபடி இந்தக் கதையில சில விஷயங்களும் இருக்கு.
அதை கொஞ்சும் விளக்க முடியுமா?
இது நான்கு பேருக்குள்ள நடக்கிற கதை. அவங்களுக்குள்ள ஒரு பிரச்சனை வரும்போது அதை வெளிப்படுத்திக்க அந்நியமான இடத்துல யாரும் இல்லை. இதே இது நம்மூர்னா அக்கா, மாமா, சித்தப்பான்னு பலர் இருப்பாங்க. அவங்ககிட்ட அதை பகிர்ந்துக்கலாம். அதுக்கு வழியில்லாத இடத்துல அந்த உணர்வுகள் எப்படி ஒரு கொந்தளிப்பா மாறுதுங்ககிறதுதன் இந்த கதையோட முக்கியமான அம்சம். இதை நம்ம ஊர்ல எடுக்க முடியாது.
வழக்கமான உங்க படங்களிலிருந்து மாறுபட்டு முதன்முறையா காமெடிக்காக விவேக்கை பயன்படுத்தியிருக்கீங்க... ?
என்னோட படங்கள்ல காமெடி நடிகர் இல்லைங்கிற குறை என் வீட்லயே இருக்கு. நான் சந்திக்கிறவங்களும் இதை ஒரு குறையா சொல்லியிருக்காங்க. தொட்டாச் சிணுங்கி, சொர்ணமுகினு என்னோடப் படங்களைப் பார்த்திங்கன்னா நகைச்சுவை காட்சிகளில் தியேட்டர்ல எல்லோரும் ரசிச்சு சிரிக்கிறதை பார்த்திருக்கேன். பிறகுதான் அவங்களோட பிரச்சனை படத்துல நகைச்சுவை இல்லைங்கிறது இல்லை, காமெடி நடிகர் இல்லைங்கிறதுதான்னு புரிஞ்சுகிட்டேன். அதுதான் விவேக்.
ஷாம், சந்தியா, திவ்யா... இவர்களை தேர்ந்தெடுக்க பிரத்யேகக் காரணம் ஏதாவது?
webdunia photo
WD
இந்தப் படம்னு இல்ல, எந்தப் படமா இருந்தாலும் கதைக்கு யார் பொருந்தி வர்றாங்களோ அவர்களைத்தான் தேர்ந்தெடுப்பேன். லண்டன் பேக்ட்ராப்ல காட்டும் போது, அழகா குட்லுக்கிங்கா இருக்கணும். முக்கியமா ஸ்கிரிப்ட்ல தன்னோட கருத்தை திணிக்காத நடிகர் வேணும். அதுக்கு ஷாம் பொருத்தமா இருந்தார். சந்தியா கேரக்டர்ல நான் எதிர்பார்த்தது சின்ன வயசு ரேவதி மாதிரி ஒரு நடிகையை. அவங்க அழும்போது அந்த வலி பார்வையாளனையும் பாதிக்கிற மாதிரியான ஒரு முகம். அதுக்கு சந்தியா கரெக்டா இருந்தாங்க. கிளாமருக்காக திவ்யாவை கன்னடத்துலயிருந்து கொண்டு வந்தோம்.
சந்தியா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்களோ?
இதை எல்லோரும் தப்பா புரிஞ்சிருக்காங்க. சந்தியாவுக்கு குழந்தை பிறப்பதற்கு மூணு வருஷங்கள் முன்னாடி நடக்கிற கதை இது. உண்மையில் ரொம்ப யூத்·புல்லான படம் இது.
நீங்க ஏன் ஆக்ஷன் படங்கள் எடுப்பதில்லை?
எனக்கு ஆக்ஷன் படம் எடுக்கத் தெரியாது. பத்துப் பதினைஞ்சு பேரை ஒருத்தர் அடிக்கிறது, அப்புறம் பன்ச் டயலாக் இதெல்லாம் எனக்கு வராது. எது நமக்கு தெரியுமோ அதை செய்யிறதுதானே சரி. என்னோட படங்கள் பெருசா ஓடலைன்னாலும் நாலு வாரம் நல்லாப் போகுது. ஏதாவது ஒரு பிரிவில் விருதும் கொடுக்கிறாங்க. நல்ல பெயர், தேவையான பணம்னு இதுவே திருப்தியாயிருக்கு.
மாஸ் ஹீரோக்களை வைத்து நீங்க படமெடுப்பதில்லையே?
எனக்கும் ஆசைதான். ஆனா, அவங்களுக்கு என் படத்தோட கதை பிடிப்பதில்லையே?
ஆனால், அதே கதையில் ஷாருக் கான் மாதிரியான இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்களே...?
இந்தியில் இங்கே மாதிரி சூப்பர் ஸ்டார்ஸ் கிடையாது. அங்கே எல்லாருமே ஆர்ட்டிஸ்ட் மட்டும்தான்!