ஆஸ்கர் விருது பெற்ற 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்டு மென்' படம் ஆறு கோடியே 41 லட்சத்து 62 ஆயிரம் அமெரிக்க டாலரை அள்ளியுள்ளது.
இந்தப் படத்தில் டோமி லீ ஜோன்ஸ், ஜேவியர் பார்டெம், ஜோஸ் ப்ரோலின், கெல்லி மேக்டொனால்டு, வுட்டி ஹர்ரெல்சன், ஸ்டீபன் ரூட் உட்பட பலர் நடித்துள்ளனர். புலிட்சர் விருது பெற்ற ஆசிரியர் கோர்மக் மெக்கர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் செதுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு, திரைக்கதை, இயக்கம் ஆகிய பணியில் கொஞ்சமும் குறை சொல்ல முடியாதபடி ஜோய்ஸ் கோன், ஈத்தன் கோன் இணைந்து கச்சிதமாக படமாக்கியுள்ளனர். டெக்சாஸ் மாகாண எல்லையில் ஒரு நகரப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செரிப் பெல் என்பவரிடம் உள்ள இரண்டு மில்லியன் டாலர் லிலிவேலின் மோஸ் என்பவரிடம் கிடைத்து விடுகிறது. அதை பாதுக்காக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும் மோஸ் தொடர்ந்து பல கொலைகளை செய்கிறார்.
படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை. படத்தின் காட்சிகளை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதபடி, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி திரையிடப்பட்ட இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மதிப்பு ஆறு கோடியே 41 லட்சத்து 62 ஆயிரம் டாலர். இந்த படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த எடுத்தாளப்பட்ட திரைக்கதை என நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது. இந்த ஆண்டில் அதிக ஆஸ்கர் விருது பெற்ற படமும் இதுவே.