கிழவர்களின் கில்லி ஆட்டம்!
சனி, 31 மே 2008 (17:56 IST)
சிக்ஸ் பேக் அப்ஸ் இளம் ஹீரோக்கள் எல்லாம் கிலியடித்துப் போயுள்ளனர், இரண்டு கிழவர்களின் ஆட்டத்தைப் பார்த்து.
இன்டியானா ஜோன்ஸ் சீரியஸின் நாயகன் ஹாரிஸன் போர்டுக்கு வயது அறுபதுக்கும் மேலே. கருத்து சொல்ற படமெல்லாம் கதைக்குதவாது, நமக்கு வெளுத்து வாங்குற ஆக்ஷன்தான் சரியென்று சிறிது காலம் முன்புதான் சொன்னார். சொன்னது போல செய்தும் காட்டியுள்ளார்.
இன்டியானா ஜோன்ஸ் சீரியஸின் நான்காம் பாகம், இன்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆஃப் தி கிறிஸ்டல் ஸ்கல் படம் வெளிவந்து சக்கை போடு போடுகிறது.
வெளியான முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிக வசூலாம். சினிமா சரித்திரத்தில் எப்போதாவதுதான் இப்படி நடக்குமாம். இப்போதைய நிலவரப்படி ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன் போன்ற அரை டஜன் மேன்களை வசூலில் சிதறடித்துள்ளாராம் ஜோன்ஸ்.
எல்லாம் சரி, இரு கிழவர்கள் என்று குறிப்பிட்டு விட்டு ஹாரிசன் போர்டை மட்டும் சொல்லியிருக்கிறீர்களே என்பதுதானே உங்கள் கேள்வி. இன்டியானா ஜோன்ஸின் பிரம்மா ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இப்போது கணக்கு சரியாக வருகிறதா!