நேரடி‌ப் ப‌ட‌ங்களை இய‌க்க ஆசைத‌ா‌ன் - இயக்குனர் எம். ராஜா

சனி, 24 நவம்பர் 2007 (12:14 IST)
அப்பா எடிட்டர் மோகன் தயாரிப்பாளர், தம்பி ஜெயம் ரவி நாயகன். இந்தக் குடும்பக் கூட்டணியில் படம் இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர் `ஜெயம்' ராஜா வெளிநிறுவனத்துக்கு இயக்கும் முதல் படம்தான் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. படத்தின் வெளிநாட்டுப் பயணத் திட்டமிடலின் பரபரப்பிலிருந்த ராஜாவிடம் பேசியபோது... அவசர பதற்றத்திலும் நிதானமாகப் பேசினார்.

நேரடிப்படம் ரீமேக் படம் இவற்றை இயக்குவதில் என்ன வேறுபாடு ஒப்பிட முடியுமா?

நிச்சயமாக இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறான அனுபவங்கள். இதை ஒப்பிட்டுப் பார்ப்பது எனக்கு சரியானதாகப் படவில்லை. ரீமேக் என்பது வெறும் மொழி மாற்றும் வேலையல்ல. எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. அதே கதையை நம்மூர் பாத்திரங்கள் மூலம் நம் கலாச்சாரத்தில் சொல்வது மிகவும் கடினமான வேலை. எனவே இப்படி யாரும் எளிதாக ஒப்பிட்டுவிட வேண்டாம்.

அப்படியானால் நேரடிப் படத்தை எளிதாக எடுத்துவிடலாமே...?

எனக்கும் நேரடிப் படத்தை இயக்கும் ஆசை நிறையவே உள்ளது. எனக்கு வரும் ரீமேக் வாய்ப்புகள் தானாக அமைவது. இது கூட சவாலான விஷயம். ஒரு மொழியில் வெற்றி பெற்றுவிட்ட ஒரு படத்தை மறுபடியும் அதே நிறத்தில்... அதே தரத்தில் உள்ளூர் கலாச்சாரத்துக்கு மாற்றுவது என்பது நிச்சயம் சவாலான விஷயம். நான் இதில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறேன் என்கிற நம்பிக்கை உண்டு.

'டப்பிங்' படம் 'ரீமேக்' படம் ஒப்பிட்டு வேறுபாடு கூற முடியுமா?

டப்பிங் படம் பார்ப்பவர்கள் வெறும் ஐம்பதாயிரம் பேர்தான். ஹாலிவுட் படங்களாக இருந்தாலும் சரி... காசாசோமா படங்களாக இருந்தாலும் சரி இது தான் நிலைமை. ரீமேக் என்பது முழுக்க முழுக்க அந்த மொழிக்குப் புதிய படம். நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக களத்தில் நின்று மோதும் அளவுக்கு உருவாகிவரும் படம். மொத்த ரசிகர்களுக்கும் தயாரிக்கப்படுவது. ஐம்பதாயிரம் பேர் எங்கே... ஆறுகோடி பேர் எங்கே... இந்த நிலையில் இரண்டையும் எப்படி ஒப்பிட முடியும்?

ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் என்று உங்களைச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

இதனால் எனக்கு வருத்தமில்லை. ஆனால் இப்படி முத்திரை குத்தி என்னைச் சுற்றி ஒரு வட்டம் போடுவதை விரும்பவில்லை. நேரடிப் படங்கள் நிறைய இயக்கி இந்தப் பெயரை இமேஜை நிச்சயம் மாற்றுவேன்.

தொடர்ந்து தம்பி ஜெயம் ரவியையே வைத்து இயக்குவது போரடிக்கவில்லையா?

webdunia photoWD
என் முதல் படம் `அனுமான் ஜங்ஷன்' தெலுங்குப் படம். அதில் அர்ஜுன்தான் ஹீரோ. சினேகா ஹீரோயின். 2001ல் வெளியானது. அதன் பிறகு தம்பியை ஹீரோவாக்கவே தமிழுக்கு வந்தேன். அதன்படி ஹீரோவாக்கியும்விட்டேன். ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் படங்கள் வந்தன. இப்போது 'சந்தோஷ் சுப்பிரமணியம்'.

ஜெயம் ரவியைப் பொறுத்தவரை ஒரு நடிகராக அவர் விஸ்வரூபம் எடுத்திருப்பதை என்னால் உணர முடிகிறது. 'ஜெயம்' படத்தில் நடித்தபோது ரவியின் நிலை வேறு. இன்று 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் அசுரத்தனமான நடிகர் பிரகாஷ்ராஜுடன் போட்டு போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இதைக் கண்டு ஒரு அண்ணனாக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படிப்படியான வளர்ச்சிக்கு நானும் மறைமுகமாகக் காரணமாக இருந்திருக்கிறேன் என்கிற சின்ன திருப்தியும் எனக்கு உண்டு. இப்போது சொல்லுங்கள் எனக்கு எப்படி போரடிக்கும்.

உங்களுக்கு உங்கள் அப்பா எந்த விதத்தில் உதவியாக இருக்கிறார்?

எங்களுக்கு முன்னோடி, வழிகாட்டி, ஆசிரியர் எல்லாமே எங்கள் அப்பாதான். எங்களைப் பொறுத்தவரை எங்கள் வீறு ஒரு ஸ்கூலாக இருந்தது. அப்பா ஆசிரியர் மாதிரி இருந்தார். அப்பாவுக்கு சினிமாத்துறையில் இருக்கிற மதிப்பு மரியாதை.. அவர் எங்களுக்குப் போட்டுக் கொடுத்திருக்கிற பாதை. எந்த நிலையிலும் தலைக்கனம் எட்டிப்பார்க்க விடக்கூடாது. அனைவரிடத்திலும் மரியாதை வேண்டும். இது தான் அப்பா தந்துள்ள ஆரம்பப்பாடம். இது போல பல பாடங்களை பால பாடமாக படித்திருக்கிறேன் - படித்திருக்கிறோம். எனக்கு இருப்பது எல்லாம் சொந்த புத்தியல்ல. எல்லாம் அப்பா தந்த புத்திதான்.

'பொம்மரிலு'வை ரீமேக் செய்வதன் முதல் காரணம்?

நானும் 'பொம்மரிலு' இயக்குனர் பாஸ்கரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் 96-97ல் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக டைரக்‌ஷன் கோர்ஸ் படித்தவர்கள். அப்போதே இந்தக் கதையை எனக்குத் தெரியும். பாஸ்கருடன் கலந்து பேசியதுண்டு.

பாஸ்கருக்கு முன்பு நான் முதல் படம் இயக்கிவிட்டேன். அது தெலுங்குப் படம். என்னுடன் பாஸ்கரும் இருந்தார். அதன் பிறகு தெலுங்கில் பல படங்கள் பணியாற்றி இயக்கிய படம்தான் 'பொம்மரிலு'. ஆந்திராவில் சூப்பர் ஹிட் படம். அற்புதமாக திரைக்கதையாகியிருக்கும் திறமை பெரிய விஷயம். அதுவே இதன் பெரிய பலம். அதை பெரிய அளவில் இப்போது கல்பாத்தி.எஸ். அகோரம் தயாரிப்பில் ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாக்கி வருகிறோம்.

ரீமேக் செய்ய முதல் காரணம் பலமான கதை அனைத்து அம்சங்களும் கலந்து அமைந்திருப்பதுதான்.