காதல் இளவரசன் - ஆர்யாவுக்கு கமல் தந்த பட்டம்

செவ்வாய், 7 ஜனவரி 2014 (17:13 IST)
கமலின் வாயிலிருந்து ஒரு பாராட்டை பிடுங்கி எடுப்பதும், சிங்கத்துக்கு பல் விளக்கி விடுவதும் ஏறக்குறைய ஒன்றுதான். அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டக் கூடியவரல்ல கமல். அப்படிப்பட்டவர் சமீபமாக இளம் நடிகர்களையும், இயக்குனர்களையும் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து தள்ளுகிறார்.
FILE

கல்யாண சமையல் சாதம் படத்தையும், அதில் பணியாற்றியவர்களையும் கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்திருக்கிறார் உலக நாயகன். பிராமின் கலாச்சாரத்தை காட்டிய படமில்லையா அதுதான் இந்த தாரளம் என்று போகிற போக்கில் கொளுத்தி போடுகிறவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் ராஜா ராணி படம்.

இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்தது கமல்தான். படம் வெளியான பிறகு மொத்த டீமும் கமலை தேடிப்போய் பாராட்டை பொட்டலமாக கட்டி வந்தார்கள். இப்போது படம் நூறு நாளை எட்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் இதுவொரு சாதனை.

FILE

படக்குழுவினரை இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பாராட்டிய கமல், காதல் இளவரசன் இனிமேல் ஆர்யாதான் என்றார். பல வருடங்களாக இந்த பட்டத்தை (காதல் இளவரசன்) நான் வைத்திருக்கிறேன். அதனை கைமாற்றிவிட இதுதான் ச‌ரியான நேரம். ஆர்யாதான் அதற்கு ச‌ரியான ஆள் என்று தனது காதல் இளவரசன் கி‌‌ரீடத்தை மகிழ்ச்சியோடு ஆர்யாவுக்கு மாட்டிவிட்டார்.

மல‌ரில் தேன் குடித்துக் கொண்டிருந்த ஆர்யாவுக்கு மலைத்தேனும் கிடைத்திருக்கிறது. ஜமாய்ங்க பாஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்