நிஜ சினிமாவை வெளியிடுவது கடினம் - தங்கர்பச்சான்

சனி, 1 டிசம்பர் 2007 (17:24 IST)
webdunia photoWD
உண்மையான அசலான திரைப்படமாக உருவாகி வெளியிருக்கும் படம் 'ஒன்பது ரூபாய் நோட்டு.' கதைக்களம், நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு இசை, படமாகியிருக்கும் விதம் என பலவகையிலும் பாராட்டுகளை பெற்றிருக்கும் படமிது. ஆனால் அதன் இயக்குனர் தங்கர்பச்சான் பெரிதும் வருத்தமாக இருக்கிறார். பட அனுபவம், வெளியீடு அனுபவம் பற்றி பேசியபோது அவரது உள்ளக்குமுறல் வெடித்தது.

பட அனுபவம் பற்றி..?

இந்தப் படம் பற்றி எதுவுமே பேச மாட்டேன். பேச ஒண்ணுமில்லை. இந்தப் படம் மிகவும் கவனமாக செதுக்கி செதுக்கி உருவாக்கிய படம். இது என் நெடுநாள் கனவு. இந்தப் படத்தில் பல தகவல்களைத் தந்திருக்கிறேன். நுட்பமான பலவற்றை செய்திருக்கிறேன். பல கேள்விகள் கேட்டிருப்பேன். பதில்களும் கொடுத்திருக்கிறேன்.

சத்யராஜை தேர்வு செய்தது எப்படி?

இந்தப் படத்தில் இந்த மாதவர் படையாட்சி கேரக்டருக்கு ரஜினி சார் நடிக்க விரும்பினேன். ஆனால் அது நிகழவில்லை. ஆனால் இந்த வருத்தம் எதுவும் எனக்கு வராதபடிக்கு சத்யராஜின் நடிப்பு மிகவும் திருப்தியாக இருந்தது. படத்தில் அவரை என்னால் பார்க்கவே முடியவில்லை. அந்த மாதவராகவே தெரிகிறார். எப்படி அவர் தன்னை கரைத்து தொலைத்திருக்கிறார் என்று பார்க்கும்போது பரவசமாக இருக்கிறது. அர்ச்சனா மட்டும் சாதாரண நடிகையா? அசத்தியிருப்பது கண்டு எனக்கு திருப்தி. சூர்யகாந்த் மாதிரி எத்தனையோ பேர்... அந்தந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள்.

பாடல்களுக்கு தனிக்கவனம் செலுத்தியுள்ளீர்களா?

இந்தப் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் நான் ரசித்து உருகி எடுத்தவை. பாடல்கள் வழக்கம்போல இருக்காது. கதை சொல்லும் காட்சிப் படிமங்களாகவே இருக்கும். பரத்வாஜின் இசை என்னை பிரமிப்பூட்டியது. வைரமுத்துவின் வரிகள் படத்திற்குப் பெரிய பலம்.

படத்தில் மறக்க முடியாத அனுபவம்?

முழுப் பட அனுபவமும் எழுத ஒரு புத்தகமே வேண்டும். மிகவும் சிரமப்பட்டு ஆரம்பித்தேன். பிறகு ஒரு நல்ல தயாரிப்பாளர் எடுக்க முன் வந்தார். பணம் கொஞ்சம் கிடைத்தாலும் படப்பிடிப்புக்குப் போவோம். ஆட்களைத் தேடி, ஊர் ஊராக படப்பிடிப்புக்குப் போனோம். அதற்கு நான்பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

படம் எடுத்து முடித்தபின் பிரச்சினை முடிந்து இருக்குமல்லவா?

படத்தை முடித்துவிட்டு பல கஷ்டங்கள். வெளியிட தியேட்டர் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு உண்மையான தமிழ்ப்படத்துக்கு தமிழனின் கதையை அதன் உண்மையான தன்மையோடு சொல்லப்பட்டிருக்கும் தமிழ்ப்படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்றால் என்ன கொடுமை இது? மிகவும் மனம் நொந்து போய்விட்டேன்.

ஒரே படத்தை இருக்குற மொழியில் எல்லாம் எடுத்துவிட்டு இங்கு ரீமேக் செய்தால் அதற்கு பல தியேட்டர்கள் தருகிறார்கள். முழுமையான வியாபாரப் படத்துக்கு தியேட்டர் கிடைக்கிறது. போலி சினிமாக்களை வெளியிடுவது சுலபமாக இருக்கிறது. நிஜ சினிமாவை வெளியிடுவது கடினமாக இருக்கிறது.

நல்ல படம் எடுக்க வருபவர்களை இப்படி அவமதித்தால் யார் படமெடுக்க வருவார்கள்? இந்தக் கட்டமைப்பு மாறவேண்டும். அப்போதுதான் தரமான படங்கள் வெளியாகும்.

இறுதி தீர்ப்புக்கு நான் ஊடகங்களின் சக்தியைத்தான் நம்பியிருக்கிறேன். இந்தப் படம் எனக்கு முழு திருப்தி நிறைவு தந்த படம். அதுமட்டும் உண்மை. படத்தை வெற்றி பெற வைக்காவிட்டால் எனக்கு அவமானமில்லை தமிழ்நாட்டுக்குத்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்