ர‌ஜினி, கமல் - முதல்வரை மீண்டும் வாழ்த்துகிறார்கள்

வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (16:50 IST)
முதல்வருக்கு நடக்கும் பாராட்டு விழாக்களின் நிரந்தர சிறப்பு விருந்தினர்களாகிவிட்டனர் ர‌ஜினியும், கமலும். முதல்வருக்கு இருபுறமும் அமர்ந்து அவருக்கு கிடைக்கும் பாராட்டுகளை கேட்டு இறுதியில் முதல்வரை பாராட்டுவது இவர்களின் முக்கிய வேலை.

தமிழில் புழக்கத்தில் உள்ள அனைத்து பாராட்டு மொழிகளையும் இருவரும் பிரயோகித்துவிட்டனர். இருந்தாலும் இருவ‌ரின் கற்பனை‌த் திறனை சோதிக்கும் விதமாக முதல்வருக்கான பாராட்டு விழாக்கள் வாரத்துக்கு மூன்று என்ற கணக்கில் நடந்து வருகின்றன.

கடந்த 6ஆம் தேதி ஆறு மணி நேரத்துக்கும் அதிகமாக திரையுலகினர் முதல்வரை புகழ்ந்தனர். இறுதியாக ர‌ஜினியும், கமலும் முதல்வரை பாராட்டி‌ப் பேசினர். கமல் வழக்கம்போல இந்த நிகழ்ச்சியையும் தனது பேரக் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வதாக உறுதி அளித்தார்.

10ஆம் தேதி முதல்வருக்கு திருக்குறள் பேரொளி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அச்சுப்பிழையா தெ‌ரியவில்லை, இந்த விழாவுக்கான அழைப்பிதழில் ர‌ஜினி, கமல் இருவ‌ரின் பெயர்களும் இல்லை. அதனால் என்ன... வரும் 14ஆம் தேதி முதல்வருக்கு சங்கத் தமிழ்ப் பேரவை சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா நடக்கிறது.

இந்த சங்கத்தின் தலைவராக அமைச்சர் துரைமுருகனும், செயலாளராக ஜெகத்ரட்சகனும் உள்ளனர். பாராட்டு விழாவில் முதல்வரை வாழ்த்திப் பேசுகிறவர்கள் ர‌ஜினி, கமல் மற்றும் மம்முட்டி.

இந்த விழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் தனது பேரக் குழந்தைகளிடம் சொல்வேன் என்று கமல் உறுதி அளிக்கலாம். பிறக்காத அந்தப் பேரக் குழந்தைகளின் மீது கமலுக்கு அப்படி என்ன வன்மமோ?

வெப்துனியாவைப் படிக்கவும்