பட்டாம்பூச்சாய் படபடக்கும் கண்கள் மெழுகு பொம்மை போன்ற உடல்வாகு என ரசிகர்களை கிறங்கடிப்பவர் காம்னா ஜெத்மலானி. "இதயத் திருடன்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களைத் திருடியவர், "மச்சக்காரன்" மூலம் மறு ரவுண்ட் வர இருக்கிறார். இனி காம்னா.
இதயத் திருடனுக்குப் பிறகு எங்கே போனீர்கள்?
நான் எங்கும் போகவில்லை. வீட்டில் சும்மாவும் உட்கார்ந்திருக்கவில்லை. இந்த இடைவெளியில் தெலுங்கில் மூன்று படங்களில் நடித்தேன். இப்போது "டாஸ்" படம் உள்ளது. தெலுங்கு மட்டுமல்ல கன்னடத்திற்கும் போய் விட்டேன். ரவிச்சந்திரன் ஜோடியாக நான் நடித்த கன்னடப் படம் "யுகாதி" விரைவில் வெளிவர உள்ளது. இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நடித்து தென்னிந்திய நடிகையாகி விட்டேன்.
தமிழில் வாய்ப்புகள் வரவில்லையா?
இதயத் திருடனுக்குப் பிறகு சில படங்கள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் சப்ஜெக்ட் என் மனசுக்குப் பிடித்தால் தான் நடிக்கச் சம்மதிப்பேன். அதே நேரத்தில் தெலுங்கில் நல்ல படங்கள் வந்தன.
நடிக்க வந்த பிறகு கண்டிஷன் போடுவது சரியா?
ஒரு படம் நன்றாக இல்லை என்றால் இதையும் ஒரு படம் என்று தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறாரே என்று என்னையே விமர்சனம் செய்வார்கள். எனக்கு ஏதோ ஒரு படம் என்கிற வாய்ப்பில் ஆர்வமில்லை.
மச்சக் காரன் எப்படி இருக்கும்?
இந்தப் படம் நல்ல சப்ஜெக்ட். தமிழில் எனக்கு நல்ல இடத்தைத் தேடித் தரும். இளைஞர்களைக் கவரும் விதத்தில் இளமைத் துள்ளலுடன் கலர் ஃபுல்லாக சொல்லப்படுகிற கதை. நிச்சயம் நன்றாக இருக்கும். எனக்கும் நல்ல பெயரைத் தேடிக் கொடுக்கும்.
கிளாமராக நடிப்பதில் உங்கள் கொள்கை என்ன?
சினிமா ஒரு கமர்ஷியல் உலகம். இங்கே சில எக்ஸ்போஷர் தேவை. இளமையான கதையில் யதார்த்தமான கிளாமர் என்றால் தப்பில்லை. கிளாமரை வலிய திணிப்பது போல் இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது அல்லவா?
உங்கள் தொழிலில் குடும்பத்தினர் குறுக்கிடுவது உண்டா?
எங்கள் குடும்பம் பல்வேறு தொழிலில் புகழ்பெற்ற குடும்பம். தாத்தா ராம்ஜெத்மலானி. நாமறிந்த வழக்கறிஞர். எங்கள் குடும்பத்தினர் அரசியலிலும் இருக்கிறார்கள். அவரவர்க்குப் பிடித்த துறைகளில் ஈடுபட எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். யாருடைய உரிமையிலும் யாரும் குறுக்கிடுவதோ தலையிடுவதோ கிடையாது.
சினிமாவில் நம்பர் ஓன் கனவு உங்களுக்கு உண்டா?
நிச்சயமாக அந்த ஆசையோ எண்ணமோ எனக்கில்லை. அது நிரந்தரமில்லாத இடம். விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிய இடம். அதனால் அந்த இடம் என் கனவில்லை. இயல்பாக நடிக்கிற நடிகை. நல்ல கேரக்டரை தேர்ந்தெடுத்து நடிக்கிற நடிகை காம்னா என்று நினைக்கிறேன். இந்த நம்பர் ஒன் போட்டியில் கலந்து கொள்ளவோ, சிக்கிக் கொண்டு கஷ்டப்படவோ எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை.
உங்களைக் கவர்ந்த நட்சத்திரங்கள் யார்?
பல பேர் இருக்கிறார்கள். தமிழில் பிடித்த நடிகர்கள் விஜய், சூர்யா எனலாம். நடிகைகளில் என்னைக் கவர்ந்தவர் ஸ்ரீதேவி. அவரை என் ரோல் மாடல் என்றே சொல்வேன். நடிகையாகவும் பர்சனலாகவும் அவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
மும்பை நடிகைகளின் வரவு இப்போது குறைந்து விட்டதே?
அப்படிச் சொல்ல முடியாது. பல பேர் வருகிறார்கள். வெற்றி பெற்றவர்கள் மட்டும தான் பேசப்படுகிறார்கள். காணாமல் போகிறவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மொழியிலிருந்து நடிகைகள் வருவது சகஜம். வட இந்தியாவில் கூட தென்னிந்திய நடிகைகளின் ஆதிக்கம் இருந்திருக்கிறது. கால மாற்றத்தில் இதெல்லாம் சகஜம்.
"மச்சக் காரன்" படப்பிடிப்பில் ஏதோ பிரச்சினையாமே?
ஆரம்பித்துவிட்டீர்களா வம்பை? "மச்சக் காரன்" படப்பிடிப்பில் மீன் சம்பந்தப்பட்ட காட்சி என்றதும் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. சின்ன வயதிலிருந்தே எனக்கு என்னவோ தெரியவில்லை மீன் என்றால் பிடிக்காது. அலர்ஜி. அப்படியிருக்கும் போது ஏராளமான மீனைப் பார்த்ததும் குமட்டல்-மயக்கம் வந்துவிட்டது. பிறகு சகஜமாகிவிட்டேன். நடிப்புக்காக சகித்துக் கொண்டேன்.
கனவு கதாபாத்திரம் என்று ஏதாவது உண்டா?
முன்பே சொன்ன மாதிரி நல்ல கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஒரு படத்திலாவது ஆக்ஷன் கேரக்டரில் வந்து அதிரடி செய்ய வேண்டும் என்பது என் ஆசை. கனவு. அதற்காக எவ்வளவு சிரமப்பட்டும் நடிப்பேன்.