விஜய்யின் சின்னத்திரை ஆசை

வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (14:12 IST)
பெ‌ரிய திரையில் வெற்றிகரமாக வேட்டையாடிக் கொண்டிருக்கும் விஜய்க்கு சின்னத்திரை மீது ஆசையா? யாருக்கும் ஆச்ச‌ரியமாக‌த்தான் இருக்கும். ஆனால், ஆசை அடிமனதில் கனன்று கொண்டிருக்கிறதே.

பி‌ரிண்ட் மீடியாவும், தொலைக்காட்சியும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்றாகிவிட்டது. அதனால்தான் அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு சேனலையும், தினச‌ரி பத்தி‌ரிகையையும் தங்கள்வசம் வைத்துள்ளன.

சன் பிக்சர்ஸ் படங்களை வாங்கி விநியோகிக்க தொடங்கிய பிறகு, அரசியல் கட்சிகளுக்கு அத்தியாவசியமாக இருந்த தினச‌ரியும், தொலைக்காட்சியும் சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகவும் தேவையானதாகிவிட்டது.

சும்மாவா...? தீ, படிக்காதவன், திண்டுக்கல் சாரதி, மாசிலாமணி போன்ற பிலோ ஆவரே‌ஜ் படங்கள்கூட பாக்ஸ் ஆஃபிஸில் கலக்குகின்றன. இதற்கு ஒரே காரணம், சன் குழுமத்தின் திகட்டும் விளம்பரங்கள். விஜய்யே தனது படத்தின் வெற்றிக்கு சன் பிக்சர்ஸை நம்பியிருக்கிறார் என்பதுதான் இன்றைய நிலைமை.

விரைவில் அரசியலில் நுழையும் எண்ணம் இருப்பதால் தனக்கென்று தனி சானல் இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் நினைக்கிறாராம். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பெய‌ரில் சேனல் துவங்க அனுமதி வாங்கும் வேலைகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. சேனல் தொடங்கினால் அரசியல் பிரச்சாரமும் செய்யலாம், படத்தையும் புரமோட் பண்ணலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

விஜய்யின் சின்னத்திரை ஆசை என்றதும், அவர் சீ‌ரியலில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக யாரேனும் முந்தி‌ரிக் கொட்டைத்தனமாக கற்பனை செய்திருந்தால், நாம் அதற்கு பொறுப்பல்ல.

வெப்துனியாவைப் படிக்கவும்