பருத்திவீரன்' `மலைக்கோட்டை' என அடுத்தடுத்து வெற்றிகள் அவரை ஆனந்த அலையில் ஆழ்த்திடவே பூரிப்பிலிருக்கிறார்.
இனி ப்ரியாமணியுடன் சில ப்ரியமான நிமிடங்கள்...
'பருத்திவீரன்' வெற்றியை எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பருத்திவீரன் படத்தைப் பொறுத்தவரை கதை கேட்டபோது, படமானபோது, டப்பிங் பேசியபோது இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ரொம்ப ரொம்ப நம்பிக்கை தந்திச்சு. அமீர்சார் அவ்வளவு பர்பக்ஷன் பார்த்தார். அவரது சின்சியாரிட்டிக்கு நிச்சயம் சக்சஸ் கிடைக்கும்னு எல்லாருமே நம்பினோம். எல்லாமே பலிச்சது.
'மலைக்கோட்டை'யில் தடாலடியாக வழக்கமான நாயகியாகிவிட்டீர்களே?
இது பர்பஸா நானே செஞ்சதுதான். `பருத்திவீரன்' கேரக்டர் ஆழமா அழுத்தமா ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. அதிலிருந்து நான் வெளியில் வரணும். அந்த இமேஜை நான்தான் உடைச்சு ஆகணும். அதுக்குத்தான் 'மலைக்கோட்டை' பண்ணினேன். இது ஒரு ஆர்ட்டிஸ்டோட கடமைன்னு நினைக்கிறேன். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு தேக்கம் வந்துவிடக்கூடாது, வெரைட்டி ரொம்ப முக்கியம்.
அதற்காக இப்படியா கவர்ச்சி நாயகியாக களத்தில் இறங்கவேண்டும்?
நான் வழக்கமான ஹீரோயினா வந்தால் கூட அது கிளாமராத் தெரியுது. அதுக்குக் காரணம் 'பருத்திவீரன்' படம்தான். அந்த முத்தழகு கேரக்டர் உங்க மனசுல ஆழமா பதிஞ்சிருக்கிறதுதான் காரணம். அதோட தாக்கத்தால தான் அடுத்ததை ஒப்பிட்டுப் பார்த்து இப்படி கேட்கத் தோணுது. எப்படிப் பார்த்தாலும் அது அந்த கேரக்டரின் வெற்றி. அதுக்கெல்லாம் காரணம் டைரக்டர் அமீர் சார்தான்.
உங்களுக்குத் தாமதமாகவே இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று கூறலாமா?
ஆமாம். அதற்காக வருத்தமில்லை. இவ்வளவு தாமதமா எனக்கு `பருத்திவீரன்' முத்தழகு மாதிரி ஒரு கேரக்டர் வருதுன்னா அந்த தாமதத்துக்கு அர்த்தமும் மதிப்பும் இருக்குன்னுதான் தோணுது. எல்லாத்துக்கும் டைம் வரணும். இதுதான் என் பாலிசி.
'கண்களால் கைது செய்' படத்தில் அறிமுகமானாலும் பாரதிராஜாவின் அறிமுகங்களுக்குக் கிடைத்த உயரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையே ஏன்?"
நான் இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்து ஒரு முழு நடிகையா உருவாகியிருக்கேன்னா அதுக்கு பாரதிராஜா சார், பாலுமகேந்திரா சார், அமீர் சார் இந்த மூணு பேராலத்தான். ஒவ்வொருத்தருக்கும் என் முன்னேற்றத்துல பங்கு உண்டு. முன்னாடியே சொன்னமாதிரி அததுக்கு ஏத்த மாதிரித்தான் டைம் வரும். ஸ்லோ அண்ட் ஸ்டெடிதான் என்னைக்கும் நல்லது. என் கேரியர் இப்படித்தான் இருக்கும். ஒவ்வொரு ஸ்டெப்ல ஏறி நின்னு நிதானமாத்தான் மேல வந்திருக்கேன்.
படங்களைத் தேர்வு செய்யும்போது நீங்கள் கடைபிடிக்கும் கொள்கை எது?
என் கேரக்டர் வித்தியாசமா இருக்கணும். ஒரு கேரக்டரை ஒரு முறைதான் செய்யணும். ரிபீட் ஆகக்கூடாது. படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கிற மாதிரி காமெடி ரோல் பண்ணணும்கிற ஆசை இருக்கு. இனி வரும் என் படங்களில் படத்துக்குப் படம் வித்தியாசமா என்னைப் பார்க்கலாம்.
உங்கள் நடனத் திறமையைப் பார்த்து விஷால் வியந்திருக்கிறாரே?
அவரது ஆக்ஷன் பார்த்து நானும் ஆச்சரியப்பட்டிருக்கேன். அவருக்கு காமெடியும் நல்லா ஒர்க் அவுட் ஆகுறது ஸ்பெஷல்தான். எனக்கு டான்ஸ்ல ஆர்வம் அதிகம். படம் முழுக்க டான்ஸ் ஆடிட்டே இருக்கணும் அப்படி ஒரு கேரக்டர் பண்ண ஆசை இருக்கு.
தெலுங்குப் படங்களில் மட்டும் கவர்ச்சியாக நடிக்கிறீர்களாமே?
சினிமா ஒரு கமர்ஷியல் உலகம். ஒரு கமர்ஷியல் படத்துல நடிக்கிறப்போ அந்த கேரக்டருக்காக காஸ்ட்யூம்ஸ் போட்டுக்கிறதுல தப்பில்லை. வழக்கமான ஹீரோயின் பண்ற அளவுக்குத்தான் நானும் பண்ணியிருந்தேன். அதுல பெரிசா விவாதம் பண்ற அளவுக்கு ஒண்ணுமில்லை.
பாரதிராஜாவின் 'கணகளால் கைது செய்', பாலுமகேந்திராவின் 'அது ஒரு கனாக்காலம்' இரண்டும் வெற்றி பெற்றிருந்தால் உங்கள் நிலை எப்போதோ மாறியிருக்கும் அல்லவா?
இப்பவும் ஒண்ணும் மோசமில்லை. நல்லாத்தான் இருக்கேன். பாரதிராஜா சார், பாலுமகேந்திரா சார் படங்கள் பெரிசா ஹிட் ஆகலைன்னாலும் அவங்க படத்துல நடிச்ச அனுபவம் எனக்கு பெரிய லாபம்தானே... இப்படித்தான் வாழ்க்கையை பாசிடிவா பார்க்கணும்.