லாரன்சுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது

வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (16:18 IST)
சுதந்திர தினத்தன்று தமிழக அரசு வழங்கும் சிறந்த சமூக சேவைக்கான விருதுக்கு நடிகர் லாரன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏழை எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் அவர் செய்துவரும் தொண்டிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

குரூப் டான்சராக வாழ்க்கையை தொடங்கிய லாரன்ஸ் இன்று பிரபல நடன இயக்குனர், நடிகர், வெற்றிகரமான இயக்குனர். இந்த மூன்றுடன் பணமும், புகழும் வந்தடைந்த பின்பும் தனது நல்ல மனதை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. தனது சொந்த வீட்டையே அனாதை குழந்தைகளுக்காக விட்டுத் தந்தார். அவரது ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் 60 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உணவு, உடை அனைத்தும் லாரன்சின் பொறுப்பு.

ஊனமுற்றவர்களை வைத்து நாட்டிய நிகழ்ச்சி நடத்துவது, அவர்கள் தங்க இலவசமாக இட வசதி செய்து கொடுத்தது, நாற்பது குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது என லாரன்சின் மனிதாபிமான செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சிலரைப் போல் பத்து ரூபாய்க்கு பென்சில் கொடுத்துவிட்டு, அரசியலில் குதிப்பேன், அதிசயம் பு‌ரிவேன் என்றெல்லாம் உளறாமல் இருப்பது லாரன்சின் தனிக் குணம்.

எப்படிப் பார்த்தாலும் சமூக சேவை விருதுக்கு நூறு சதம் பொருத்தமானவர் லாரன்ஸ். மனம் திறந்து பாராட்டுவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்