சி‌ம்பு அ‌ல்ல இ‌னி சிலம்பரசன் தா‌ன்

சனி, 22 டிசம்பர் 2007 (13:04 IST)
இதுவரை வந்த படங்களின் மூலம் சிம்புவுக்கு 'கெளபாய்' இமேஜ் இருந்தது. `மன்மதன்', `வல்லவன்', `கெட்டவன்' என்று படத் தலைப்புகளே அதை உறுதிபடுத்தின.

'சிலம்பாட்டம்' மூலம் நல்லவன் இமேஜை பெற போராடி‌யிரு‌க்‌கிறா‌ர் சிம்பு. படத் தொடக்க விழாவில் அதுப‌ற்‌றி நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இ‌னி...

சிம்பு என்றாலே வம்புதான் என்ற கருத்து உள்ளதே?

முதலில் நான் சிம்பு இல்லை. இனி நான் சிலம்பரசன். சுருக்கமா சிம்பு... சிம்புன்னு கூப்பிட்டு என் ஒரிஜினல் பெயர் சிலம்பரசன்ங்கிறது காணாமல் போய்டுமோன்னு எனக்கே பயம் வந்திடுச்சு. அதனால இனி சிலம்பரசன்னே டைட்டில்ல போடச் சொல்லிட்டேன். சரி... என்ன சொன்னீங்க... சிம்பு வம்புக்காரரா? சின்ன வயசுல ஒருத்தன் யாரும் செய்யாததை செய்றப்போ விமர்சனங்கள் வரும். அவதூறுகள் வரும். அதனால என்னைப் பற்றி பேசப்படறது பற்றிக் கவலைப்படறதில்லை.

'சிலம்பாட்டம்' உங்களுக்குத் தெரியுமா?

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கத்துக்கிட்ட விஷயம் சிலம்பாட்டம். சினிமாவுக்கு என்னைத் தயார்படுத்தியபோது ஜிம்னாஸ்டிக் மாதிரியே சிலம்பாட்டம் பயிற்சியும் எடுத்து கத்துக்கிட்டேன். இதுல சின்ன வயசிலிருந்து எனக்குப் பயிற்சி உண்டு.

உங்கள் கதாபாத்திரம் எப்படி?

ரொம்ப நல்லவனா வர்றேன். இதுதான் விசேஷம். என் முந்தைய படங்கள் மூலமா எனக்கு கெட்டவன் இமேஜ் இருக்கு. அதை மாற்றும்படி இந்தப் படம் இருக்கும். `மன்மதன்', `வல்லவன்' படங்கள் இளைஞர்களை மட்டும் கவர்ந்திச்சு. அவங்க மத்தியில எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திச்சு. ஆனா ஒரு நடிகன் எல்லா தரப்பு மக்களையும் போய்ச் சேரணுமில்லையா? இந்த 'சிலம்பாட்டம்' குடும்பத்தில் உள்ள பெரியவங்க, பெண்கள் எல்லாரையும் கவரும்படி இருக்கும். குறிப்பா பெண்களைக் கவரும்படி இருக்கும்.

ஒளிப்பதிவாளர் சரவணனின் முதல் படம் இது. எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?

முதலில் எனக்கும் தயக்கமா இருந்திச்சு. மூடு இல்லாம கதை கேட்டேன். ஆனா சரவணன் சொன்ன கதை எனக்குப் பிடிச்சுப் போச்சு. பெரிய கமர்ஷியல் படமா வரும்னு நம்பிக்கை வந்திச்சு. ஓகே சொல்லிட்டேன். 'சிலம்பாட்டம்' நிச்சயமா எனக்கு இமேஜில் திருப்புமுனையா இருக்கும்.

கதை விவாதங்களில் தலையிடுவது - பங்கெடுப்பது உண்டா?

சரவணன் மேல நம்பிக்கை இருக்கு. இதில் சொன்னபடி நடிக்கிறது மட்டுமே என் வேலை. அமைதியான பையன்... ரொம்ப சாதுவான பையன். ஆக்ரோஷமா மாறுவதுதான் கதை. இதில் கோயில் குருக்களாவும் வர்றேன். கிராமம் நகரம் ரெண்டிலும் கதை நகரும். கும்பகோணம் ஒரு பாதி என்றால் மறுபாதியில் தென் தமிழ்நாடுன்னு கதை போகுது. இதுல 'ஓரம்போ' ஜான்விஜய் வில்லனா வர்றார். சனா கான்கிற புதுமுகம் ஹீரோயின். இன்னொரு ஹீரோயின்கூட இருக்காங்க. யார்னு இன்னும் முடிவாகலை.

இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் அப்பா பாட்டு பாடுகிறாரா?

இதுவரை தெரியலை. தினா சார் தான் இசை.

கெட்டவன், சிலம்பாட்டம் எது முதலில் வரும்?

'சிலம்பாட்டம்'தான் முதலில் வரும். லட்சுமி மூவிமேக்கர்ஸ் சீக்கிரமா வெளியிட்டுடுவாங்க. எனக்கு இளைஞர்கள் மட்டும்கிற ஒன் சைடு ஆடியன்ஸ் போதாதுன்னு தோணுது. அதுக்கேத்த கேரக்டரா செலக்ட் பண்ணி பண்றேன். 'கெட்டவன்' படத்துல ஆரம்பிச்சாச்சு. 'சிலம்பாட்டம்' அப்படி வர்ற முதல் படமா இருக்கும். இதுல விச்சுன்னு ஐயர் கேரக்டர் பண்றேன். இன்னொரு கெட்-அப்லயும் வருவேன். அது சஸ்பென்ஸ்.

இது ரீமேக் படங்களின் சீசன். நீங்களும் ரீமேக் படங்களில் நடிப்பீர்களா?

என் படங்கள் ஆந்திராவிலும் ஓடுது. அங்கே நல்ல வரவேற்பு இருக்கு. எனக்கு தமிழ், தெலுங்குல ஒரே நேரத்துல தயாராகும் படத்துல நடிக்கிற ஐடியா இருக்கு. அது அடுத்த வருஷம் நடக்கும்னு நினைக்கிறேன். ரீமேக் படங்கள் தெலுங்கிலிருந்து பண்ணினா அங்கே உள்ள மார்க்கெட் அடிவாங்கும். அதனால எனக்கு ரீமேக்ல இப்போ இஷ்டமில்லை. பழைய தமிழ்ப் படங்கள் கூட ரீமேக் ஆகுது. எனக்கு இதுவரைக்கும் அந்த ஐடியா இல்லை.

உங்கள் படங்கள் காதல் தோல்வி, சைக்கோ இப்படிச் சுற்றி வருகிறதே...?

நான் பாரதிராஜா சார் போல, அமீர் சார் மாதிரி அனுபவம் இல்லாதவன். அவங்க வாழ்க்கையை பார்த்தவிதம் அப்படி. நான் இந்தக் காலத்துல என் வட்டத்துல சந்திச்ச கேள்விப்பட்ட அனுபவங்களைத்தானே எடுக்க முடியும்?

காதல் பற்றி உங்கள் கருத்து?

கடவுள் பற்றி இருப்பது போல காதலுக்கும் ஆயிரம் விளக்கம் உண்டு. காதல் பற்றியும் ஆயிரம் கருத்து உண்டு. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஒரு துணை தேவை. அதனால்தான் காதல்வருது. நிஜ காதல் ஓர் அருமையான விஷயம். ஆனால் காதல் பற்றிய பார்வை நாளுக்கு நாள் மாறிக்கிட்டு இருக்கு. இன்னைக்கு சொல்றது நாளைக்கு மாறிடுது. இதுதான் யதார்த்தம்.

வெப்துனியாவைப் படிக்கவும்