சிவாஜி சந்தோஷம்! - ஸ்ரேயா

Webdunia
வரும் ஜுன் 15க்குப் பின் இவரது உயரமே வேறு. தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த உதடுகளின் உச்சரிப்புக்கு உரியவராக ஆக இருக்கிறார் ஒரு நடிகை. அவர் தான் ஸ்ரேயா. "சிவாஜி"யில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பிறகு இவரது வாழ்க்கையின் திசையும் போக்கும் மாறிவிட்டன. நட்சத்திர ஒளிவட்டம் இவருக்குப் பின்னே ஒட்டிக் கொண்டு விட்டது.

இனி ஸ்ரேயா!

எப்படி "சிவாஜி" படத்துக்குத் தேர்வானீர்கள்?

நான் நடிச்ச "மழை" படம் பார்த்துட்டுத்தான் ஷங்கர் சார் என்னை அழைச்சார். பொதுவா ஒரு புதுப் படத்துல நடிக்கறதுன்னா அந்த கேரக்டர் கெட்அப் சரியா இருக்கான்னு பார்க்க மேக்கப் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் எடுப்பாங்க. ஆனா டெஸ்ட்டும் எடுக்கலை. "மழை" படம் பார்த்ததே போதும்னு சொல்லிட்டாங்க. வேற எந்த டெஸ்டும் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க.

படத்தில் நடிகக் முடிவானதும் எப்படி உணர்ந்தீர்கள்?

ரொம்ப்ப சந்தோஷமா இருந்திச்சு. ரஜினி சார் படம்கிறது பெரிய வாய்ப்பு. ஷங்கர் சார் டைரக்ஷன்கிறது பெரிய வாய்ப்பு. ஏவி.எம்.நிறுவன படம்கிறது இன்னொரு பெரிய அதிர்ஷ்டம். இந்த மூணுமே ஒரு படத்துல வர்றதுங்கிறது எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. அவ்வளவு சந்தோஷப்பட்டேன். ஐயாம் வெரி லக்கி, இந்த காம்பினேஷன் வாழ்க்கையில நினைச்சுப் பார்க்க முடியாத காம்பினேஷன்னு சொல்லலாம்.

"சிவாஜி"யில் உங்களுக்கு என்ன வேடம்?

இதில் என் கேரக்டர் பெயர் தமிழ். உற்சாகமா சுதந்திரமா சந்தோஷமா திரிகிற ஒரு பெண். என்னை ரஜினி சார் கல்யாணம் பண்ணிக்க விரும்புவார். நான் படம் முழுக்க பாவாடை தாவணியில் வரும் கேரக்டர். சம்பிரதாயமான பெண்ணுன்னு வச்சிக்குங்களேன்.

படத்துக்கு என்ன ஹோம்ஓர்க் செய்தீர்கள்?

இப்போதெல்லாம் டைரக்டர் சொன்னதைச் செய்தால் போதும். அந்த அளவுக்கு சொல்லித் தர்றாங்க. அதுவும் ஷங்கர் சார் தனக்குத் திருப்தியா சீன் வரும் வரை விடமாட்டார். அந்த அளவுக்குப் பர்பெக்ஷன் பார்ப்பார். நான் ஒப்பந்தமானதுமே ரஜினி சார் நடிச்ச படங்கள் டிவிடிக்கள் நிறைய ஷங்கர் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தேன். என்னைத் தயார் பண்ணிக்கிட்டேன். ஷீட்டிங் ஆரம்பிச்சதும் முதல் நாளே எனக்கு மறுநாள் பேச வேண்டிய வசனங்கள் வந்துரும். ஈமெயில் மூலம் வரும். மறுநாள் நான் தெளிவா தயாராய்டுவேன்.

ஷங்கர் படம் என்றால் கட்டுப்பாடுகள் நிறைய இருந்திருக்குமே..?

அப்படியெல்லாம் இல்லை. படத்தைப் பற்றி வெளியே அனாவசியமா பேசக்கூடாதுன்னு எங்களுக்கே தெரியும். மற்றபடி எல்லாரையும் சுதந்திரம் கொடுத்து நடத்தினார். எந்த பிரச்சினையும் இல்லை. சிறு சங்கடம் கூட இருந்ததில்லை.

ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

அவர் பெரிய நடிகர். பெரிய சூப்பர் ஸ்டான்னு உலகத்துக்கே தெரியும். அவர் இவ்வளவு எளிமையா இருப்பர்னு நேர்ல பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சின்னவங்க பெரியவங்கன்னு வித்தியாசம் பார்க்காமல் எல்லாரையும் மரியாதை கொடுத்து மதிக்கிறவர். அவர் பல விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிக்கிட்டு அமைதியா இருப்பார். ரொம்ப பொறுமைசாலி. இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்.

மாமனார் ரஜினி, மருமகன் தனுஷ்டன் நடித்தது பற்றி..?

தனுஷ்-ம் நல்ல மனிதர் தான். ரொம்ப யதார்த்தமா ப்ரண்டலியா பழகக்கூடிய கேரக்டர் அவர். ஹ்யூமர் சென்ஸ் உள்ள நடிகர் தனுஷ்னு சொல்வேன்.

இனி நீங்கள் தான் நம்பர் ஒன்னா? யார் உங்களுக்குப் போட்டி?

இந்த நம்பர் ஒன், டூ பற்றிய கேள்விகளில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு யாரும் போட்டியில்லை. உண்மையைச் சொல்லணும்னா யாருக்கும் யாரும் போட்டியில்லை. அவரவர் திறமை அதிர்ஷ்டம்படி அவரவர்க்கு வாய்ப்பு வரும். இதுதான் யதார்த்தம்.

கிளாமராக நடிப்பது முத்தக் காட்சியில் நடிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

அளவான டீசன்டான கிளாமர் ரசிக்கப்படும். எல்லைத் தாண்டினால் வெறுக்கப்படும். இதான் என் பாலிசி. இதுக்கு ஏற்ற மாதிரி நடிக்கிறேன். ஆனால் முத்தக் காட்சி எனக்குப் பிடிக்கிறதில்லை. சினிமாவில் திரையில் முத்தக் காட்சி இடம்பெறுவதை நான் எதிர்க்கிறேன். அது எந்த மொழிப் படமா இருந்தாலும் சரி. ஸ்கிரீன்ல முத்தமிட்டுக் கொன்ற காட்சி அநாகரிகமா அசெளகர்யமா எனக்குத் தோணுது.

படங்களைத் தேர்வு செய்வதில் எது உங்கள் பாலிசி?

ஸ்ரேயாவுக்கு பெயர் வாங்கித் தரும்படி கேரக்டர் வரணும். இதுல நடிச்சால் நமக்கு நல்ல பெயர் வரும், பேசப்படும் படமா இது இருக்கும்... இப்படி நம்பிக்கை வர்ற மாதிரி கேரக்டர் வேணும். அதுதான் என் விருப்பம். எனக்கு நல்ல அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்கிற மாதிரி கேரக்டரில் நடிக்கவே எனக்கு விருப்பம். அலட்டிக் கொள்ளாத நடிகை, கால்ஷீட் பிரச்சினை இல்லாத நடிகைன்னும் பெயர் எடுக்கணும். "சிவாஜி" வரும் பாருங்க. விஜய் படம் "அழகிய தமிழ் மகன்" பாருங்க. நான் சொல்ற மாதிரி அமைஞ்சிருக்குன்னு நீங்களே சொல்வீங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்