சுபாஷ் கய் கோரிக்கை - அமீர் கான் நிராகரிப்பு!

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (19:32 IST)
ஜல்லிக்கட்டில் கோயில் காளை வரும்போது அனைவரும் வழிவிட்டு விலக வேண்டும். மரியாதை... பாரம்பரிய வழக்கம். சினிமாவிலும் அது உண்டு. அமீர் கான், ஷாருக்கான் படங்கள் வெளியாகும்போது மற்ற ஸ்டார்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதில்லை. செய்வது தற்கொலைக்கு சமம்.

சுபாஷ் கய் எவ்வளவு பெரிய இயக்குனர். அவருக்கும் இதே பயம். சல்மான் கான், கத்ரினா கைஃப் நடிப்பில் இவர் இயக்கிய 'யுவ்ராஜ்' படத்தை டிசம்பர் 26 வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார்.

அதேநாளில் அமீர்கானின் கஜினியும் வெளியாகிறது. சுபாஷ் கய்க்கு யுவ்ராஜ் முக்கியமான படம். முந்தைய படம் கிஷ்னாவின் தோல்வியை இதில் சரி செய்தாக வேண்டும். கஜினி அதற்கு கரடியாக குறுக்கே நிற்கிறது.

யுவ்ராஜ் டிசம்பர் 26 வெளியாவதால் கஜினி ரிலீஸை தள்ளிவைக்கும்படி அமீர் கானிடம் கேட்டுப் பார்த்தார். அமீர் கான் உடன்படவில்லை. சரி, ரிஸ்க் எடுக்கலாம் என்றால் பிரமாண்டமாக முன் நிற்கிறது கிஷ்னா தோல்வி.

இறுதியில் யுவ்ராஜை நவம்பர் இறுதியில் வெளியிடுவது என தீர்மானித்துள்ளார் சுபாஷ் கய். சல்மான் கான் படத்திற்கே இந்த நிலை. கஜினி மன்னன் அல்ல, சக்கரவர்த்தி!

வெப்துனியாவைப் படிக்கவும்