சில நேரங்களில்தான் நல்ல படம் வரும் - வின்சென்ட் அசோகன்

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (16:38 IST)
இப்போதைய சினிமாவில் நிறைய மாறிவிட்டன. அவற்றில் ஒன்று வில்லனின் முகம். கரியபெரிய விழிகள், முரட்டு மீசை, கனத்த உருவம், கொடூரமான குரல்... இப்படியான வில்லனின் முகங்கள் மாறிவிட்டன. கதாநாயகனுக்கு இணையான முகம், களையான தோற்றம், கம்பீரமான அழகு என வலம் வருகிறார்கள் வில்லன்கள். அப்படி ஒரு ஜென்டில் வில்லன்தான் வின்சென்ட் அசோகன். 'ஏய்' படத்தில் அறிமுகமான இவர், பழம்பெரும் நடிகர் எஸ்.ஏ. அசோகனின் வாரிசு. தன் தோற்றம் ஹேர் ஸ்டைலில் கவனிக்க வைத்தவர், இன்று 'சில நேரங்களில்' படத்தின் கதாநாயகன்.

இனி வின்சென்ட் அசோகன்!

கதாநாயகனாகி விட்டீர்கள். வாழ்த்துக்கள்! யார் போல நடிக்க ஆசை?

webdunia photoWD
முதலில் என்னை கதாநாயகன்னு சொல்லாதீங்க. கதையின் நாயகன். 'சில நேரங்களில்' படத்தில் என் ரோல் இதுதான். கதையின் முக்கிய நாயகன். ஏன் இதைச் சொல்றேன்னா கதாநாயகன்னா அதுக்குன்னு சில வரையரை வச்சிருக்காங்க. நான் அந்த வட்டத்துக்குள் சிக்கிக்க விரும்பலை. பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டு மாதிரியான கேரக்டர்லயும் பண்ணவே ஆசை. அதனால்தான் ஹீரோங்கிற வட்டத்துல சிக்க விரும்பலைன்னு சொன்னேன்.

வில்லனிலிருந்து கதாநாயகன் ஆனால் ப்ரமோஷன்தானே?

உப்பு சப்பில்லாத - வித்தியாசமான நடிப்புக்கு வாய்ப்பில்லாத ஹீரோ சான்ஸை விட நல்ல ஸ்கோப் உள்ள வில்லன் சான்ஸ் எனக்குப் பிடிக்கும். ஹீரோவானா பல கஷ்டம் இருக்கு. படத்தோட வெற்றி, தோல்வி ஹீரோ தலையில் ஏறும். குறிப்பா தோல்வியால் பாதிப்புண்டு. வில்லன்னா இந்த விஷயத்தில் சேஃப். அடுத்தடுத்த படத்துக்கு போய்டலாம். ஹீரோன்னா ஒவ்வொரு படமும் ரிஸ்க்தான். அதனால்தான் எனக்கு ஹீரோயிசம் வேண்டாம். அர்த்தமுள்ள கேரக்டர் மட்டும் வேணும்.

வில்லனாக நடிப்பதில் திருப்தி இருக்கிறதா?

எனக்கு அவ்வளவு சுலபமா திருப்தி வராது. நான் வெங்கடேஷ் சாரால் 'ஏய்' படத்தில் நடிகனா அறிமுகமானேன். வில்லன் தான் அதில் என் ரோல். அதுக்குப் பிறகு நிறைய படங்கள். ஒரே சமயத்துல ரிலீசாகிற விஜய், அஜீத் போன்ற பெரிய ஹீரோக்களின் 'போக்கிரி', 'ஆழ்வார்'னு படங்களில் நடிச்சேன். அந்த அளவுக்கு வாய்ப்புகள் வந்திச்சு. சந்தோஷமான விஷயம். ஆனால் இதிலெல்லாம் எனக்கு முழு திருப்தி வந்துவிடாது.


பின்னே எப்படிப்பட்ட கேரக்டரில்தான் நடிக்க விரும்புகிறீர்கள்?

webdunia photoWD
இந்த வின்சென்ட் அசோகன் முகம் எப்படி இருக்கு. உடம்பு எப்படி இருக்கு. இவனுக்கு என்ன மாதிரி கேரக்டர் கொடுத்தால் நல்லா பண்ணுவான். இவர் ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு. பாடி லாங்வேஜ் எப்படி இருக்கு. அதுக்கு என்ன மாதிரி பெர்பாமென்ஸ் வாங்கினா நல்லா இருக்கும்னு யோசிச்சு கண்டுபிடிச்சு கொடுத்தால் அந்த வாய்ப்பை வாழ்க்கையா நினைப்பேன். அவங்க பேரைக் காப்பாத்துவேன். அப்படி வந்த வாய்ப்புதான் 'சில நேரங்களில்'.

அந்த 'சில நேரங்களில்' அனுபவம் பற்றி இந்த நேரத்தில் சொல்ல முடியுமா?

வெளிநாட்டுல அமெரிக்காவுல இருக்கிற ராஜு என்கிற தயாரிப்பாளர் ஒரு கதை வச்சிருந்தார். அதைப் படமா எடுக்கணும்னு ஆசைப்பட்டார். டைரக்டர் போர் ஸ்டூடண்ட்ஸ் பண்ணின ஜெயராஜ்னு தீர்மானிச்சார். அதுல நடிச்சிருந்த என்னை அவர் கதைல நடிக்க வைக்கிறதுன்னு முடிவு பண்ணி என்னை அப்ரோச் பண்ணினார்.

முதல்ல அவர் போன் பண்ணினப்போ நான் நம்பலை. யாரோ கிண்டல் பண்றாங்கன்னு நினைச்சேன். அவர் சீரியஸா பேசினார். போனில் கதை சொல்லியே சம்மதிக்க வச்சிட்டார். அதுதான் 'சில நேரங்களில்'. இது மாதிரி கேரக்டரில் எந்த ஹீரோவும் நடிக்கமாட்டாங்க. பெமிலியர் ஹீரோ பண்ணினாலும் படம் நல்லா இருக்காது. அந்த மாதிரி கதை.

நான் டைரக்டர் யார்னு கேட்டேன். ஜெயராஜ்னு சொன்னாங்க. ரொம்ப பவர்ஃபுல் கேரக்டர் எனக்கு. பயமா இருந்திச்சு. நான் டைரக்டர்கிட்டே சொன்னேன். நான் என்னைவிட உங்களை நம்புறேன். நீங்க நான்கு முறை நேஷனல் அவார்டு வாங்கியவர். நீங்க நம்பி நடிக்க வச்சா நான் ரெடின்னேன். அவர் எனக்கு தைரியமூட்டினார்.

ஸ்ரீகாந்த்தேவா இசை. பாடல்கள் வைரமுத்து சார். பாடல்கள் பிரமாதமா வந்திருக்கு. வினீத்தும் நடிச்சிருக்கார். ரகுவரன் சார் இருக்கார். நவ்யாநாயர் இருக்காங்க. நல்ல யூனிட். நியூலைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு.

இதுமாதிரி வெளியூரிலிருந்து நல்ல படம் எடுக்க நிறைய பேர் தயாரா இருக்காங்க. அது மாதிரி நல்ல முயற்சிகளை ரசிகர்கள் வெற்றியடைய வைச்சா வித்தியாசமான படங்கள் நிறைய வரும். நல்ல தயாரிப்பாளர்கள் - நல்ல படங்கள்னு சில நேரங்களில் மட்டும் வருவாங்க. நாமதான் ஜெயிக்க வைக்கணும்.

நீங்கள் ஓர் இயக்குனரின் நடிகரா?

ஆமாம். அப்படிச் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. விருப்பம் உண்டு. ஒரு டைரக்டர் தான் உருவாக்கி வச்சிருக்கிற கேரக்டருக்கு எப்படி உயிர் கொடுக்கணும்னு தெரிஞ்சவர். அவர் சொல்லித் தர்றதை செய்ற நடிகனா இருக்கவே ஆசை. அப்போதுதான் அது ஜெயிக்கும். நடிகன் என்றைக்கும் டைரக்டரின் கைப்பாவையா இருந்தால்தான் அந்த கேரக்டர் பேசப்படும். 'சில நேரங்களில்' படத்துல என்னை ஜெயராஜ் சார் புது பரிமாணத்தில் காட்டியிருக்கார். வெளிநாடுகளில் படப்பிடிப்பு - ஜப்பான் ஸ்டைல் பாட்டு நடனம் சாமுராய் சண்டைக்காட்சின்னு பல விஷயங்கள் இருக்கு. படத்தின் பாடல்களைப் பார்த்து இது இப்படிப்பட்ட கதைன்னு யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் டைரக்டரின் பலம்.