அமெரிக்க இராணுவ சித்தரவதைக்கு பலியானவருக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் அஞ்சலி!
புதன், 27 பிப்ரவரி 2008 (20:17 IST)
அமெரிக்க இராணுவத்தால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இறுதியில் மரணமடைந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த வாடகை கார் ஒட்டுநரின் மரணத்தின் உண்மையை வெளிக்கொணர்ந்து ஆஸ்கார் விருதை அளித்ததுடன், பலியான அந்த ஒட்டுநருக்காக ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
செப்-11 என்றாலே அமெரிக்க அரசுக்கு பயங்கரவாதம்தான் நினைவுக்கு வரும். அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க புறப்பட்டது அமெரிக்கா. இதன் ஒரு பகுதியாக செப்-11 சம்பவத்துக்கு முக்கிய காரணமான பின்லேடன் ஆப்கன் மலைப்பகுதியில் ஒளிந்திருப்பதாக கருதியதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கு களம் இறக்கப்பட்டன.
இந்த படைகளிடம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ரம் விமானப்படைத் தளத்தில் வைத்து 22 வயது நிறைந்த அப்பாவியான ஒரு வாடகை கார் ஒட்டுநர் தில்வார் சிக்கியுள்ளார். அவரை விசாரணை என்ற பெயரில் அமெரிக்க இராணுவம் சிறையில் சங்கிலியால் பிணைத்து அடித்தும், மிதித்தும் தொடர்ந்து பல நாட்களாக சித்திரவதை செய்ததில் தில்வார் மரணமடைந்துள்ளார்.
இதனிடையே தில்வார் மீது எந்தவித குற்றச்சாட்டையும் உறுதி செய்ய இயலாத நிலையிலும், அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், தில்வார் ஒரு அப்பாவி என்ற முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்ந்து கொடுமையான சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தி வெளியில் கசிந்துவிட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு அலெக்ஸ் ஜிப்னி எடுத்த "டாக்ஸி டு த டார்க் சைடு" என்ற ஆவணப்படம் ஆஸ்கார் விருதைதட்டிச்சென்றுள்ளது.
இவர் ஏற்கெனவே எண்ரான், தி ஸ்மார்ட் கைஸ் இன் தி ரூம் ஆகிய தலைச்சிறந்த ஆவணப்படங்களை எடுத்தவர். தனது இந்தப் படத்தை அமெரிக்க இராணுவத்தின் சித்திரவதைக்கு ஆளாகி மரணமடைந்த தில்வார் மற்றும் தனது தந்தையாருக்கு அர்ப்பணிப்பதாக அலெக்ஸ்ஜிப்னி தெரிவித்துள்ளார்.