முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவொரு முக்கியமான நிகழ்வு.
ஈகோ யுத்தத்தில் இளையராஜாவும், வைரமுத்தும் பிரிந்த பிறகு ராஜா குடும்பமும் பேரரசு குடும்பமும் ஒட்டாத தீவுகளாயின. மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் ஒப்புக்கு தலைகாட்டினாலும் தொழில் ரீதியாக இரு குடும்பமும் - முக்கியமாக வைரமுத்து ராஜா குடும்பத்திலிருந்து விலகியே இருந்தார். அல்லது விலக்கி வைக்கப்பட்டிருந்தார். இந்த விரிசலை ஒட்ட வைத்திருக்கிறார் சீனு ராமசாமி.
FILE
சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை இரண்டுக்கும் பாடல்கள் எழுதியவர் வைரமுத்து. அத்துடன் படத்தின் விளம்பர தூதர் லெவலுக்கு படத்தை மேடைகளில் பிரமோட் செய்யவும் செய்தார். சீனு ராமசாமி தனது புதிய படம் இடம் பொருள் ஏவலுக்கு இசையமைப்பாளராக யுவனை ஒப்பந்தம் செய்த போது உடனடியாக எழுந்த கேள்வி, யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுவாரா? இல்லை வைரமுத்துவை யுவன் அனுமதிப்பாரா?
இந்த கேள்விகளை புறந்தள்ளி இருவருமாக புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்கள். யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். விஷ்ணு, விஜய் சேதுபதி நடிக்கும் இடம் பொருள் ஏவலை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.
யுவன் - வைரமுத்து என்ற கூட்டணி எதிர்காலத்தில் இளையராஜா - வைரமுத்து என்று பரிணமித்தால்...? கனவுதானே... கண்டு வைப்போம்.