அண்டர்கிரவுண்ட் உலகை அக்குவேறு ஆணி வேறாக அலசி மேய்ப்பவர் ராம்கோபால் வர்மா. 'D' என்ற பெயரில் தாவூத் இப்ராஹின் கதையை படமாக தயாரித்தார். ஆச்சரியம்... இதுவரை மும்பையின் எந்த தாதாவின் மிரட்டலுக்கும் ஆளானதில்லை வர்மா.
அதேநேரம் காதல் கல்யாணம் என சென்டிமெண்ட் படங்களில் குரூப் டான்ஸர்களுடன் ஆடும் நடிகர்கள் அடிக்கடி நிழல் உலகத்தின் மிரட்டலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
நிற்க. இதனால் வர்மாவின் படங்களுக்கோ, அவருக்கோ எதிர்ப்பில்லை என்று கருத வேண்டாம். வர்மாவின் ஒரே எதிரி மீடியா! இவரின் 'ஆக்' படத்தை பிரித்து பிரியாணி போட்டதில் மீடியாவுக்கே அதிக பங்கு. சர்க்கார் ராஜையும் சுமார் என்றுதான் விமர்சித்தன பத்திரிக்கைகள். வர்மாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவ்வப்போது சீண்ட இவை தவறுவதில்லை.
வர்மா மட்டும் சாதாரண ஆளா? மீடியாவுக்கு எதிரான போரை தொடங்கியிருக்கிறார். இவரின் அடுத்தப் படத்தில் மீடியாவின் உண்மை முகத்தை, அவை தனிமனிதர்களின் வாழ்க்கையில் அத்துமீறுவதை, அதனால் உருவாகும் மன உளைச்சலை அம்பலப்படுத்தப் போகிறாராம். வர்மாவின் செல்லுலாயிடு பவர் தெரிந்த மீடியாக்கள் இப்போதே அவருக்கு எதிராக அரண் அமைக்கத் தொடங்கிவிட்டன.