பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, கைகலப்பில் முடிந்துள்ளது.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயின், முன்னாள் காதலரான சல்மான்கான், நடிகை கத்ரீனா கைஃப்-ஐ தற்போது காதலித்து வருகிறார்.
தனது அருமைக் காதலியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி மும்பையில் சிறப்பு விருந்துக்கு சல்மான் ஏற்பாடு செய்தார்.
இதில் பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்று நடிகர் ஷாருக்கான், அவரது மனைவி கௌரிகான் ஆகியோர் கத்ரீனா பிறந்தநாள் விருந்தில் பங்கேற்றனர்.
ஆனால், விழாவுக்கு ஷாருக்கான் வந்தது முதலே அவரை சல்மான்கான் கேலி, கிண்டல் வார்த்தைகளால் சீண்டியதாகத் தெரிகிறது.
ஒருகட்டத்தில் ஷாருக்கான் நடத்தும் டிவி தொடர்கள் வெற்றி பெறவில்லை என சல்மான் கூறியதாகவும், அதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக சல்மான் வழங்கும் டிவி நிகழ்ச்சிகளை யாரும் பார்ப்பதில்லை என்றும் ஷாருக் கூறியதாகவும் விழாவில் பங்கேற்றவர்களை மேற்கொள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக நடிகர்கள் இருவர் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதால் விருந்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
விஷயம் கைமீறிப் போவதை உணர்ந்த கௌரிகான், கணவர் ஷாருக்-ஐ சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார் என்றும் கூறப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பொதுநிகழ்ச்சியில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.