படத்தின் வெற்றிக்கு பாடல்கள் முன்னோட்டமாக இருப்பவை. பாடலின் வெற்றியே படத்தை வசூலுக்கு இட்டுச் செல்லும் வாகனம்.
பாடல்களை பொருத்தவரை இசையும் நடனமும் பெரும் பங்கெடுத்துக் கொள்ளும். இசையமைப்பாளர், நடன இயக்குனர் ஆகியோரின் ராஜாங்கமாக இன்றைக்கு பாடல்கள் வருகின்றன. அப்படி பல்வேறு வெற்றிகரமான படங்களுக்கு நடனம் அமைத்து தனி முத்திரை பதித்திருப்பவர் நடன இயக்குனர் கூல் ஜெயந்த்.
காதல் தேசத்தில் ஓ..மரியா என்று ஆட்டம் போட்டு படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு முன்னணி நடன இயக்குனராகத் திகழ்கிறார். பல வெற்றிப் படங்களுக்கும், விருது படங்களுக்கும் நடனம் அமைத்திருப்பவர்.
கூல் ஜெயந்துடன் ஒரு கூலான சந்திப்பு...
பல்வேறு இயக்குனர்களின் படங்களில் பணி புரிந்துள்ளீர்கள். எப்படி எல்லோருடனும் பொருந்திப் போக முடிகிறது?
நான் என் வேலையில் சரியாக இருக்கிறவன். டைரக்டர் எதிர்பார்ப்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதைச் சரிவர செய்து கொடுக்க வேண்டும். ஒரு படத்தின் முதல்வர் டைரக்டர்தான். நாங்கள் செகண்டரிதான். எந்த டைரக்டரின் ரசனை எப்படி இருக்கிறது. எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்பதை சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். அதனால்தான் அவர்கள் எதிர்பார்த்து கேட்பதை என்னால் கொடுக்க முடிகிறது.
ஒரு படத்தில் எல்லாவற்றையும் முடிவு செய்கிறவர் டைரக்டர்தான். அவர்தான் கேப்டன் ஆப் த ஷிப். நாங்கள் அடுத்ததாக வருபவர்கள். இதைப் புரிந்து கொண்டு இருப்பதால் பிரச்னை இல்லை. எனக்கு ஈகோ என்பதே கிடையாது. அதனால் யாருடன் வேண்டுமானாலும் மேட்ச்சாவேன். அப்படி இருப்பதால்தான் இளம் இயக்குனர்களான கதிர், எஸ்.ஜே சூர்யா, கௌதம், ஜனநாதன் போன்றவர்களுடன் மட்டுமல்ல பாரதிராஜா பி.வாசு, விக்ரமன், வசந்த் போன்ற மூத்த இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்ற முடிகிறது.
ஒரு நடன இயக்குனருக்கு யாருடன் நல்லுறவு இருக்க வேண்டும்?
டைரக்ரின் கான்செப்ட் என்ன என்பது புரிய வேண்டும். அந்த பாடல் காட்சியை எப்படி அமைக்க விரும்புகிறார் என்பது அவசியம். மற்றபடி கேமராமேனுடன் நல்ல புரிதல் வேண்டும். ஏனென்றால் நாம் எந்த மூவ்மெண்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது அவருக்கு புரிய வேண்டும். அதேபோல் பின்புலம் கவர்ச்சிகரமாக அமைவதில் கலை இயக்குனருக்கும், நடன இயக்குனருக்கும் கூட நல்ல புரிதல் இருக்க வேண்டும். மொத்தத்தில் சினிமாவில் டீம் ஒர்க் இருந்தால்தான் எல்லாமே சரியாக இருக்கும்.
ஒரு நடன இயக்குனர் எப்போது வெற்றி பெறுகிறார்?
பாடல்கள் ஹிட்டாகி நடனமும் வெற்றி பெற வேண்டும். திரையில் ரசிகர்கள் ரசிக்க வேண்டும். அதற்கு அடிப்படையாக அமைவது இசை. அதற்கு ஏற்ற மாதிரி புதுமையாக நடனம் அமைத்து விட்டால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடித்து விடும். உதாரணமாக தமிழில் முதன்முதலாக காதல் தேசம் படத்தில் ஒரு பக்காவான ராப் டான்ஸை கல்லூரிச் சாலை பாடலில் வைத்தேன்.
அதேபோல் வாலி படத்தில் ஏப்ரல் மாதத்தில் பாடலும், குஷி படத்தில் மொட்டு ஒன்று பாடலும், ப்ரியமானவளே-வில் வெல்கம் பாய்ஸ், உன்னை நினைத்து-வில் சாக்லேட் சாக்லேட், இயற்கையில் சீட்டுகட்டு பாடல்களின் வெற்றி தான் எனக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
எது உங்கள் பாணியாக இருப்பதாக கருதுகிறீர்கள்?
என்னை தனியாக வெளிக்காட்டிக் கொள்வதை நான் எப்போதும் விரும்புவதில்லை. இயக்குனரின் எண்ணத்திற்கேற்ப.. பாடலின் தன்மையும் கதையின் போக்கும் கெடாதவாறு பாடல்களை அமைப்பதையே விரும்புகிறேன். சில பாடல்களில் படத்தின் ஹீரோவுக்கு ஏற்ற மாதிரியும் டான்ஸ் மூவ்மெண்ட்களை அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு மேலும் ஏதாவது செய்ய வேண்டும்.. அதுதான் ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு விடப்படும் சவால்!
இந்த இளம்வயதில் இவ்வளவு திறமையும் பொறுமையும் எப்படி!?
எல்லாம் அனுபவம் தான். அடிப்படையில் நான் ட்ரம்ஸ் ப்ளேயர். சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்திட்டேன். எனக்கு கிடைத்த இடம் நல்ல இடம். ராஜு சுந்தரம் மாஸ்டர்கிட்ட எனக்கு கிடைத்த அனுபவங்கள் அதிகம். ஐந்து ஆண்டுகளில் நானூறு படங்கள்...எத்தனை இயக்குனர்கள். எவ்வளவு அனுபவங்கள். ராஜு மாஸ்டரிடம் இருந்த போதுதான் எனக்கு எல்லாமும் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த உதவியாளர் அனுபவமே இப்போது எனக்கு கைகொடுத்து வருகிறது. பாடல் வெற்றி பெறுவது கைதட்டல் மட்டுமல்ல பல விருதுகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. கடல்பூக்கள் படத்துக்காக சாந்தாராம் அவார்டு, அபோர் த ஸ்டூடண்ட்ஸ் படத்துக்காக கிரிடிக் அவார்டு, வேசம் படத்துக்காக கேரள அமிர்தா அவார்டு போன்றவை கிடைத்துள்ளன.
எல்லாவற்றுக்கும் நான் தொழில் கற்ற மாஸ்டர்தான் காரணம் என்பேன். இந்தத் தொழிலில் திறமை மட்டுமல்ல பொறுமையான அணுகுமுறை எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும்.
இப்போது ஆரம்பித்திருக்கும் நடனப் பள்ளி பற்றி?
இன்று சினிமாவுக்கு நிறையபேர் வருகிறார்கள். நடிப்பதை விட நடனமாட ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். நடிப்பில் ஒரே டேக்கில் ஓக்கேவாகி நடிப்பவர்கள் கூட டான்ஸ் என்று வரும் போது நிறைய டேக் வாங்குவார்கள். இதனால் யூனிட்டில் கேலியாக பார்ப்பார்கள் என்று நடிகர்களின் மனம் சங்கடப்படும். அதற்குக் காரணம் சினிமா டான்ஸ் பற்றி அடிப்படை விசயம் தெரியாமல் இருப்பதுதான். காரணம் சினிமா டான்ஸை சரியாக சொல்லித் தரவும் கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இல்லாதது தான். இந்த விசயங்களை முன்பே எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தால் இவ்வளவு சிரமம் இருக்காதே என்று என்னிடம் பலரும் கேட்டதுண்டு.
அவர்களை மனதில் வைத்தே இந்த "ஞிகிழிஷிரி" நடனப் பயிற்சி மையத்தை தொடங்கியிருக்கிறேன். இது சவுத் போக் சாலை தி நகரில் உள்ளது. இங்கு முக்கியமாக சினிமா படங்கள் பற்றியே எல்லாமும் கற்றுத் தருகிறோம். ஸ்டேஜில் ஆடுவது என்பது வேறு. ஷூட்டிங்கில் செட்டில் ஆடுவது வேறு. படத்துக்கு ஆடும் போது டான்ஸ் தெரிவது மட்டுமல்ல லைட்டிங், டைமிங் போன்ற பல விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும். எங்கள் பயிற்சியை அவரவர் திறமைக்கும் ஏற்புத் திறமைக்கும் ஏற்றபடி கூட்டலாம். குறைக்கலாம்.
ஆனால் முறையாக குறைந்தது ஆறுமாதங்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வருஷம் எடுத்துக் கொண்டால் எந்தப் பாடலுக்கும் சுயமாக ஆடும் திறமையை பெற்று விடுவார்கள். ரீடேக் பிரச்னைக்கு இடமிருக்காது.
எல்லோருக்கும் இந்தப் பயிற்சியை அளிக்கிறீர்களா?
முக்கியமாக சின்னத்திரை, பெரியதிரை கலைஞர்களுக்கு மட்டுமே பயிற்சி தருகிறோம். இன்று சினிமாவைப் போலவே டி.வி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் டான்ஸ் இடம்பெறுகிறது. எனவே டி.வி., சினிமா நடிகர்- நடிகைகளுக்கு பயிற்சி அளிக்கிறோம். சினிமாவில் சேரும் முயற்சியிலிருக்கும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கும் கூட பிராக்டிஸ் செய்கிறோம்.
கால்சென்டர் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் வார இறுதியில் பார்ட்டி, டிஸ்கோ செல்ல நடனம் அவசியம் என்றாகி வருகிறது. அவர்களும் கேட்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை. சனி, ஞாயிறுகளில் ஆர்வமுள்ள குழந்தைகள் ஊனமுற்றவர்கள் ஆகியோருக்கும் கூட நடனப் பயிற்சி தருகிறோம்.