நீண்ட இடைவெளிக்குப் பின் மெளனம் கலைத்துப் பேசுகிறார் நடிகை நயன்தாரா. சூப்பர்ஸ்டார் ரஜினி தொடங்கி தனுஷ் வரை ஜோடி சேர்ந்து ஒரு சுற்று வந்திருப்பவர். இதுவரை இவரைச் சுற்றி வந்த சர்ச்சைகள், சங்கடங்கள் அனைத்திலும் இருந்து மீண்டுள்ளார் என்றே கூறலாம். இனி நயன்...
சினிமா என்ன அனுபவத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது?
எவ்வளவோ தெரிஞ்சிருக்கேன். பல விஷயங்கள் தெளிவாகியிருக்கு. தொழில் ரீதியா ரொம்ப மெச்சூர்டான உணர்வு வந்திருக்கு.
கிசுகிசுக்கள் உங்களைப் பாதிப்பதில்லையா?
ஒரு துறையில் பிரபலமா இருக்கிற ஒருத்தரைப் பற்றி தெரிஞ்சுக்கணும்னு பப்ளிக் நினைக்கிறது தப்புன்னு சொல்ல முடியாது. அது நேச்சர். சகஜம். எல்லாப் பிரபலங்களும் இந்தச் சோதனையைக் கடந்துதான் மேல வந்திருக்காங்க. அதனால இதை நான் நெகடிவான விஷயமா எடுத்துக்கலை.
அறிமுக நிலையிலேயே ரஜினி படம் அதற்குப் பிறகும் முன்னணி நாயகர்களுடன் படங்கள்... அடுத்த இலக்கு..?
சொன்னால் நம்பமாட்டீங்க. எனக்கு எந்தவொரு லட்சியமோ, கனவோ கிடையாது. கடந்த காலம் பற்றி கவலைப்படறதும் இல்லை. எதிர்காலம் பற்றி பயப்படறதும் இல்லை. இன்று - இன்னைக்கு எப்படி இருக்குன்னு மட்டுமே பார்க்கிறதுதான் என் குணம்.
படம் தேர்வு செய்யும்போது வருவதை ஏற்றுக் கொள்ளலாம் என்று கருதுவீர்களா?
படம் பண்ணும்முன் பல விஷயங்களைப் பார்க்காம நான் கால்ஷீட் கொடுக்கிறதில்லை. கதை என்ன, என் ரோல் என்ன, ஹீரோ யார், டைரக்டர் யார், பேனர் யார்... இதெல்லாம் பார்ப்பேன். எல்லாம் நம்பிக்கையா திருப்தியா வந்தால்தான் நடிக்கிறது பற்றி முடிவு பண்ணுவேன். கடவுள் ஒரு ஜனநாயகவாதி. நல்லது கெட்டது ரெண்டையுமே நமக்குக் காட்டுவார். எதைத் தேர்வு செய்யணும்னு நம்மைத்தான் முடிவு பண்ண விடுவார்.
சினிமாவுக்கு வந்த பின் என்ன உணர்கிறீர்கள்?
சினிமா பற்றிய என் அபிப்ராயம் மாறியிருக்கு. இந்த துறைக்கு வருவதற்கு முன் சினிமாக்காரர்கள் என்றால் சொகுசு வாழ்க்கை என்று எண்ணியிருந்தேன். ஆனால் ஆர்ட்டிஸ்ட் மட்டுமின்றி டெக்னீஷியன்ஸ், லைட்பாய் என அனைவருமே கடுமையாக உழைப்பதை இப்போது உணர்கிறேன்.
உங்கள் கனவு கதாபாத்திரம் என்று எதைக் கூறுவீர்கள்?
அப்படியெல்லாம் எதையும் மனசுல வச்சிருக்கலை. எனக்கு எந்த கேரக்டர் சரியா இருக்கும் பொருத்தமா இருக்கும்னு பார்த்துதான் என்கிட்ட படங்களே வரும்.
இப்போது நடித்து வரும் படங்கள்?
அஜீத் உடன் 'பில்லா' நடிக்கிறேன். ரஜினி சார் நடிச்ச பழைய படம் ரீமேக் ஆகுது. நிறைய விஷயங்கள் இதில் பேசப்படும். ரொம்ப ஸ்டைலிஷ் படம். என் கேரக்டர் மட்டுமல்ல காஸ்ட்யூம்ஸ் கூட பேசப்படும். அடுத்ததா 'யாரடி நீ மோகினி' தனுஷ் ஹீரோ. தெலுங்கில் செல்வராகவன் டைரக்ட் பண்ணி ஹிட்டான படம். எனக்கு இதுல நல்ல கேரக்டர். 'சத்யம்' இன்னொரு படம். விஷால் ஹீரோ. இதில் எனக்கு வித்தியாசமான ரோல். படம் வரட்டும் பாருங்க என்று கூறுகிறார் நம்பிக்கையுடன் நயன்தாரா.