யதார்த்தம்தான் அழகு - ஒளிப்பதிவாளர் லியோ.டி

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (12:43 IST)
webdunia photoWD
அண்மையில் வெளியாகியிருக்கும் 'வீரமும் ஈரமும்' படத்தில் அனைவரையும் கவர்ந்த அம்சம் ஒளிப்பதிவு. முழுக்க இயற்கை ஒளியில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு பலராலும் பாராட்டப்படுகிறது. அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் ஒளிப்பதிவாளர் லியோ.டி.

தெற்கத்திச் சீமையின் மண்ணின் மனத்தையும் அம்மண்ணின் மைந்தர்களின் குணத்தையும் தன் செல்லுலாய்டில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

இனி லியோ.டி.யுடன் ஒரு சந்திப்பு.

உங்கள் முன் கதைச் சுருக்கம் கூற முடியுமா?

எனக்கு சொந்த ஊர் கோயமுத்தூர். ஏதாவது செய்யணும் ஆனா, என்ன செய்யணும்னு புரியலை. இப்படி ஒரு நிலைமைதான் ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் எனக்கு ஏற்பட்டுச்சு. ஆர்.பி. விஸ்வம் எங்க சித்தப்பா. அவர் மெட்ராஸ் வாயான்னார். வந்தேன். முதலில் வேலு பிரபாகரன் சாரிடம் அறிமுகம் செஞ்சார். உதவியாளரானேன். வந்தவுடன் என்னிடம் கேமராவைக் கொடுத்து ஷுட் பண்ணச் சொன்னார். நான் மிரண்டேன். உடனே கேமரா ஆபரேட் பண்ணச் சொல்லிக் கொடுத்தார். அட... இவ்வளவுதானான்னு தோணிச்சு. கேமரா ஆபரேட் பண்றது சுலபம்தான். அதுக்கு முன்னாடி இருக்கிற லைட்டிங் விஷயங்கள் தான் கஷ்டம்னார். அது சரிதான். அதை கற்றுக்க பல ஆண்டுகள் ஆச்சு. பல படங்களில் வேலை பார்த்து 'கடவுள்' மூலம் முழுப் பொறுப்பு கிடைச்சுது. பிறகு கிச்சாஸ் சாரிடம் பல படங்கள் பண்ணினேன். நான் தனியாக வந்து முதலில் கேமராமேனாக ஒர்க் பண்ணின படம் 'ஆடு புலி ஆட்டம்'. இப்போது 'வீரமும் ஈரமும்.'

வேலுபிரபாகரன், கிச்சாஸ் இருவரிடமும் என்னக் கற்றுக் கொண்டீர்கள்?

இயற்கை வெளிச்சத்தில் - ரியல் லைட்டில் எப்படி ஒர்க் பண்றதுன்னு வேலு பிரபாகரன் சாரிடம் கற்றுக் கொண்டேன். அவர் படங்கள் பெரும்பாலும் அவெய்லபிள் லைட்டில் தான் இருக்கும். அது ஒரு சேலஞ்சிங்கான விஷயம்தான். கிச்சாஸ் சார் ஒர்க் நாம செயற்கையான செட் பண்ற லைட்டிங்கில் இருக்கும். நாம் எந்த அளவுக்கு லைட் பண்ண முடியும்னு கிச்சாஸ் சாரிடம் தான் கற்றுக் கொண்டேன். என்னைக் கேட்டால் ரெண்டும் ரெண்டு விதம். இந்த ரெண்டுமே ஒரு கேமராமேன் தெரிஞ்சு வச்சிருக்கணும்.

இயற்கை ஒளியில் படம் ஒளிப்பதிவு செய்வது, செயற்கை ஒளியமைப்பில் செய்வது எது சுலபம்? எது கடினம்?

என்னைக் கேட்டால் இயற்கை ஒளி சிரமம். ஏனென்றால் அந்த வெளிச்சம் நம் கையிலில்லை. எப்போது வேண்டுமானாலும் மாறலாம். நல்ல வெயில், வெளிச்சம் என்று ஆசைப்பட்டு கேமராவைத் தூக்கிட்டுப் போனால் திடீரென்று எங்கிருந்தோ ஒரு மேகம் வந்து சூரியனை மறைச்சிடும். ஆனா நாம செட் பண்ற வெளிச்சம் கட்டுப்பட்டு நம் கையில் இருக்கும். கூட்டலாம். குறைக்கலாம். இயற்கை ஒளின்னா சீக்கிரம் எடுத்துடலாம். செட் பண்ணி எடுக்க கால தாமதமாகும்.

ஆடு புலி ஆட்டம் அறிமுகம் எப்படி?

"நான் ரிசர்வ்டு டைப். சாதாரண அசிஸ்டெண்ட், கேமரா அசிஸ்டெண்ட், ஆபரேடிங் கேமராமேன் இப்படி படிப்படியா வளர்ந்தேன். பல படங்களில் பிஸியா இருந்தேன். 'கடவுள்' பண்ணினேன். இருந்தாலும் வேலு பிரபாகரன் சாரும் அதில் சம்மந்தப்பட்டதால் எனக்கு பெயர் கிடைக்கலை. அதாவது நான்தான் பண்ணினேன்னு சொல்ல முடியாதில்லையா? அதனால காத்திருந்தேன். நம் அருமை தெரிஞ்சு வாய்ப்பு வந்தால் வரட்டும்னு இருந்தேன். நானாக வாய்ப்பு கேட்க கூச்சப்படுவேன். அப்போது ஸ்டண்ட் மாஸ்டர் ஆக்‌ஷன் பிரகாஷ் என் நண்பர். அவர் மூலம் சஞ்சய்ராம் அறிமுகம் கிடைச்சுது. என் மேல நம்பிக்கை வச்சு சஞ்சய்ராம் கொடுத்த படம்தான் 'ஆடு புலி ஆட்டம்.'

முதல் படத்தில் முழுத் திறமையை காட்ட முடிந்ததா?

என்னைக் கேட்டால் ஒரு படத்தில் கேமரா ஒர்க் நல்லா இருக்குன்னு யாராவது சொன்னா அது சரியில்லைன்னு சொல்வேன். அப்படின்னா கேமராமேன் சப்ஜெக்ட்டை விட்டு விலகி தன்னை வெளிக்காட்டியிருக்கார்னு சொல்வேன். அது நல்ல ஒளிப்பதிவு கிடையாது. கதையை - ஸ்கிரிப்டை விட்டு வெளியே போகக் கூடாது! இதுதான் என் பாலிசி. ஸ்கிரிப்ட் அனுமதிக்கிற அளவுக்குத்தான் நாம் ஒர்க் இருக்கணும். டைரக்டர் நினைக்கிற கதையை அவர் பார்வையில் காட்சிப்படுத்தி - பதிவு செய்யணும். அந்த வகையில் 'ஆடு புலி ஆட்டம்' டைரக்டர் சொல்ல வந்ததை என்னால் முடிந்த அளவுக்கு நிறைவேற்றின படம்னு சொல்ல முடியும்.

'வீரமும் ஈரமும்' பட அனுபவம் எப்படி?

இதுபற்றி நானே விரிவாக சொன்னா சுய தம்பட்டமா அமைஞ்சிடும். முழுக்க முழுக்க செயற்கை ஒளி பயன்படுத்தாம இயற்கை ஒளியிலேயே எடுக்கப்பட்ட படம். இதுல என் சாதனை ஒண்ணுமில்லை. என்னை தன் ஸ்கிரிப்டை ஒட்டியபடி பயணம் செய்ய அனுமதிச்சது டைரக்டரது திறமை. 'வீரமும் ஈரமும்' படத்தைப் பொறுத்தவரை அவுட்டோர் யூனிட் பயன்படுத்தாமல் ஒரு படம் முடிச்சிருக்கோம். இதுல அவுட்டோர் யூனிட் லைட்மேன் தரப்பில்கூட வருத்தம், தங்களைப் பயன்படுத்தலைன்னு. நாங்க கன்வின்ஸ் பண்ண வேண்டியதாயிற்று.

அடுத்தடுத்து 'இயக்கம்' 'ஒத்தைக்கு ஒத்த', 'பூவா தலையா' என தொடர்ந்து சஞ்சய்ராமுடன் கூட்டணி அமைத்துள்ளது பற்றி...?

நான் அதிக ஆசைப்படாதவன். இருப்பதில் மகிழ்ச்சி அடையுற டைப். வாய்ப்பு கேட்பதற்கே வருத்தப்படுகிறவன். அப்படிப்பட்ட எனக்கு சஞ்சய்ராம் சார் தொடர்ந்து வாய்ப்பு தர்றார். காரணம் எனக்கும் அவருக்கும் உள்ள புரிதல்னு சொல்லலாம். அவர் நினைப்பது எதிர்பார்ப்பது எனக்குப் புரியும் நான் என்ன செய்யப் போறேன்னு அவருக்குத் தெரியும். இந்த வகையில்தான் வரிசையா அவருக்குப் பண்றேன்.

ஒரு கேமராமேனுக்கு அவசியம் அழகுணர்ச்சியா? யதார்த்தமா?

ஒண்ணு தெரியுமா? யதார்த்தம் என்னைக்கும் அழகாத்தான் இருக்கும். எதையும் அழகா காட்டுறது சிலர் விருப்பம். யதார்த்தத்தை சித்தரிக்கிறது சிலருக்குப் பிடிக்கும். இரண்டும் வெவ்வேறல்ல. ஒன்றுக்குள் ஒன்று அடக்கம் தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்