ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அம்மாவின் வாழ்த்துக் கடிதம்

வியாழன், 13 மார்ச் 2014 (12:49 IST)
ஆயிரத்தில் ஒருவன் படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் டிஜிட்டலில் மேம்படுத்தி நாளை தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிடுகிறார். எம்ஜிஆர் படங்கள் அவ்வப்போது இப்படி அதிக அளவில் தமிழகத்தில் வெளியாவதுண்டு. ரசிகர்களைத் தவிர அரசியல்வாதிகள் யாரும் அது குறித்து இதுவரை பேசியதில்லை. அதிமுக கட்சி போஸ்டர்களில் ஸடாம்ப் அளவுக்குதான் எம்ஜிஆருக்கு இடம். தேர்தல் நேரமில்லையா. முதல்வர் ஜெயலலிதாவே சொக்கலிங்கத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். பிறவிப்பயனை அடைந்துவிட்டேன் என்று சொக்கலிங்கத்தை ஆனந்த கூத்தாட வைத்த அந்த கடிதம் கீழே.
FILE

திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

எனவேதான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர்.
FILE

புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை வீரார்களாக மாற்றிக் கொள்கின்ற சம்பவங்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேர்மையையும் நிலைநாட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்.

அந்த மாபெரும் வெற்றிப் படத்தில் நான் முதன் முதலாக புரட்சித் தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட போது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
FILE

இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன்பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும்.

ஆயிரத்தில் ஒருவன் வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.201 முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்தப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்