அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் வெற்றி வாய்ப்புள்ளவர்களை கூட்டணி அமைத்து பெரிய வெற்றிக்கு வியூகம் அமைப்பதுண்டு. அப்படி ஒரு சக்கர வியூகமாய் பலர் சங்கமித்துள்ள படம்தான் 'மலைக்கோட்டை.'
'சம்திங் சம்திங்' வெற்றிப் படத் தயாரிப்பாளர் லட்சுமி புரொடக்ஷன்ஸ் ராமாராவ் தயாரிக்கிறார். 'திருவிளையாடல் ஆரம்பம்' வெற்றி இயக்குனர் ஜி. பூபதி பாண்டியன் இயக்குகிறார். 'தாமிரபரணி' வசூல் நாயகன் விஷால் நாயகனாக நடிக்கிறார். 'பருத்திவீரன்' மெகா வெற்றிப் படத்தின் நாயகி ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். 'போக்கிரி' ஹிட் படத்தின் இசையமைப்பாளர் மணிஷர்மா இசை அமைக்கிறார்.
இதை எண்ணி பூரிப்பிலிருக்கிறார் விஷால். அவரிடம் பேசியபோது...!
இப்படி வெற்றி பெற்றவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளது பற்றி...?
webdunia photo
FILE
அருமையாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். இது தானாக அமைந்த கூட்டணி. ஒரு புராஜக்ட் நன்றாக வர வேண்டும் என்றால் எல்லாமே தானே கூடி வரும் என்பார்கள். அதுபோல்தான் இந்தப் படத்துக்கும் நடந்திருக்கிறது. சிலர் இதை எடுத்துச் சொன்ன பிறகுதான் இப்படி யூனிட் அமைந்திருப்பதே எனக்கு புரிந்தது. புரிந்ததும் 'மலைக்கோட்டை' மீதுள்ள என் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இப்போதெல்லாம் மதுரை சப்ஜெக்ட்டில் நடிக்கிறீர்களே...?
எல்லாம் தானே அமைந்ததுதான் காரணம். 'சண்டக்கோழி', 'சிவப்பதிகாரம்', 'திமிரு' எல்லாமே மதுரை அதைச் சார்ந்த மண் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட். 'மலைக்கோட்டை' நாயகன் சொந்த ஊர் பட்டுக்கோட்டை.
பட்டுக்கோட்டைக்காரர் ஏன் மலைக்கோட்டையான திருச்சிக்கு வருகிறார்?
தினமும் திருச்சி போலீஸ் ஸ்டேஷன் வந்து கையெழுத்துப் போட வேண்டிய சூழல். அதனால் திருச்சி வருகிறான்.
அப்படி என்ன குற்றம் செய்தான்?
தினமும் வந்து கையெழுத்துப் போடும் அளவுக்கு குற்றம் செய்திருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
பூபதி பாண்டியன் நகைச்சுவையான கதை சொல்பவர். நீங்கள் ஆக்ஷன் ஹீரோ எப்படிக் கூட்டணி சேர்ந்தீர்கள்?
சத்யம்' படம் தாமதமானது. சில கதைகள் கேட்டேன் பிடிக்கவில்லை. இனி கதையே கேட்கக்கூடாது என்று இருந்தேன். அப்போதுதான் பூபதி பாண்டியன் இந்தக் கதையைச் சொன்னார். அவர் என் ஏரியாவுக்கு வரும்படியும் நான் அவர் ஏரியாவுக்குப் போகும் படியுமான கதை. ஆம்... இதில் ஆக்ஷனும் உண்டு. காமெடியும் உண்டு. எனவே இந்தக் காம்பினேஷன் நன்றாக இருக்குமென்று ஒன்று சேர்ந்தோம்.
மலைக்கோட்டை பற்றி உங்கள் மனக்கோட்டையில் என்ன உள்ளது?
ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் தங்கு தடையின்றி போய் சரியான நேரத்தில் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. மே 7ல் தொடங்கி செப்டம்பர் 7ல் முடிந்தது. சரியாக நான்கே மாதங்கள். நாயகி ப்ரியாமணி ஏற்கனவே எனக்கு ப்ரண்ட். அதனால் நடிக்க சுலபமாக இருந்தது. ப்ரியாமணி நல்ல டான்சர். அதனால் அவருடன் டான்ஸ் ஆட கஷ்டப்பட்டேன். அவர் ஒரே டேக்கில் ஓகே வாங்கிவிடுவார். எனக்கு பல டேக் ஆகும். படம் நன்றாக வந்திருக்கிறது. எனக்கு இது ஆறாவது படம். நிச்சயம் வெற்றி பெறும்.
இப்படத்தின் மூலம் 'புரட்சித் தளபதி' பட்டம் சேர்ந்துள்ளது. அது பற்றி...?
அது நானே போட்டுக் கொண்டதல்ல. விருப்பப்பட்டு ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. அதைத்தான் போட்டுள்ளார்கள். ஆக்ஷன் படங்களில் நான் நடித்ததைப் பார்த்து எனக்கு அன்புடன் வழங்கப்பட்டுள்ளதுதான் அந்தப் பட்டம். அதை தக்க வைக்கும்படி நல்ல கதையம்சமுள்ள ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை.
ஆக்ஷன் படங்களிலேயே உங்களை அடக்கிக் கொள்வது சரியா?
எல்லாருக்கும் ஆக்ஷன் படங்களில் நடிப்பது வெற்றி பெறுவதே கனவாக இருக்கும். எனக்கு ஆக்ஷன் ஹீரோ இடம் கிடைத்திருப்பதில் சந்தோஷப்படுகிறேன். பெருமைப்படுகிறேன். ஏனென்றால் எல்லாரையும் அப்படி ஏற்றுக் கொள்வதில்லை. நான் ஆக்ஷன் படங்களில் நடித்தாலும் கதையில் வேறுபாடு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். நான் நடித்த படங்களைப் பாருங்கள். 'செல்லமே' வேறு ரகம். 'சண்டக்கோழி' வேறு இல்லையா? 'திமிரு' ஒரு மாதிரியான ரகம். 'சிவப்பதிகாரம்' வேறு மாதிரியான ரகம். 'தாமிரபரணி' இப்படி வித்தியாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
அண்ணனைப் போல நடிகையை காதலித்து மணப்பீர்களா?
நான் இப்போது ஓய்வில்லாமல் ஷுட்டிங்கில் இருக்கிறேன். காதல் பற்றிய எந்த ஐடியாவும் எனக்கில்லை. அண்ணன் விக்ரம்கிருஷ்ணா ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்யப் போகிறார். எனக்கு எப்போது காதல் வருமோ தெரியாது. அதுபற்றி இப்போது கூறமுடியாது. ஏனென்றால் எனக்கு காதலிக்க இப்போது நேரமில்லை. நாளைக்கு என்றால் வரலாம் வராமலும் இருக்கலாம்.