ஷாருக்கானின் rab ne bana di jodi ரிலீஸாகிவிட்டது. அமீர்கானின் கஜினி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது. ஆனால், ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பு அக்சய் குமாரின் சாந்தினி சவுக் டு சைனா படத்தின் மீது என்றால் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.
அக்சயின் முந்தைய படமான சிங் இஸ் கிங் பாலிவுட்டின் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது. 70 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு அக்சயை உயர்த்தியது, சிங் இஸ் கிங். அதற்குப் பிறகு வெளியாகும் படம், சாந்தினி சவுக் டு சைனா.
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் சமையல்காரராக இருக்கும் அக்சய் சைனா சென்று தற்காப்பு கலை கற்று வருவதுதான் கதை. எதிரிகள், பழி வாங்குதல் எல்லாம் படத்தில் உண்டு. இந்தியாவின் முதல் குங்ஃ;பூ படம் இதுதான் என அடித்து சொல்கிறார், அக்சய். மேலும் படத்தின் கதைக்கும் அவரது வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியை சேர்ந்தவர்தான் அக்சயும். படத்தில் வருவதுபோல் தற்காப்பு கலையை கற்க பாங்காக் சென்ற அனுபவமும் இவருக்கு உண்டு. சொந்த கதையை பிரதிபலிப்பதாலும், தனக்குப் பிடித்தமான ஆக்சன் படம் என்பதாலும் இன்வால்வாகி நடித்திருக்கிறாராம்.
படத்தின் நாயகி, தீபிகா படுகோன். ஓம் சாந்தி ஓம் படத்திற்குப் பிறகு தீபிகா நடித்திருக்கும் படம். இதில் இந்திய பெண்ணாகவும், சீனாவை சேர்ந்தவராகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். சீனா தீபிகாவுக்கு சண்டைக் காட்சிகள் எல்லாம் இருக்கிறது. இதற்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், கான்கள் பயப்படும் அளவுக்கு குமாரின் படத்தில் சரக்கு இருக்கிறது.