கோவாவில் சர்வதேச திரைப்பட விழா

வெள்ளி, 23 நவம்பர் 2007 (17:00 IST)
38-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்குகிறது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் பங்கேற்கிறார். இத்திரைப்பட தொடக்க விழாவில் மத்திய தகவல், ஒளிபரப்பு- நாடாளுமன்ற விவகாரஅமைச்சருமான பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, கோவா மாநில முதல்வர் திக்கம்பர் காமத், திரைப்பட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவில் தென்னிந்திய திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரம் நடிகை பிரியாமணி குத்துவிளக்கு ஏற்றுகிறார். 2007-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விருது பெற்ற ரோமானிய திரைப்படமான தி பால்மே டி - இவ்விழாவில் முதல் படமாக திரையிடப் படுகிறது.

சீனா, நெதர்லாந்து, போலந்து, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இருந்தும் ஏராளமான திரைப்படத் துறையினர் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கின்றனர். போர்சுகல்-ஸ்பெயின் நாட்டின் திரைப்படமான பேடோஸ் இவ்விழாவின் நிறைவு திரைப்படமாக கடைசி நாளன்று திரையிடப் படுகிறது.

சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்காக 76 திரைப்படங்கள் 42 நாடுகளில் இருந்து இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளக்கான சிறப்புப் பிரிவில் 13 நாடுகளில் இருந்து 14 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுத் தலைவராக 60 படங்களூக்கும் மேல் தயாரித்து கேன்ஸ், பெர்லீன், வெனீஸ், செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசுகளைக் குவித்த ஹங்கேரி திரைப்பட இயக்குனர் மார்த்தா மாசராஸ் தலைமையில் நடுவர் குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவில் துருக்கி நடிகை மெல்டன் கம்புல், மலையாள திரைப்பட இயக்குநர் ஷாஜி என் கரூண்,அர்ஜெண்டினாவின் பாப்லோசீசர், நியூசிலாந்தின் ராபர்ட் சர்க்கீஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நாடு சுதந்திரமடைந்ததை நினைவு கூறும் வகையில் 7 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படவுள்ளன. இவ்விழாவுக்காக இதுவரை 3500 பேர் பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்